ஆசிய கண்டத்தைச் சேர்ந்த 6 அணிகள் பங்குபெற்றுள்ள 16வது ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த ஆகஸ்ட் 30-ஆம் தேதி தொடங்கியது. இந்த நிலையில், பெரும் எதிர்பார்ப்புக்கிடையே இந்தியா-பாகிஸ்தான் இடையிலான லீக் போட்டி, இன்று (செப்டம்பர் 2) தொடங்கியது. இந்தப் போட்டி இலங்கை கண்டி மாவட்டத்தில் உள்ள பல்லகெலே மைதானத்தில் நடைபெற்றது.
இந்தப் போட்டியில் டாஸ் ஜெயித்த இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, பேட்டிங்கைத் தேர்ந்தெடுத்தார். அதன்படி, தொடக்க பேட்டர்கள் ஏமாற்றத்தைத் தந்தபோதும் விக்கெட் கீப்பர் இஷான் கிஷனும், ஹர்திக் பாண்டியாவும் இணைந்துநின்று அணியைச் சரிவிலிருந்து மீட்டனர். அவர்கள் இருவரும் பொறுமையாக ஆடியதுடன், ஏதுவான பந்துகளை பவுண்டரி எல்லைக்கும் விரட்டினர். அவர்களின் பொறுப்பான ஆட்டம் இந்திய அணி 200 ரன்களைக் கடக்க உதவியது.
இறுதியில் இஷான் கிஷன் 82 ரன்களிலும், ஹர்திக் பாண்டியா 87 ரன்களிலும் விக்கெட்டைப் பறிகொடுத்தனர். தொடர்ந்து ரவீந்திர ஜடேஜா (14 ரன்கள்), பும்ரா (16 ரன்கள்) எடுத்ததன் மூலம் இந்திய அணி 250 ரன்களைக் கடந்தது. முடிவில் 48.5 ஓவர்களில் இந்திய அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 266 ரன்கள் எடுத்தது.
பாகிஸ்தான் தரப்பில் சாஹீன் அப்ரிடி 4 விக்கெட்களையும், ஹாரீஸ் ராஃப் மற்றும் நசீம் ஷா ஆகியோர் தலா 3 விக்கெட்களையும் வீழ்த்தினர். பாகிஸ்தானின் மிரட்டலான பந்துவீச்சு மற்றும் இடையிடையே பெய்த மழையாலும், இந்திய அணி அதிக ரன்களை எடுக்க முடியாமல் தடுமாறியதுடன், தொடர்ந்து விக்கெட்களையும் இழந்தபடி இருந்தது குறிப்பிடத்தக்கது.
பின்னர் 267 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் விளையாட இருந்த பாகிஸ்தானுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. 2வது இன்னிங்ஸை விளையாட முடியாமல் தொடர்ந்து மழை பெய்ததால் இரவு 10 மணியளவில் போட்டி ரத்தானதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, இரண்டு அணிகளுக்கு தலா 1 புள்ளி வழங்கப்பட்டது.