கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நாள்தோறும் ரசிகர்களை கட்டிவைத்த உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இன்னும் 3 போட்டிகள் மட்டுமே உள்ள நிலையில் முதலாவது அரையிறுதியில் இந்தியா நியூஸிலாந்து அணிகள் இன்று மோதுகின்றன.
மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் போட்டிக்காக இந்திய வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். லீக் சுற்றில் விளையாடிய 9 போட்டிகளிலும் வெற்றி பெற்று வலுவான நிலையில் உள்ள இந்தியா, இன்றைய போட்டியில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேற முனைப்பு காட்டி வருகிறது.
அதேநேரத்தில் லீக் சுற்றில் தொடக்கம் முதல் சிறப்பாக விளையாடிய நியூஸிலாந்து, தொடர்ந்து 4 தோல்விகளை சந்தித்து கடைசி நேரத்தில் முந்தியடித்து அரையிறுதிக்குள் நுழைந்துள்ளது. இருப்பினும் பலமான அணியாக உள்ள நியூஸிலாந்தும் இறுதிப்போட்டிக்கு முன்னேற தன்னால் முடிந்த அனைத்து திறமையும் வெளிப்படுத்தும். இதன் காரணமாக இன்றைய அரையிறுதிப் போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்தில் உள்ளனர்.
இப்போட்டி இந்திய நேரப்படி பிற்பகல் 2 மணிக்கு தொடங்குகிறது. கொல்கத்தாவில் நாளை நடைபெறும் 2 ஆவது அரையிறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா, தென்னாப்ரிக்கா அணிகள் பலப்பரிட்சை நடத்துகின்றன.