ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 150 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆகியுள்ளது.
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் தொடரில் விளையாடுகிறது. இந்த தொடரில் இந்திய அணி 4 போட்டிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் நேரடியாக பங்கேற்கும் வாய்ப்பை பெறும்.
கடந்த 10 ஆண்டுகளில் பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரில் இந்திய அணியே ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில், தற்போதைய தொடரில் ஆஸ்திரேலிய அணி தீவிர முயற்சியில் ஈடுபடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், இரண்டு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது இன்று பெர்த் மைதானத்தில் காலை 7.50 மணி அளவில் தொடங்கியது.
இந்த முதல் போட்டியில், இந்திய அணியில் கேப்டனான ரோகித் சர்மா சொந்த காரணங்களுக்காக விலகியுள்ள நிலையில், தற்போதைய கேப்டனாக பும்ரா டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்ய ஆட்டம் தொடங்கியது.
தொடக்க வீரர்களாக யஷஸ்வி ஜெய்ஸ்வால், கே.எல் ராகுல் களமிறக்கப்பட்டனர். ஆனால், மூன்றாவது ஓவரிலேயே ஜெய்ஸ்வால் டக் அவுட் ஆக, ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சாளர்களான ஸ்டார்க் மற்றும் கம்மின்ஸ் வேகத்தை தாக்கு பிடிக்க முடியாமல் தடுமாறியது இந்திய அணி. இதில் தேவ்தத் படிக்கல், ஹேசல்வுட்டின் சரியான பந்துவீச்சால் 23 பந்துகளில் டக் அவுட்டாகி ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்தார்.
இதனைத் தொடர்ந்து களமிறங்கிய விராட் கோலியாவது ரன் மழை பொழிவார் என்று ரசிகர்கள் எதிர்ப்பார்த்திருந்தனர். ஆனால் அவரும் வெறும் 5 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார்.
நீண்ட நேரம் ராகுல் மட்டுமே களத்தில் போராட.. இறுதியில் அவரும் 26 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். அந்த அவுட்டும் சர்ச்சையானது.
இதையடுத்து ரிஷப் பண்ட் ஒரு முனையில் நிற்க, அதிகம் எதிர்பார்க்கப்பட்ட துருவ் ஜுரெல் 11 ரன்கள் எடுத்திருந்த போது மிட்சல் மார்ஷ் பந்தில் ஆட்டமிழந்தார். இதனைத் தொடர்ந்து வாஷிங்டன் சுந்தரும் 4 ரன்களில் ஆட்டமிழக்க, இந்திய அணி 73 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
பின்னர் 7வது விக்கெட்டுக்கு ரிஷப் பண்ட் - நிதீஷ்குமார் ரெட்டி இருவரும் இணைந்தனர்.
இருவரும் விரைவாக ரன்களை சேர்க்க, இந்திய அணியின் ஸ்கோர் 100 ஐ கடந்தது. ஆனால், ஆஸ்திரேலிய அணியின் அசத்தலான பந்துவீச்சால், இந்திய அணி 49.4 ஓவர்களில் 150 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
அதிகபட்சமாக நிதீஷ் ரெட்டி 41 ரன்களும், ரிஷப் பந்த 37 ரன்களும் , கே.எல்.ராகுல் 26 ரன்களையும் எடுத்துள்ளனர். ஆஸ்திரேலியா தரப்பில் அதிகபட்சமாக ஜோஷ் ஹேசில்வுட் 4 விக்கெட்டுகளும், ஸ்டார்க், கம்மின்ஸ், மார்ஷ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.