நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் சென்றிருக்கும் ஆஸ்திரேலியா அணி 3 டி20 போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடி வருகிறது. 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை ஆஸ்திரேலிய அணி கைப்பற்றிய நிலையில், டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது.
வெலிங்டன்னில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலிய அணி நியூசிலாந்து அணியை வீழ்த்தியதை அடுத்து, ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசைப் பட்டியலில் இந்தியா முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.
முதல் இன்னிங்ஸில் 383 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்த ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணியை 179 ரன்களுக்கு முதல் இன்னிங்ஸில் ஆல் அவுட் செய்தது. இரண்டாவது இன்னிங்ஸில் 164 ரன்களை மட்டுமே எடுத்திருந்தாலும், நியூசிலாந்து அணியை 196 ரன்களுக்குள் சுருட்டி, 172 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றியை ஆஸ்திரேலியா பெற்றுள்ளது. ஆட்டநாயகனாக கேமரூன் க்ரீன் தேர்வு செய்யப்பட்டார். அடுத்த டெஸ்ட் போட்டி மார்ச் 8 ஆம் தேதி க்றிஸ்சர்ச்சில் நடைபெற உள்ளது.
இந்த தோல்வியின் மூலம் நியூசிலாந்து அணி புள்ளிகளின் சதவீதப் பட்டியலில் (percentage of points) 75ல் இருந்து 60 புள்ளிகளாக சரிந்தது. இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலிய அணி தனது புள்ளிகளை அதிகப்படுத்தியுள்ளது. 55 சதவீதப் புள்ளிகளுடன் இருந்த அந்த அணி, இந்த வெற்றியுடன் 59.09 சதவீதப் புள்ளிகளை பெற்றுள்ளது.
புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ள இந்திய அணி இதுவரை 8 டெஸ்ட் போட்டிகளில், 5ல் வெற்றி, 2 தோல்விகள், ஒரு ட்ரா என மொத்தமாக 64.58 புள்ளிகளைப் பெற்றுள்ளது. இங்கிலாந்துக்கு எதிரான ஐந்தாவது போட்டியையும் இந்திய அணி வெல்லும்பட்சத்தில் புள்ளிகளை மேலும் அதிகப்படுத்திக் கொண்டு முதலிடத்தை தக்கவைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா இங்கிலாந்து இடையேயான இறுதி டெஸ்ட் போட்டி மார்ச் 7 ஆம் தேதி தர்மசாலாவில் நடைபெற உள்ளது.
டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசைப் பட்டியலில் இந்திய அணி முதலிடத்தில் உள்ள நிலையில், நியூசிலாந்து அணி 60% புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. ஆஸ்திரேலிய அணி 59.09% புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான புள்ளிப் பட்டியல், ஒவ்வொரு அணியும் வெற்றிபெறுவதை வைத்து, வெற்றி சதவிகிதங்கள் அடிப்படையில் கணக்கிடப்பட்டு வருகிறது. இதில் புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறும். இதுவரை இரண்டு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர்கள் நடைபெற்றுள்ள நிலையில், முதல் தொடரில் நியூசிலாந்து அணி வென்றது. இரண்டாவது தொடரில் ஆஸ்திரேலிய அணி வென்றது. இரு தொடரிலும் இந்திய அணி இறுதிப் போட்டிவரை முன்னேறி வெற்றியை தவற விட்டது.