இந்திய அணியின் தொடக்க வீரர் ஷுப்மன் கில் ஐசிசி ஒருநாள் பேட்டர்கள் தரவரிசை பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார். தற்போது நடைபெற்று வரும் உலகக்கோப்பை தொடரில் 6 போட்டிகளில் விளையாடியுள்ள ஷுப்மன் கில் 219 ரன்கள் சேர்த்துள்ளார். இதன்மூலம் 830 புள்ளிகள் பெற்று ஷுப்மன் கில் முதலிடம் பிடித்துள்ளார்.
மேலும், ஐசிசி ஒருநாள் போட்டிகளுக்கான பேட்டர்கள் தரவரிசையில் முதலிடம் பிடித்த 4வது இந்திய வீரர் என்ற சாதனையையும் ஷுப்மன் கில் படைத்துள்ளார். இதுவரை இந்திய வீரர்களில் சச்சின் டெண்டுல்கர், எம்.எஸ்.தோனி, விராட் கோலி ஆகியோர் முதலிடத்தில் இருந்துள்ளனர். இவர்களுக்கு பின் ஷுப்மன் கில் அந்த இடத்திற்கு வந்துள்ளார்.
சச்சின் டெண்டுல்கர் ஒருநாள் தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்த முதல் இந்திய பேட்டர் ஆவார். இதையடுத்து, இரண்டாவது பேட்டராக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி 2004 - 2005 காலக்கட்டத்தில் இருந்தார். இவர்களுக்குப் பிறகு, விராட் கோலி ஒருநாள் தரவரிசையில் நீண்டகாலமாக முதல் இடத்தைப் பிடித்திருந்தார்.
தற்போது அந்த வரிசையில் ஷுப்மன் கில் இணைந்துள்ளார். மேலும், ஐசிசி ஒருநாள் தரவரிசையில் உலகின் நம்பர் 1 இடத்தைப் பிடித்த இந்தியாவின் இளம்வீரர் என்ற சச்சின் டெண்டுல்கரின் சாதனையையும் முறியடித்தார். முன்னதாக இந்த சாதனையை சச்சின் தனது 25வது வயதில் படைத்த நிலையில், இதை ஷுப்மன் கில் தனது 24வது வயதிலேயே எட்டியுள்ளார்.
இதையும் படிக்க: பீகார்: 65% இடஒதுக்கீட்டு மசோதா ஒருமனதாக சட்டப்பேரவையில் நிறைவேற்றம்
2004 - 2005ஆம் ஆண்டு சர்வதேச அரங்கில் சிறந்த விக்கெட் கீப்பர் மற்றும் பேட்டர் ஜொலித்த தோனி, வெறும் 38 ஒருநாள் இன்னிங்ஸில் ஐசிசி தரவரிசையில் முதலிடத்தை எட்டினார். ஆனால், ஷுப்மன் கில் அதை, 41 ஒருநாள் இன்னிங்ஸ்களில் அடைந்துள்ளார்.
கடந்த ஆண்டு தொடக்கம் முதல் அதிக ரன்களைக் குவித்து வரும் ஷுப்மன் கில், கடந்த இரண்டு ஆண்டுகளில், 38 இன்னிங்ஸ்களில் 2,087 ரன்களையும், ஒட்டுமொத்தமாக 41 போட்டிகளில் 2,136 ரன்களையும் எடுத்துள்ளார். மேலும், 102.2 என்ற ஸ்ட்ரைக்ரேட்டுடன் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் 2,000 ரன்களைக் கடந்துள்ளார்.