இந்தியாவில் நடைபெற்று வரும் ஆடவர் உலகக்கோப்பை கிரிக்கெட் திருவிழா, அடுத்தகட்டத்தை எட்டியுள்ளது. விறுவிறுப்பாக நடைபெற்று வரும் தொடரில் இந்தியா, முதல் அணியாக அரையிறுதிக்குள் நுழைந்துள்ளது. தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் ஆகிய அணிகள் அரையிறுதிக்குள் நுழைவதற்காக போட்டிபோட்டு வருகின்றன. அந்த வகையில் முதல் 4 ஆட்டங்களில் வெற்றிபெற்று, பின்னர் தொடர் தோல்வியைத் தழுவிய நியூசிலாந்து அணியும், 7 ஆட்டங்களில் ஆடி 3-இல் வெற்றியும், 4 தோல்விகளையும் கண்ட பாகிஸ்தான் அணியும் இன்று கட்டாயம் வெற்றிபெற வேண்டும் என்ற நெருக்கடியில் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் பலப்பரீட்சை நடத்தின.
இந்தப் போட்டியில் முதலில் டாஸ் ஜெயித்த பாகிஸ்தான் அணி, நியூசிலாந்தை பேட்டிங் செய்ய பணித்தது. அதன்படி, தொடக்க வீரராக டிவோன் கான்வே மற்றும் இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட ரச்சின் ரவீந்திரா ஆகியோர் களமிறங்கினர். இதில் கான்வே 35 ரன்களில் வெளியேற இரண்டாவது விக்கெட்டுக்கு வில்லியம்சன்னுடன் ரச்சின் ரவீந்திரா இணைந்து அணியை சரிவில் இருந்து காப்பாற்றினார். ரச்சின் ரவீந்திரா பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி பாகிஸ்தான் அணிக்கு கடும் நெருக்கடியை கொடுத்தார். ஒருபக்கம் கேன் வில்லியம்சன் 79 பந்துகளில் 95 ரன்கள் எடுத்து பெவிலியின் திரும்ப, ரவீந்திரா 94 பந்துகளில் 15 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 108 ரன்கள் எடுத்து வெளியேறினார்.
இதன்மூலம் நடப்பு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் மூன்று சதம் அடித்த வீரர் என்ற பெருமையை அவர் படைத்தார். தவிர, 48 ஆண்டுக்கால உலகக்கோப்பை கிரிக்கெட் வரலாற்றில், முதல் உலகக்கோப்பையிலேயே மூன்று சதம் அடித்த ஒரே வீரர் என்ற பெருமையை ரச்சின் ரவீந்திரா படைத்தார். இதேபோன்று 24 வயதுக்குள் உலகக்கோப்பை தொடரில் அதிக சதம் அடித்த சச்சின் டெண்டுல்கரின் சாதனையையும் ரச்சின் ரவீந்திரா முறியடித்தார். அவர்களுக்குப் பின் கடைசிக்கட்டத்தில் களமிறங்கிய மிட்செல், சாப்மேன், பிலிப்ஸ், சாண்ட்னர் ஆகியோரும் சிறப்பான இரட்டை இலக்க ரன்களை அடிக்க, நியூசிலாந்து அணி 400 ரன்களைக் கடந்தது. இறுதியில் அவ்வணி 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 401 ரன்கள் குவித்தது.
இதன்மூலமாக உலகக்கோப்பையில் 400 ரன்களுக்கு மேல் எடுத்த அணிகளின் பட்டியலில் நியூசிலாந்து இணைந்தது. இதில், தென்னாப்பிரிக்கா 3 முறையும் இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகள் தலா ஒருமுறையும் 400 ரன்களுக்கு மேல் எடுத்துள்ளன. மேலும், பாகிஸ்தான் அணிக்கு எதிராக ஒருநாள் மற்றும் உலகக்கோப்பை போட்டியிலும் நியூசிலாந்து அதிக ரன்களை எடுத்துள்ளது. தவிர, ஒருநாள் போட்டியில் அதிக ரன்கள் எடுத்துள்ள பட்டியலிலும் நியூசிலாந்து அணி 2வது இடம்பிடித்தது. இந்தப் போட்டியில் பாகிஸ்தான் பவுலர்களான அப்ரிடி 10 ஓவர்கள் வீசி 90 ரன்களையும், ராஃப் 10 ஓவர்கள் வீசி 85 ரன்களையும் வாரி வழங்கியிருந்தனர். இதன்மூலம் உலகக்கோப்பை வரலாற்றிலேயே அதிக ரன்களை விட்டுக்கொடுத்த பாகிஸ்தான் பவுலர்கள் என்ற மோசமான சாதனையை இருவரும் படைத்தனர்.
பின்னர் கடினமான இலக்கை நோக்கிய பாகிஸ்தானும், நியூசிலாந்துக்கு எதிராக தொடக்கம் முதலே வாணவேடிக்கை நிகழ்த்தியது. அந்த அணியின் தொடக்க பேட்டர் அப்துல்லா 4 ரன்களில் வெளியேறினாலும், மற்றொரு தொடக்க பேட்டர் ஃபகர் ஜமான், கேப்டன் பாபர் அசாமுடன் இணைந்து நியூசிலாந்து பந்துவீச்சைச் சிதறடித்தார். அவர், 39 பந்துகளில் அரைசதம் கண்ட நிலையில், அடுத்து 63 பந்துகளில் சதம் கண்டு அசத்தினார்.
இதன்மூலம் பாகிஸ்தான் அணிக்காக உலகக்கோப்பையில் அதிவேகமாக சதமடித்த வீரர்களின் பட்டியலிலும் அவர் இடம்பிடித்தார். பாபர் அசாமும், ஃபகர் ஜமானும் இணைந்து பொறுப்புணர்ந்து விளையாடிக் கொண்டிருந்தபோது மழை குறுக்கிட்டதால், ஆட்டம் பாதியில் நிறுத்தப்பட்டது. அப்போது பாகிஸ்தான் அணி, 21.3 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 160 ரன்கள் எடுத்திருந்தது. பின்னர் மழையால் ஏற்பட்ட தாமதம் காரணமாக, பாகிஸ்தான் அணி, 41 ஓவர்களில் 342 ரன்கள் எடுக்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டது.
இதையடுத்து, மழைக்குப் பிறகு அந்த இலக்கைக் கருத்தில் கொண்டு பாபர் அசாமும், ஃபகர் ஜமானும் ஆட்டத்தில் வேகம் காட்டினர். அணியின் ரன்கள் 200 ஆக இருந்தபோது மீண்டும் மழை பிடித்தது. அப்போது அணியின் வெற்றிக்கு 93 பந்துகளில் 142 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், ஃபகர் ஜமான் 126 ரன்களுடனும், பாபர் அசாம் 66 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
என்றாலும், தொடர்ந்து மழை பெய்ததால் டக்வொர்த் லூயிஸ் முறையில் பாகிஸ்தான் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது. பாகிஸ்தான் அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன் அரையிறுதி வாய்ப்பையும் தக்கவைத்துள்ளது. அதேநேரத்தில், நியூசிலாந்து இன்றைய போட்டியில் தோல்வியுற்றதால், அரையிறுதிக்கான வாய்ப்பில் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இன்றைய போட்டியில் 81 பந்துகளில் 8 பவுண்டரி, 11 சிக்ஸருடன் 126 ரன்கள் எடுத்து இறுதிவரை களத்தில் இருந்த ஃபகர் ஜமான் பல்வேறு சாதனைகளுக்கும் சொந்தக்காரரானார்.
இன்றைய போட்டியில் ஃபகர் ஜமான் , 11 சிக்ஸர்கள் அடித்ததன் மூலம், ஒருநாள் போட்டியில் அதிக சிக்ஸர் அடித்த பாகிஸ்தான் வீரர்கள் பட்டியலில் ஷாகித் அஃப்ரிடியுடன் முதல் இடத்தைப் பகிர்ந்துள்ளார். அடுத்து உலகக்கோப்பை தொடரிலும் அதிக சிக்ஸர் அடித்த வீரர்களின் பட்டியலில் மார்டின் குப்திலுடன் 3வது இடத்தைப் பகிர்ந்துகொண்டுள்ளார்.
இந்தப் பட்டியலில் இயன் மோர்கன் 17 சிக்ஸர்களுடன் முதல் இடத்திலும், கிறிஸ் கெய்ல் 16 சிக்ஸர்களுடன் 2வது இடத்திலும் உள்ளனர். மேலும், ஃபகர் ஜமான் நடப்பு உலகக்கோப்பை தொடரில் 18 சிக்ஸர்கள் அடித்துள்ளார். இதன்மூலம், உலகக்கோப்பையில் பாகிஸ்தான் அணிக்காக அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்தார். இவர், கடந்த வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் 7 சிக்ஸர்கள் அடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதுபோல், ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி வீரரின் அதிகபட்ச ரன் எண்ணிக்கையிலும் ஃபகர் ஜமான் (126*) 3வது இடம்பிடித்துள்ளார். முன்னதாக இம்ரான் நசீர் (160 ரன்கள்) மற்றும் முகம்மது ரிஸ்வான் (131*) முதல் இரு இடங்களில் உள்ளனர்.
அதுபோல், உலகக்கோப்பையில் பாகிஸ்தான் அணி வீரர்களின் பார்ட்னர்ஷிப் ரன் குவிப்பு சாதனையையும் ஃபகர் ஜமான் மற்றும் பாபர் அசாம் ஜோடி சமன் செய்துள்ளது. இருவரும், இன்றைய போட்டியில் 194 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இதே ரன்களை 1999 உலகக்கோப்பையில், நியூசிலாந்துக்கு எதிராக சயீத் அன்வர் மற்றும் வாஸ்டி இணை எடுத்திருந்தது. அதுபோல் உலகக்கோப்பை தொடரில் ஓர் அணிக்கு எதிராக அதிக சிக்ஸர் அடித்த பட்டியலிலும் பாகிஸ்தான் 2வது இடத்தைப் பிடித்துள்ளது. ஏற்கெனவே 2007 உலகக்கோப்பையில் ஜிம்பாப்வேவுக்கு எதிராக 16 சிக்ஸர்கள் அடித்துள்ள நிலையில், இன்றைய போட்டியில் 13 சிக்ஸர்கள் அடித்து 2வது இடம்பிடித்துள்ளது.