இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் கேப்டவுன் மைதானத்தில் மோதிய இரண்டாவது டெஸ்ட் போட்டி, இரண்டே நாட்களில் முடிவுக்கு வந்து அதிர்ச்சியளித்தது. ஆடுகளத்தில் பந்துகள் தாறுமாறாக எழ பேட்ஸ்மேன்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர். விக்கெட் வேட்டையாடிய முகமது சிராஜ், முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகளை கைப்பற்றி தென்னாப்பிரிக்காவை 55 ரன்னில் சுருட்டினார். தொடர்ந்து விளையாடிய இந்திய அணி 11 பந்துகளில் 6 விக்கெட்டுகளை பறிகொடுத்து 153 ரன்கள் மட்டுமே எடுத்தது.
அதற்கு பிறகு விளையாடிய தென்னாப்பிரிக்கா சொந்த மண்ணில் 200 ரன்களை கூட எட்டமுடியாமல் 176 ரன்களில் வீழ்ந்தது. 79 ரன்கள் இலக்கை விரட்டிய இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று தொடரை 1-1 என சமன் செய்தது. வெறும் 642 பந்துகளில் முடிவடைந்த இந்த போட்டி, டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் குறைவான பந்துகளில் முடிந்த போட்டியாக மாறி மோசமான சாதனை படைத்தது.
போட்டி முடிந்த பிறகு பல்வேறு முன்னாள் வீரர்கள் ஆடுகளத்தை குற்றஞ்சாட்டினர். முன்னாள் தென்னாப்பிரிக்க வீரர் ஷான் பொல்லாக் கூட மோசமான ஆடுகளம் என விமர்சனம் செய்தார். இந்நிலையில் தான் போட்டி நடைபெற்ற நியூலேண்ட்ஸ் கேப்டவுன் ஆடுகளத்தை “திருப்தியற்ற” ஆடுகளம் என ரேட்டிங் வழங்கி டிமெரிட் புள்ளியையும் வழங்கியுள்ளது ஐசிசி.
ஐசிசி போட்டி நடுவர் கிறிஸ் பிராட், இந்தியா தென்னாப்பிரிக்கா மோதிய இரண்டாவது போட்டி குறித்து அதிகாரிகளின் கவலைகளை வெளிப்படுத்தி, இரண்டு அணி கேப்டன்களான டீன் எல்கர் மற்றும் ரோகித் ஷர்மா ஆகியோருடன் கலந்தாலோசித்த பிறகு, கேப்டவுன் ஆடுகளம் தரத்திற்குக் குறைவாக இருப்பதாகக் கருதி தனது அறிக்கையைச் சமர்ப்பித்துள்ளார். அவருட மதிப்பீட்டைத் தொடர்ந்து, கேப்டவுன் மைதானத்தை “திருப்தியற்ற ஆடுகளம்” என ரேட்டிங் வழங்கியிருக்கும் ஐசிசி, ஒரு டிமெரிட் புள்ளியையும் வழங்கியுள்ளது.
இதுகுறித்து பேசியிருக்கும் ஐசிசி நடுவர் கிறிஸ் பிராட், “நியூலேண்ட்ஸில் உள்ள கேப்டவுன் ஆடுகளத்தில் பேட்டிங் செய்வது மிகவும் கடினமாக இருந்தது. போட்டி முழுவதும் பந்து விரைவாகவும் சில சமயங்களில் பயமுறுத்தும் வகையிலும் எகிறியது. இதனால் பேட்ஸ்மேன்களுக்கு ஷாட்களை விளையாடுவது கடினமாக இருந்தது. பல பேட்டர்கள் கையுறைகளில் அடிவாங்கினர். மேலும் பலர் மோசமான பவுன்ஸ் காரணமாக விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்” என்று கூறியுள்ளார். ஐசிசியின் இந்த அபராதத்தை எதிர்த்து மேல்முறையீடு செய்ய 14 நாட்கள் அவகாசம் தென்னாப்பிரிக்கா கிரிக்கெட்டுக்கு வழங்கப்பட்டுள்ளது.