ஷாகிப் அல் ஹசன் எப்போதும் ஆக்ரோசமான அணுகுமுறைக்கு பெயர் போனவர், பலமுறை வீரர்களுக்கு எதிராகவும், அம்பயர்களுக்கு எதிராகவும் அவர் செய்யும் மோசமான செயல்பாடுகள் இணையத்தில் வைரலாக பேசப்படும்.
2021-ம் ஆண்டு நடந்த டாக்கா பிரீமியர் லீக் (டிபிஎல்) போட்டியின்போது நடுவரின் முடிவில் அதிருப்தியடைந்த அவர் கால்களால் ஸ்டம்பை உதைத்தது மட்டுமில்லாமல், ஸ்டம்புகளை பிடுங்கி பிட்ச்சில் அடித்ததும் அப்போது கடுமையான விமர்சனங்களை பெற்றுத்தந்தது.
அதனைத்தொடர்ந்து 2023-ம் ஆண்டு வங்கதேச பிரீமியர் லீக் டி20 போட்டியில் அம்பயர் ஒய்டு கொடுக்காததால் ‘ஹேய், ஹேய்’ என கத்திக்கொண்டு சண்டைக்கு சென்றதும் சர்ச்சைக்குரிய வகையில் பேசப்பட்டது.
இந்நிலையில் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பந்துவீசும்போது, பேட்டிங் செய்த முகமது ரிஸ்வான் சரியான நேரத்தில் ரெடியாகாததால் கோவத்தில் அவரின் தலைக்கு நேராக பந்தை எறிந்தார் ஷாகிப் அல் ஹசன்.
அவரின் செயலை எதிர்பாராத முகமது ரிஸ்வான் அதிர்ச்சியடைந்தார். உடனடியாக களநடுவர் சென்று ஷாகில் அல் ஹசனுடன் உரையாடினார்.
முகமது ரிஸ்வானின் தலைக்கு நேராக பந்தை எறிந்ததற்காக ஷாகிப் அல் ஹசனுக்கு ஐசிசி அபராதம் விதித்துள்ளது. ஐசிசி நடத்தை விதியின் நிலை 1-ஐ மீறியதற்காக ஒரு டீமெரிட் புள்ளியும், போட்டி கட்டணத்தில் 10% அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. ஐசிசி அவருக்கு விதி 2.9ன் கீழ் தண்டனை விதித்துள்ளது.
அத்துடன் ஸ்லோ ஓவர் ரேட் காரணமாக வங்கதேசம் மற்றும் பாகிஸ்தான் இரண்டு அணிகளுக்கும் தண்டனை விதிக்கப்பட்டது. அதன்படி 6 WTC புள்ளிகள் இழக்கப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கைக்கு பிறகு 6வது இடத்தில் இருந்த வங்கதேசம் 7வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. பாகிஸ்தான் புள்ளிப்பட்டியலி 8வது இடத்தில் நீடிக்கிறது.