WPL 2024 | புதிய சீசன், புதிய அணுகுமுறை... மீண்டு வருமா ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்?

வுமன்ஸ் பிரீமியர் லீக் (WPL) தொடரின் இரண்டாவது சீசன் பிப்ரவரி 23ம் தேதி தொடங்குகிறது. மிகுந்த எதிர்பார்ப்போடும் பரபரப்போடும் தொடங்க இருக்கும் WPL அணிகளின் பலம் பலவீனம் குறித்து அலசுகிறது இந்த தொகுப்பு..
rcb
rcbpt web
Published on

வுமன்ஸ் பிரீமியர் லீக் (WPL) தொடரின் இரண்டாவது சீசன் பிப்ரவரி 23ம் தேதி தொடங்குகிறது. 5 அணிகள் பங்கேற்கும் இந்தத் தொடர் பெங்களூர் மற்றும் டெல்லி என இரண்டு இடங்களில் நடக்கிறது. மிகவும் பரபரப்பாக எதிர்பார்க்கப்படும் இந்தத் தொடரில் ஒவ்வொரு அணியும் எப்படி இருக்கிறது. அதன் பலம், பலவீனம் என்னென்ன? ஓர் அலசல். இந்த எபிசோடில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்

WPL 2023 செயல்பாடு

கடந்த சீசன் RCB-க்கு மிகவும் மோசமான சீசனாக அமைந்தது. மொத்தம் விளையாடிய 8 போட்டிகளில் மொத்தமே இரண்டில் மட்டும்தான் வென்றது அந்த அணி. ஏதோ குஜராத் ஜெயின்ட்ஸ் இன்னும் மோசமாக ஆடியதால் அந்த அணி நான்காவது இடம் பிடித்தது. அதுவும் முதல் 5 போட்டிகளையுமே தோற்று ஆரம்பத்திலேயே ஆட்டத்திலிருந்து வெளியேறியது ஸ்மிரிதி அண்ட் கோ. WPL வரலாற்றின் காஸ்ட்லி பிளேயராகக் களமிறங்கிய கேப்டன் ஸ்மிரிதி மந்தனா பெரிதாக சொதப்பினார். ரேணுகா சிங், ரிச்சா கோஷ் என முன்னணி இந்திய வீராங்கனைகள் அனைவரின் செயல்பாடுமே ஏமாற்றம் தருவதாகத்தான் இருந்தது.

2024 ஏலத்தில்...

இந்த சீசன் ஏலத்துக்கு முன்பாக ராயல் சேலஞ்சர்ஸ் மொத்தம் 7 வீராங்கனைகளை கழட்டிவிட்டது. முன்னணி வெளிநாட்டு வீராங்கனைகளான டனே வேன் நீகர்க், மேகன் ஷூட், எரின் பர்ன்ஸ் ஆகியோர் அந்த அணியிலிருந்து ரிலீஸ் செய்யப்பட்டனர். இந்திய வீராங்கனைகள் கோமல் ஜன்சாத், பூனம் கெம்னார், சஹானா பவார், பிரீத்தி போஸ் ஆகியோரும் வெளியேற்றப்பட்டனர். இந்த ஏலத்தில் அந்த அணி தங்களின் ஸ்குவாடில் இருந்த சிக்கல்களுக்கு பதில் கண்டுகொண்டிருக்கிறது.

அவர்கள் இளம் ஸ்பின் யூனிட் தடுமாறியதால் ஜார்ஜியா வேரம், சோஃபி மோலினாக்ஸ் என இரு அனுபவ ஸ்பின்னர்களை அந்த அணி வாங்கியிருக்கிறது. இந்த இரு ஆஸ்திரேலியர்களும் பேட்டிங்கிலும் கைகொடுப்பார்கள் என்பது அந்த அணிக்குக் கூடுதல் பலம். வேகப்பந்துவீச்சாளர் கேட் கிராஸையும் வாங்கியிருக்கிறது RCB. அனுபவ இந்திய வீராங்கனைகள் ஷப்பினேனி மேகனா, சிம்ரன் பஹதுர், சுபா சதீஷ் ஆகியோரையும் வாங்கி அந்த அணி பலமாகியிருக்கிறது. ஏலத்துக்கு பின்பு இங்கிலாந்து கேப்டன் ஹெதர் நைட் இத்தொடரிலிருந்து வெளியேறிவிட, அவருக்குப் பதிலாக தென்னாப்பிரிக்க ஆல்ரவுண்டர் நடீன் டி கிளர்க்கை ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள்.

பலம்

ஸ்மிரிதி, ரிச்சா, ரேணுகா என இந்திய வீராங்கனைகள் கடந்த சீசன் சொதப்பியிருந்தாலும், இம்முறை நல்ல ஃபார்மில் இருக்கிறார்கள். ஷ்ரேயங்கா பாடில் இப்போது இந்திய அணிக்கே விளையாடிவிட்டார். இவர்கள் அந்த அணியின் பெரிய நம்பிக்கை. மேலும் அந்த அணியின் ஸ்பின் யூனிட் பல மடங்கு பலம் கொண்டிருக்கிறது. ஜார்ஜியா வேரமின் லெக் ஸ்பின், மோலினாக்ஸின் இடது கை ஸ்பின் இவர்களுக்குக் கைகொடுக்கும்

. அதுமட்டுமல்லாமல் முன்னணி இந்திய ஸ்பின்னராக ஏக்தா பிஷ்டையும் ஏலத்தில் வாங்கியிருக்கிறார்கள். அவர் அட்டகாசமான ஃபார்மில் இருப்பதால், அதுவும் அந்த அணிக்குக் கைகொடுக்கும். ஆஃப் ஸ்பின்னர் ரோலுக்கு ஷ்ரேயங்கா பாடில் இருப்பதால், அனைத்து விதமான ஸ்பின் ஆப்ஷனும் இந்த அணிக்கு இருக்கிறது.

பலவீனம்

பலவீனம் என்று பெரிதாக சொல்லும்படி எதுவும் இல்லை. பெரும்பாலான அணிகளுக்கு இருப்பதுபோல் ஒரு சரிசமமான பேக் அப் விக்கெட் கீப்பர் இல்லாததை சொல்லலாம். அந்த அணியின் மிடில் ஆர்டர் சீராக பங்களிக்குமா என்பதைப் பொறுத்து அவர்களின் சீசன் முடிவாகும்.

பிளேயிங் லெவன் எப்படி இருக்கும்

1. ஸ்மிரிதி மந்தனா (கேப்டன்)

2. சோஃபி டிவைன்

3. எல்லிஸ் பெர்ரி

4. சுபா சதீஷ்

5. ரிச்சா கோஷ் (விக்கெட் கீப்பர்)

6. நடீன் டி கிளர்க்

7. கனிகா அஹுஜா

8. ஷ்ரேயங்கா பாடில்

9. ஜார்ஜியா வேரம்

10. ரேணுகா சிங்

11. ஏக்தா பிஷ்ட்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com