இந்திய நாட்டில் கிரிக்கெட் விளையாட்டு என்பது பட்டித்தொட்டி எங்கும் இருக்கும் இளைஞர்களிடத்திலும் முழுமூச்சாக விளையாடப்படுகிறது. இங்கு திறமை வாய்ந்த வீரர்களுக்கு பஞ்சம் என்பது ஒருபோதும் இருந்ததில்லை, ஆனால் அவர்களுக்கான வாய்ப்பு இந்திய அணியில் சரியான நேரத்தில் கிடைக்கிறதா என்றால் இல்லை என்றுதான் சொல்லவேண்டும். வாய்ப்பு என்பது காலம், நேரம், அணியில் இருக்கும் சூழ்நிலையை பொறுத்துதான் அமைகிறது.
அந்தவகையில் முதல்தர போட்டிகளில் 14 சதங்கள், 29 அரைசதங்கள் உட்பட 5000 ரன்களுக்கு மேல் குவித்திருந்தாலும், ஐபிஎல் முதலிய டி20 போட்டிகளில் 4 சதங்கள் உட்பட 5000 ரன்களுக்கு மேல் குவித்திருந்தாலும், சூர்யகுமார் எனும் ஒரு அற்புதமான திறமைவாய்ந்த வீரருக்கு இந்திய அணியில் வாய்ப்பென்பது 31 வயதில்தான் கிடைத்தது என்றால் நம்பமுடிகிறதா? ஆம் சூர்யகுமார் தன்னுடைய முதல் சர்வதேச போட்டியில் விளையாடியது கடந்த 2021-ம் ஆண்டுதான்.
அதுவரை மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் ஒரு வீரராக மட்டுமே இருந்துவந்த சூர்யகுமார், படிப்படியாக தன்னுடைய திறமையை மெருகேற்றி தற்போது இந்திய அணியின் நிரந்தர டி20 கேப்டனாக தன்னை நிலைப்படுத்தியுள்ளார்.
தற்போது இந்திய டி20 அணியின் கேப்டனாக இருக்கும் சூர்யகுமார் யாதவின் ஐபிஎல் சம்பளமானது ஆரம்பகாலத்தில் 10 லட்சமாக மட்டுமே இருந்தது. ஆனால் தற்போது ஒரு நட்சத்திர வீரராக தன்னை மாற்றியிருக்கும் சூர்யகுமார் தன்னுடைய சம்பளத்தையும் பல கோடியாக உயர்த்தியுள்ளார்.
2011 முதல் 2013 வரையிலான முதல் 3 ஐபிஎல் தொடர்களில் மும்பை இந்தியன்ஸ் (MI) அணிக்காக விளையாடிய சூர்யகுமார் யாதவ், 3 சீசன்களில் சம்பளமாக தலா 10 லட்சம் பெற்றுள்ளார்.
அதற்குபிறகு IPL 2014 ஏலத்தில் KKR ஆல் வாங்கப்பட்ட சூர்யா, 2014 முதல் 2017 ஐபிஎல் வரை ஒரு சீசனுக்கு தலா ரூ.70 லட்சம் சம்பாதித்தார். பின்னர் MI-க்கு திரும்பிய அவர், 2018 முதல் 2021 வரை ரூ.3.2 கோடி/சீசன் என சம்பாதித்தார்.
தற்போது தன்னுடைய மார்க்கெட் மதிப்பை உயர்த்தியிருக்கும் சூர்யகுமார் ஐபிஎல் 2022 முதல் தற்போதுவரை சம்பளமாக ஒரு சீசனுக்கு ரூ.8 கோடியை சம்பளமாக பெற்றுவருகிறார்.
இந்தியாவின் புதிய தலைமை பயிற்சியாளராக இருக்கும் கவுதம் கம்பீர், தன்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையில் சூர்யகுமாரின் திறமையை சரியாக பயன்படுத்திக்கொள்ளவில்லை என வருத்தத்தை வெளிப்படுத்தியிருந்தார். ஐசிசி டி20 தரவரிசை பட்டியலில் சூர்யகுமார் யாதவ் இரண்டாவது இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.