2024ஆம் ஆண்டு நடைபெற உள்ள 17வது ஐபிஎல் தொடருக்கான பணிகள், இப்போதே ஆரம்பமாகிவிட்டன. இதற்கான மினி ஏலம் அடுத்த மாதம் டிசம்பர் 19ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், அதற்கு முன்பாக அனைத்து அணிகளுக்கும் இடையில் வீரர்களை மாற்றிகொள்ள டிரேடிங் முறை நடைபெற்று வருகிறது. இதற்கான கடைசி நாளான இன்று (நவ.25) பல்வேறு அணிகளும் டிரேடிங் முறையில் வீரர்களை பெற்றுக்கொள்ள தீவிரம் காட்டி வருகின்றன. ஏனென்றால் ஐபிஎல் நிர்வாகத்திடம் தக்கவைக்கப்பட்ட வீரர்கள் பட்டியலை ஒப்படைக்க நாளை கடைசி நாளாகும்.
இந்த நிலையில், குஜராத் அணியின் கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்டியா, மீண்டும் மும்பை அணியில் விளையாட இருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த 2 சீசன்களில் குஜராத் அணியை வெற்றிகரமாக வழிநடத்தியவர் ஹர்திக் பாண்டியா. இந்த நிலையில், கடந்த ஆண்டு சீசனுக்கு இடையிலேயே குஜராத் அணி உரிமையாளர்களுக்கும் ஹர்திக் பாண்டியாவுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக கடந்த சீசனின் போதே ஹர்திக் பாண்டியா மும்பை அணி நிர்வாகிகளை தொடர்புகொண்டதாகவும் தெரிய வந்துள்ளது.
இதனால் டிரேடிங் முறையில் ஹர்திக் பாண்டியாவை வாங்க மும்பை அணி தீவிரம் காட்டியுள்ளது. இதற்காக அவரை, ரூ.15 கோடி ஒப்பந்தத்தில் வாங்க மும்பை அணி ஒப்பந்தம் செய்துள்ளது. தவிர, மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் தங்களுடைய கேப்டன் ரோகித் சர்மாவை விடுவிக்க முடிவெடுத்து இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
இதையும் படிக்க: இந்தியா சாதித்த ’காபா’ மைதானம்.. இடிக்கப்போகும் ஆஸி.. வரலாறும், சர்ச்சையும்!
ரோகித் சர்மா கேப்டனாக சிறந்து விளங்கினாலும் பேட்டராக தடுமாறி வருவதாகவும், மேலும் அவருக்கு வயதாகி வருவதால் அவரை அனுப்பிவிட்டு ஹர்திக் பாண்டியாவுக்கு கேப்டன்ஷிப் வழங்கவும் முடிவு செய்யப்பட்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேநேரத்தில் இந்த தகவலுக்கு மும்பை ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ரோகித் சர்மா மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக வந்த பிறகுதான் அவர்கள் ஐந்து கோப்பையை கைப்பற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது.
இது ஒருபுறமிருக்க, மறுபுறம் அடுத்த சீசனில் குஜராத் அணியின் கேப்டனாக கேன் வில்லியம்சன், சுப்மன் கில், ரஷீத் கான் மூவரில் ஒருவர் கேப்டனாக செயல்பட வாய்ப்புகள் இருப்பதாக பார்க்கப்படுகிறது. இதில் கேன் வில்லியம்சனையே கேப்டனாக நியமிக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாகச் சொல்லப்படுகிறது.