2023 நவம்பர் 18ஆம் தொடங்கிய லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடரானது, முன்னாள் உலக வீரர்களின் அதிரடி ஆட்டம், அசத்தலான பந்துவீச்சு, அற்புதமான ஃபீல்டிங் என தொடந்து கவுதம் காம்பீர் மற்றும் ஸ்ரீசாந்த் இருவருக்குமான நேரடி சண்டை என நகர்ந்து விறுவிறுப்பான இறுதிப்போட்டியை எட்டியது.
6 அணிகள் பங்கேற்ற லெஜண்ட்ஸ் லீக் தொடரில் ஹர்பஜன் தலைமையிலான மணிப்பால் டைகர்ஸ் அணி, சுரேஷ் ரெய்னா தலைமையிலான அர்பன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, பார்திவ் பட்டேல் தலைமையிலான குஜராத் ஜியண்ட்ஸ் அணி மற்றும் கௌதம் கம்பீர் தலைமையிலான இந்தியா கேபிடல்ஸ் முதலிய 4 அணிகளும் அரையிறுதிச்சுற்றுக்கு தகுதிபெற்றன.
ஐபிஎல் தொடரை போன்றே குவாலிஃபயர் 1, எலிமினேட்டர் மற்றும் குவாலிஃபயர் 2 என நடைபெற்ற தகுதிச்சுற்று போட்டிகளுக்கு பிறகு ரெய்னா தலைமையிலான அர்பன்ரைசர்ஸ் அணியும், ஹர்பஜன் தலைமையிலான மணிப்பால் டைகர்ஸ் அணியும் இறுதிப்போட்டிக்கு முன்னேறின.
குவாலிஃபயர் 1 போட்டியிலும் இதே இரண்டு அணிகள் மோதின. ஆனால் அப்போது மணிப்பால் டைகர்ஸ் அணிக்கு முகமது கைஃப் கேப்டனாக செயல்பட்டு, ஹர்பஜன் சிங்கிற்கு ஓய்வளிக்கப்பட்டது. முக்கியமான போட்டியில் அதிரடியான பேட்டிங் ஆடிய ரெய்னா தலைமையிலான அர்பன்ரைசர்ஸ் அணி 20 ஓவரில் ட்வைன் ஸ்மித்தின் 124 ரன்கள் சதத்தின் உதவியால் 253 ரன்களை குவித்தது. பின்னர் விளையாடிய மணிப்பால் டைகர்ஸ் அணியால் 178 ரன்கள் மட்டுமே எடுக்கமுடிந்தது. இந்நிலையில் முதல் அணியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது ரெய்னா தலைமையிலான ஹைதராபாத் அணி.
ஆனால் வாங்கிய அடிக்கு பதிலடி கொடுக்கும் விதமாக கிடைத்த இரண்டாவது வாய்ப்பை பயன்படுத்திக்கொண்ட மணிப்பால் டைகர்ஸ் அணி, குவாலிஃபயர் 2 போட்டியில் கம்பீர் தலைமையிலான இந்தியா கேபிடல்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. குவாலிஃபயர் 2 போட்டியில் ஹர்பஜன் சிங் தலைமையில் சிறப்பாக செயல்பட்ட டைகர்ஸ் அணி, இறுதிப்போட்டியிலும் ஒரு அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி குவாலிஃபயர் 1-ல் வாங்கிய அடிக்கு பதிலடி கொடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
ஒரு வலுவான பேட்டிங் வரிசை வைத்திருக்கும் ரெய்னா தலைமையிலான அணிக்கு எதிராக மணிப்பால் டைகர்ஸ் முதலில் பந்துவீசியது. அதிரடிக்கு பேர் போன கப்டில் மற்றும் ட்வைன் ஸ்மித் ஜோடி, குவாலிஃபயர் 1 போலவே இறுதிப்போட்டியிலும் அதிரடி காட்டும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் அதிரடி வீரர் மார்டின் கப்டிலை 0 ரன்னில் வெளியேற்றிய பங்கஜ் சிங், டைகர்ஸ் அணிக்கு நல்ல தொடக்கத்தை கொடுத்தார். தொடர்ந்து பவர்பிளேவின் கடைசி பந்தில் கடந்த போட்டியில் சதம் விளாசிய ஸ்மித்தை 21 ரன்னில் வெளியேற்றினார் மெக்லன்கன்.
என்ன தான் விரைவாகவே கப்டில் மற்றும் ஸ்மித் இருவரும் வெளியேறினாலும் 3வது விக்கெட்டுக்கு கைக்கோர்த்த ரிக்கி க்ளார்க் மற்றும் குர்கீரத் சிங் இருவரும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 36 பந்துகளை எதிர்கொண்ட குர்கீரத் சிங் 8 பவுண்டரிகள் 2 சிக்சர்கள் என விளாசி 64 ரன்கள் அடிக்க, 6 பவுண்டரிகள் 4 சிக்சர்கள் என துவம்சம் செய்த க்ளார்க் 80 ரன்கள் குவித்து 187 ரன்களுக்கு அர்பன்ரைசர்ஸ் அணியை எடுத்துச்சென்றார்.
188 ரன்கள் என்ற கடினமான இலக்கை விளையாடிய மணிப்பால் டைகர்ஸ் அணியில், தொடக்க வீரராக களமிறங்கிய ராபின் உத்தப்பா அதிரடியான பேட்டிங்கை வெளிப்படுத்தினார். 2வது ஓவரில் 4 பவுண்டரிகளை அடுத்தடுத்து பறக்கவிட்டு உத்தப்பா மிரட்ட, மறுபக்கம் உத்தப்பாவின் அதிரடியை பின் தொடர்ந்த வால்டன் 4 பவுண்டரிகள் 1 சிக்சர் என துவம்சம் செய்தார். 5 பவுண்டரிகள் 1 சிக்சர் என பறக்கவிட்ட உத்தப்பா 40 ரன்களும், வால்டன் 29 ரன்களும் அடித்து வெளியேற, டைகர்ஸ் அணி 7 ஓவரிலேயே 70 ரன்களை கடந்தது.
அடுத்தடுத்து 3 விக்கெட்டுகள் விழுந்தாலும் தொடர்ந்து களத்திற்கு வந்த ஆஞ்ஜிலோ பெரேரா மற்றும் குண்ரத்னே இருவரும் அசத்தலான பேட்டிங்கை ஆடினர். பெரேரா ஒருபுறம் நிலைத்து நிற்க, மறுமுனையில் அதிரடி காட்டிய குணரத்னே 5 சிக்சர்களை பறக்கவிட்டு (51 ரன்கள்) கிட்டத்தட்ட டைகர்ஸ் அணியின் வெற்றியை உறுதிசெய்தார். கடைசியாக களத்திற்கு வந்த திசாரா பெரேரா 3 பவுண்டரிகள், 1 சிக்சர் என அடிக்க, வின்னிங் ரன்களை சிக்சராக பறக்கவிட்ட காலின் டி க்ராண்ட்கோம் மணிப்பால் டைகர்ஸ் அணியை சாம்பியன் பட்டத்திற்கு அழைத்துச்சென்றார். 19 ஆவது ஓவரின் கடைசி பந்தில் வெற்றியை பதிவு செய்தது ஹர்பஜன் அணி.
முடிவில் 2023 லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் ஹர்பஜன் சிங் தலைமையிலான மணிப்பால் டைகர்ஸ் அணி, சுரேஷ் ரெய்னாவின் அர்பன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வீழ்த்தி லெஜண்ட்ஸ் லீக் பட்டத்தை தட்டிச்சென்றது.