பொதுவாகவே மகேந்திர சிங் தோனி அழுத்தமான நேரத்தில் அமைதியாக இருந்து சிறந்த முடிவுகளை எடுக்கும் தன்னுடைய கேப்டன்சிக்காக அதிகம் பெயர் போனவர். “உண்மையில் தோனியைபோல கடினமான நேரத்தில் யாராலும் சிறந்த முடிவை எடுக்க முடியாது, அதேபோல அழுத்தமான நேரத்தில் தனியாளாக அவரால் வெற்றியை பெற்றுத்தர முடியும், அவர் உண்மையில் பயமற்றவர், அச்சமின்றி விளையாடக்கூடியவர்” என்று தோனியை ரசிகர்கள் அதிகமாக புகழ்வது உண்டு.
ஆனால் இந்தமுறை ஹர்பஜன் சிங் வெளிப்படுத்தியிருக்கும் தகவலானது, ஷர்துல் தாக்கூர் பேட்ஸ்மேனிடம் அதிகப்படியான பவுண்டரிகளை விட்டுக்கொடுத்து அடிவாங்கிக்கொண்டிருந்தபோது , தோனி அவருக்கு உதவ மாட்டேன் என்று கூறியதாக தெரிவித்துள்ளார்.
எப்போதும் பவுலர்கள் அதிகப்படியாக அடிவாங்கினாலோ அல்லது அழுத்தத்தில் தவறான லைன்களை வீசினாலோ, உடனடியாக தோனி ஓடிச்சென்று பவுலர்களிடம் உரையாடுவதை நாம் பலமுறை பார்த்திருக்கிறோம். ஆனால் ஷர்துல் தாக்கூரிடம் ஏன் தோனி அப்படி நடந்துகொண்டார் என்ற தகவலை ஹர்பஜன் சிங் பகிர்ந்துள்ளார்
சமீபத்தில் கோலியுடனான உரையாடலில் பேசியிருக்கும் ஹர்பஜன் சிங், தோனி மற்றும் கோலி குறித்த பல சுவாரசியமான தகவல்களை பகிர்ந்துள்ளார்.
தோனி குறித்து பேசியிருக்கும் அவர், “நாங்கள் சிஎஸ்கே அணிக்காக ஒரு போட்டியில் விளையாடிக் கொண்டிருந்தோம், நான் ஷார்ட் ஃபைன் லெக்கில் பீல்டிங் செய்து கொண்டிருந்தேன். ஷர்துல் தாக்கூர் பந்தை கேன் வில்லியம்சன் அடுத்தடுத்த பவுண்டரிகளுக்கு அடித்தார், நான் தோனியிடம் சென்று பந்து வீச்சாளரிடம் அவரது நீளத்தை மாற்றச் சொல்ல சொன்னேன். ஆனால் தோனி ஷர்துல் தாக்கூருக்கு உதவ மாட்டேன் என்று கூறினார்.
இன்று அவருக்கு உதவி செய்தால், அவர் ஒருபோதும் கற்றுக்கொள்ள மாட்டார் என்று எம்எஸ் தோனி கூறினார். ஷர்துல் தன்னை நம்பியிருந்தால் விஷயங்கள் விரைவில் தெளிவாகிவிடும் என்பதை அறிந்த தோனி, ஷர்துல் தன்னைக் கற்றுக்கொள்ள விரும்பினார். அதுதான் தோனியின் வழி” என்று ஹர்பஜன் வெளிப்படுத்தியுள்ளார்.
மேலும் தோனியை புகழ்ந்து பேசிய ஹர்பஜன், “தோனி அமைதியாக இருக்கிறார், அவருக்கு என்ன வேண்டும் என்பது தெரியும். ஆட்டங்களை வெல்லும் அவரது திறமை அணியிலும் பிரதிபலிக்கிறது. தோனி தனிப்பட்ட இலக்குகளை நம்புவதில்லை, ஏனெனில் அவருக்கு அணிதான் முக்கியமாக இருக்கிறது. சிஎஸ்கே ஒரு சிறப்பான அணி, அவர்களின் வெற்றி அல்லது தோல்வி ஒருபோதும் அவர்களின் சூழ்நிலையை மாற்றாது” என்று வெளிப்படுத்தியுள்ளார்.