ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செய்யவுள்ள ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி, பாட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலியாவை எதிர்த்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவிருக்கிறது.
2018, 2021 என இரண்டு முறை ஆஸ்திரேலிய மண்ணில் தொடரை கைப்பற்றியிருக்கும் இந்தியா மூன்றாவது முறையும் ஹாட்ரிக் அடிக்கும் முனைப்பில் களம்காண உள்ளது. ஆனால் சொந்த மண்ணில் இன்னொரு டெஸ்ட் தொடரை இழக்க ஆஸ்திரேலியா அணி தயாராக இல்லை.
இரண்டு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது நவம்பர் 22-ம் தேதி பெர்த் மைதானத்தில் நடக்கவிருக்கும் நிலையில், இரண்டு அணி வீரர்களும் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் உலக கிரிக்கெட்டே காத்திருக்கும் இந்த தொடரில் எந்த அணிக்கு வெற்றிவாய்ப்பு அதிகம் உள்ளது என பல்வேறு முன்னாள் வீரர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் இந்திய முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங்கும் இந்தியாவிற்கான வெற்றி சதவீதத்தை கணித்துள்ளார்.
யூ-டியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் பேசியிருக்கும் ஹர்பஜன் சிங், “இந்த முறை இந்தியா அணி வெல்வதற்கு 50-50% மட்டுமே வாய்ப்புள்ளது. நியூசிலாந்துக்கு எதிராக நம்முடைய மூத்த வீரர்கள் கூட எப்படி பேட்டிங் செய்ய வேண்டும் என்பதே தெரியாமல் தடுமாறினார்கள். பலபேர் நம்முடைய மூத்த பேட்ஸ்மேன்களும் ரஞ்சிக் கோப்பையில் விளையாடி இருக்க வேண்டும் என்று சொன்னார்கள். ஆனால் அதுமட்டுமே உங்களுடைய பிரச்னையை தீர்க்காது. ஏனென்றால் ஆஸ்திரேலியாவில் நல்ல சூழ்நிலைகள், ஆடுகளங்கள் இருக்கும்.
இந்திய பேட்ஸ்மேன்கள் ஆஸ்திரேலியாவில் நன்றாக வருவார்கள் என்று நான் கருதுகிறேன். அதற்கு புஜாரா போல பந்தை பழையதாக்கி விளையாடும் வீரர்கள் நமக்குத் தேவை. கே.எல் ராகுல் அதிகப்படியாக விமர்சிக்கப்பட்டாலும் கிளாசிக் பிளேயர். இந்தத் தொடரில் நமக்கு 50-50 வெற்றி வாய்ப்பு இருக்கும். இம்முறை ஆஸ்திரேலியா வெற்றி பெற கொஞ்சம் அதிக வாய்ப்புள்ளதாக நான் கருதுகிறேன். ஏனெனில் அவர்கள் சொந்த மண்ணில் விளையாடுகிறார்கள்.
மறுபுறம் இந்தியா சொந்த ஊரில் சந்தித்த தோல்வியால் கொஞ்சம் பின்னடைவை சந்தித்து இருப்பார்கள். இந்தியா முதல் போட்டியில் வெற்றி பெற்று தொடரை வெற்றியுடன் தொடங்குவது முக்கியம். ஒருவேளை முதல் போட்டியில் இந்தியா நல்ல தொடக்கத்தை பெறவில்லையெனில் தொடர் முழுவதும் நல்ல சண்டையை கொடுக்க வேண்டும். இல்லையெனில் இந்திய அணிக்கு பின்னடைவு ஏற்படலாம்" என்று கூறியுள்ளார்.