ஈடன் மேஜிக், ஐபிஎல் அசத்தல், மிரட்டல் பேட்டிங்... ஹேப்பி பர்த்டே ஹர்பஜன் சிங்!

ரோஹித் மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைசிறந்த கேப்டனாக இருக்கலாம். ஆனால், அந்த சூப்பர் ஸ்டார் அணியின் முதல் கேப்டன் ஹர்பஜன்தான். அந்த அணிக்கு முதல் கோப்பை வென்று கொடுத்தவர் அவர்தான்.
ஹர்பஜன் சிங்
ஹர்பஜன் சிங்ட்விட்டர்
Published on

ஹர்பஜன் சிங் - இந்திய கிரிக்கெட்டின் மிகமுக்கிய அங்கமாக விளங்கியவர். 2001 முதல் 2011 வரை இந்திய கிரிக்கெட் அணியின் ஈடு இணையற்ற மேட்ச் வின்னராக விளங்கியவர். தன் பௌலிங்கால் பல்வேறு போட்டிகள் வென்று கொடுத்த இவர், பேட்டிங்கிலும் அவ்வப்போது கைகொடுத்து அசத்தியிருக்கிறார்.

ஐபிஎல் அரங்கில் மும்பை இந்தியன்ஸுக்காகவும் சரி, சென்னை சூப்பர் கிங்ஸுக்காகவும் சரி வெற்றி நாயகனாய் திகழ்ந்திருக்கிறார்.
ஹர்பஜன் சிங்
ஹர்பஜன் சிங்கோப்புப் படம்

வெற்றிகள், கொண்டாட்டங்கள் மட்டுமல்லாமல் எக்கச்சக்க சர்ச்சைகளும் கலந்த ஒரு கமர்ஷியல் காக்டெய்லாக இருந்திருக்கிறார் அவர்.

இன்று, ஜூலை 3 இந்த அசத்தல் நாயகனுக்குப் பிறந்த நாள்.

ஹர்பஜன் என்றாலே அனைவருக்கும் சட்டென்று நினைவுக்கு வருவது 2001 ஈடன் கார்டன் டெஸ்ட் போட்டிதான். அந்தப் போட்டி, அந்தத் தொடர், அது ஏற்படுத்திய மாற்றங்கள்... ஒரு நாஸ்டால்ஜிக் பயணம்.

ஹர்பஜன் சிங்
கோப்பையை உறுதிப்படுத்திய அசாத்திய கேட்ச்.. ஏழு விநாடிகளில் மாறிய வரலாறு!

விவிஎஸ் லக்‌ஷ்மன் - ராகுல் டிராவிட் அமைத்த மாரத்தான் பார்ட்னர்ஷிப்பின் நிழலில் ஹர்பஜனின் செயல்பாடு அதன் தனித்துவத்தை சற்றே இழந்துவிட்டது என்றுதான் சொல்லவேண்டும். அந்த மகத்தான டெஸ்ட் போட்டியில் இந்திய அணியைக் காப்பாற்றியது அந்த இரு தென்னகத்து பேட்ஸ்மேன்கள் மட்டுமல்ல, இந்த பஞ்சாப் ஸ்பின்னரும்தான்.

முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி மிகவும் திடமாக பேட்டிங் செய்துகொண்டிருந்த நிலையில், எந்தவொரு இந்திய பௌலராலும் விக்கெட்டுகள் வீழ்த்த முடியவில்லை. 214/2 என இருந்த ஆஸ்திரேலிய அணியை, 252/7 என்ற நிலைக்குக் கொண்டுவந்தார் பாஜி. அதில் ஒரு அட்டகாசமான ஹாட்ரிக் வேறு. பான்டிங், கில்கிறிஸ்ட், வார்னே ஆகியோரை அடுத்தடுத்து பந்துகளில் பெவ்லியனுக்கு அனுப்பினார் அவர்.

ஒரு இந்திய பௌலரின் முதல் டெஸ்ட் ஹாட்ரிக்!

ஆஸ்திரேலியாவை நன்றாக ஆட்டம் காண வைத்தார் ஹர்பஜன். கடைசியில் ஆஸ்திரேலியா சற்று மீண்டு வந்திருந்தாலும், நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்து இந்தியாவை வெறுப்பேற்றிக் கொண்டிருந்த ஸ்டீவ் வாஹ், கில்லெஸ்ப்பீ இருவரையும் அவரே வெளியேற்றி ஆஸ்திரேலிய இன்னிங்ஸை முடித்து வைத்தார். அந்த இன்னிங்ஸில் அவர் வீழ்த்தியது 7 விக்கெட்டுகள். மற்ற இந்திய பௌலர்கள் கொஞ்சம் சிறப்பாக செயல்பட்டிருந்தால் இந்திய அணி ஆஸ்திரேலியாவை 300 ரன்களுக்குள்ளேயே கட்டுப்படுத்தியிருக்கலாம்.

இதன்பிறகு நடந்த இந்தியாவின் சரிவும், அதன்பிறகு நடந்த வரலாற்றுச் சிறப்புமிக்க எழுச்சியும் நம் அனைவருக்கும் பரிட்சையமே.

அதனால் ஆஸ்திரேலியாவின் இரண்டாவது இன்னிங்ஸ் பக்கம் செல்வோம். 384 என்ற இலக்கை சேஸ் செய்ய ஆஸ்திரேலிய அணிக்கு 2 செஷன்களே இருந்தது. எப்படியும் ஆட்டம் டிராதான் ஆகியிருக்கும். அதை நோக்கித்தான் சென்றது. இரண்டாவது செஷன் முடிவில் அந்த அணியின் ஸ்கோர் 161/3. ஒரு செஷனில் இந்தியாவுக்கு 7 விக்கெட்டுகள் வாய்ப்பே இல்லை. ஆனால், ஏற்கெனவே இந்திய அணி முதல் டெஸ்ட்டை தோற்றிருந்ததால் வெற்றி அவசியமாகவே இருந்தது. மூன்றாவது செஷனில் தன் மேஜிக்கை நிகழ்த்தினார் ஹர்பஜன்.

ஹர்பஜன் சிங்
பேட்ஸ்மேன்களைப் பந்தாடிய டாப் 10 பௌலர்கள் யார் யார்..?

மூன்றாவது செஷன் தொடங்கிய மூன்றாவது ஓவரிலேயே ஆஸ்திரேலியாவை மிரளவைத்தார் ஹர்பஜன். முதல் இன்னிங்ஸில் சதமடித்திருந்த ஆஸி கேப்டன் ஸ்டீவ் வாஹை வெளியேற்றி அந்த அணியின் சரிவைத் தொடங்கி வைத்தார். அதே ஓவரில் பான்டிங்கை மறுபடியும் டக் அவுட் ஆக்கினார். அதிலிருந்து ஆஸ்திரேலியா மீண்டு வரவேயில்லை. இறுதியில் 212 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது ஆஸ்திரேலியா. இந்தியா டெஸ்ட் கிரிக்கெட் அரங்கில் ஒரு மகத்தான வெற்றியைப் பதிவு செய்தது. இந்திய பௌலர்களில் அந்தப் போட்டியில் இரண்டாவது அதிகபட்ச விக்கெட்டுகள் எடுத்தவர் சச்சின் - 3. அப்படியொரு சப்போர்ட் கிடைத்த ஒரு போட்டியில் ஹர்பஜன் எடுத்த விக்கெட்டுகளின் எண்ணிக்கை 13! தொடர்ந்து 16 டெஸ்ட் போட்டிகளில் வென்று வந்த ஆஸ்திரேலியாவின் வெற்றி நடைக்கு அன்று முட்டுக்கட்டை போடப்பட்டது.

அந்தப் போட்டியோடு ஹர்பஜன் ருத்ரதாண்டவும் முடிந்திடவில்லை. சென்னையில் நடந்த அடுத்த டெஸ்ட்டிலும் அது தொடர்ந்தது. தொடரின் வெற்றியாளரை நிர்ணயிக்கும் அந்தப் போட்டியில் 15 விக்கெட்டுகள் (7+8) கைப்பற்றி இந்தியா வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றி பெறக் காரணமாக இருந்தார் அவர். இறுதியில் அந்த ஐகானிக் டெஸ்ட் தொடரின் நாயகனாக அங்கீகரிக்கப்பட்டார். அந்த 10 நாள்கள் அடுத்த 10 வருடங்களுக்கு அவரை இந்தியாவின் முக்கிய அங்கமாய் மாற்றியது.

ஹர்பஜன் சிங்
சவால்களை சமாளித்து ஜொலித்த டாப் 10 பேட்டர்கள்!

பந்துவீச்சில் பல்வேறு மாயங்களை நிகழ்த்தியிருக்கும் ஹர்பஜன், டெஸ்ட் போட்டிகளில் 2 சதங்களும், 9 அரைசதங்களும் கூட அடித்திருக்கிறார். ஒரு பேட்ஸ்மேனாகவும் இந்திய அணிக்குத் தேவைப்பட்ட போதெல்லாம் கைகொடுத்திருக்கிறார் அவர். 2010 ஆசிய கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் முகமது ஆமிர் பந்தில் சிக்ஸர் அடித்து ஆட்டத்தை முடித்துக் கொடுத்தது அவரது பேட்டிங்கின் மகத்தான தருணம்.

இன்று டி20 உலகக் கோப்பை வென்று கொடுத்திருக்கும் ரோஹித்தைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் போது, கேப்டன் ஹர்பஜனைப் பற்றியும் பேசவேண்டும். ரோஹித் மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைசிறந்த கேப்டனாக இருக்கலாம். ஆனால், அந்த சூப்பர் ஸ்டார் அணியின் முதல் கேப்டன் ஹர்பஜன்தான். அந்த அணிக்கு முதல் கோப்பை வென்று கொடுத்தவர் அவர் - 2011 சாம்பியன்ஸ் லீக் டி20. அதன் இறுதிப் போட்டியில் ஆட்ட நாயகனும் இவர்தான். அதே 2011ம் ஆண்டு இன்னொரு கேப்டன் ஃபைனலில் ஆட்ட நாயகனாகி கோப்பையும் வென்று கொடுத்தது நினைவிருக்கிறதா? ஹர்பஜனும் அதை செய்திருக்கிறார்.

வரலாறு முக்கியம் பாஜி!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com