‘ஆமா..தோனி மட்டும்தான் தனியாளா கோப்பைய வென்று வந்தாரு; மத்தவங்க விளையாடல’- ஹர்பஜன், கம்பீர் காட்டம்!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்தது அடுத்து, கேப்டனாக தோனி செய்தவற்றை ரசிகர்கள் பாராட்டி வரும் நிலையில், தோனி காலத்தில் அவருடன் விளையாடிய வீரர்களான ஹர்பஜன் சிங் மற்றும் கௌதம் கம்பீர் கூறியது குறித்து பார்க்கலாம்.
MSD, Gambhir, Harbhajan
MSD, Gambhir, HarbhajanTwitter
Published on

இங்கிலாந்து லண்டன் ஓவல் மைதானத்தில் கடந்த புதன்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில், இந்திய அணியை 209 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. இதையடுத்து கடந்த 10 வருடங்களாக ஐசிசி டிராபியை இந்திய அணி வெல்லவில்லை என்று ரசிகர்கள் சமூகவலைத்தள வாயிலாக சாடி வருவதுடன், ஐசிசியின் டி20, ஒருநாள், சாம்பியன்ஸ் ஆகிய மூன்று கோப்பைகளையும் தோனியின் தலைமையில் மட்டும்தான் இந்திய அணி வென்றுள்ளதாக ரசிகர்கள் அவருக்கு புகழாராம் சூட்டி வருகின்றனர்.

இந்நிலையில், தோனியின் ரசிகர் ஒருவர் கடந்த 2007-ம் ஆண்டு டி20 உலகக் கோப்பையை இந்திய அணி தோனி தலைமையில் வென்றது குறித்து கருத்து பதிவிட்டிருந்தார். அதில், “பயிற்சியாளர், ஆலோசகர் என யாரும் இல்லை. அணியில் இளம் வீரர்கள் மட்டுமே. மூத்த வீரர்களில் பெரும்பாலானோர் ஆடுவதற்கு முன் வரவில்லை. அதற்கு முன் எந்தப் போட்டியிலும் கேப்டன் அனுபவம் இல்லை. எனினும், கேப்டனான 48 நாட்களில் இந்த பையன் (தோனி), உச்சக்கட்ட ஃபார்மில் இருந்த ஆஸ்திரேலிய அணியை இளம் இந்திய வீரர்களை கொண்டு வீழ்த்தி டி20 உலகக் கோப்பையை வென்றுக்கொடுத்தார்” என்று பதிவிட்டிருந்தார்.

இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் டேக் செய்து, அதற்கு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் பதிலளித்துள்ளார். அதில், “ஆம், இந்தியாவிலிருந்து இந்த இளம் வீரர் தன்னந்தனியாக சென்று ஆடிதான் உலகக்கோப்பையை வென்றார்... அணியிலிருந்த மற்ற 10 வீரர்களும் ஆடவே இல்லை... அவர் மட்டுமே தன்னந்தனியாக எல்லா கோப்பைகளையும் வென்றார்.

இதில் முரண் என்னவென்றால் ஆஸ்திரேலிய அல்லது வேறு நாடுகள் உலகக் கோப்பை வெல்லும்போது அந்த அணி அல்லது நாடு வென்றது என்று தலைப்புச் செய்தி வருகிறது. அதுவே, இந்திய அணி வெல்லும்போது கேப்டன் வென்றார் என்று வருகிறது. கிரிக்கெட் ஒரு குழு விளையாட்டு. குழுவாகத்தான் வெற்றி தோல்விகளை அடைய முடியும்” இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

இதேபோல், கௌதம் கம்பீர் விராட் கோலி, தோனி போன்ற தனிப்பட்ட வீரர்களுக்கு அளிக்கும் முக்கியத்துவத்தை சாடியுள்ளார். தொலைக்காட்சி ஒன்றி பேசியதாவது, “யுவராஜ் எப்போதுமே நான் உலகக் கோப்பையை வென்று கொடுத்ததாக சொல்வார். ஆனால் நான், யுவராஜ் சிங்தான் கடந்த 2007 மற்றும் 2011 உலகக் கோப்பைகளில் நம்மை இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்றதாக நம்புகிறேன். அவர் தான் அந்த 2 உலகக் கோப்பைகளிலும் தொடர் நாயகன் என்று நினைக்கிறேன்.

எனக்கு உறுதியாக தெரியவில்லை. (2011-ல் யுவராஜ் சிங் தொடர் நாயகன், 2007 டி20 உலகக் கோப்பையில் ஷாஹித் அப்ரிடி தொடர் நாயகன்). ஆனால் துரதிஷ்டவசமாக கடந்த 2007 மற்றும் 2011 உலகக் கோப்பைகளை பற்றி நாம் பேசும் போது யுவராஜ் சிங் பெயரை எடுத்துக் கொள்வதில்லை. ஏன் அப்படி? அதற்கான காரணம் என்னவெனில் மார்க்கெட்டிங் மற்றும் மக்கள் தொடர்பு ஊடகங்கள் சிலரை (தோனி) பெரிய ஆளாகவும் மற்ற அனைவரையும் சிறியவராகவும் காட்டி விட்டார்கள். இங்கே யாருமே திறமை குறைந்தவர்கள் கிடையாது. மாறாக மக்கள் தொடர்பு மற்றும் மார்க்கெட்டிங் ஊடகங்கள் தான் அவ்வாறு செய்து விட்டன. எனவே 2007 மற்றும் 2011 உலக கோப்பைகளை யாரும் தனியாளாக வென்று விடவில்லை மொத்த அணியாக சேர்ந்து வென்றோம். ஏனெனில் தனி நபராக யாரும் ஐசிசி தொடர்களை வெல்ல முடியாது.

கம்பீர்-யுவராஜ்
கம்பீர்-யுவராஜ்

இங்கே யாருமே திறமை குறைந்தவர்கள் கிடையாது. மாறாக மக்கள் தொடர்பு மற்றும் மார்க்கெட்டிங் ஊடகங்கள் தான் அவ்வாறு செய்து விட்டன. கடந்த 2007 மற்றும் 2011 உலகக் கோப்பைகளை யாரும் தனியாளாக வென்று விடவில்லை, மொத்த அணியாக சேர்ந்து தான் வென்றோம். ஏனெனில் தனி நபராக யாரும் ஐசிசி தொடர்களை வெல்ல முடியாது.

அந்த சூழ்நிலை இருந்தால் இந்நேரம் இந்தியா 5 முதல் 10 உலகக் கோப்பைகளை வென்றிருக்கும். நிறைய பேர் இங்கே உண்மையை பேசுவதில்லை. ஆனால் இதுதான் உண்மை. உலகுக்கு முன்னால் என்னால் இதனை சொல்ல முடியும். ஏனெனில் இது அனைவருக்கும் தெரிய வேண்டும். நமது நாடு ஒரு அணிக்காக தீவிர ஆதரவு கொடுக்கும் நாடு அல்ல. மாறாக தனிநபர் வெற்றியை வெறியுடன் கொண்டாடும் நாடாகும். இங்கே அணியை விட தனிநபரை பெரிதாக நினைக்கிறோம். ஆனால் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து போன்ற நாடுகளில் தனிநபரை விட அணியையே பெரிதாக நினைக்கின்றனர். இந்திய கிரிக்கெட்டில் உள்ள அனைத்து பங்குதாரர்களும், ஒளிபரப்பாளர்கள் மற்றும் ஊடகங்கள் முதல் அனைவருக்குமே பொறுத்தமானது. அவர்கள் எல்லாருமே மக்கள் தொடர்பு நிறுவனமாக குறைக்கப்பட்டுள்ளனர். ஒளிபரப்பாளர்கள் உங்களுக்கு கிரெடிட் வழங்கவில்லை என்றால், நீங்கள் எப்போதும் குறைவாகவே மதிப்பிடப்படுவீர்கள். இதுவே மிகப்பெரிய உண்மை. தனிநபர்கள் மீது மிகவும் வெறித்தனமாக இருப்பதால்தான், இவ்வளவு காலமாக ஐசிசி போட்டியில் நாங்கள் வெற்றி பெறமுடியவில்லை.

Kapil dev
Kapil dev

அதாவது இங்கே நாம் அணியின் வெற்றியை கொண்டாடாமல் தனிநபரின் வெற்றியை கொண்டாடுகிறோம். கடந்த 1983-ம் ஆண்டு உலகக்கோப்பையின் அரையிறுதியிலும், இறுதியிலும் மொகிந்தர் அமர்நாத் தான் ஆட்டநாயகன் விருதை வென்றிருந்தார். ஆனால், கேப்டனாக இருந்த கபில்தேவ் உலகக்கோப்பையை தூக்கிக் கொண்டிருக்கும் ஒரே ஒரு புகைப்படம்தான் நமக்கு காட்டப்படுகிறது. அதுதான் நம்முடைய மனதிலும் பதிந்திருக்கிறது. அதுதான் இங்கு பிரச்சனை” என்று கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com