கடந்த 2 தினங்களாக குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக இருக்கும் ஹர்திக் பாண்டியா, தன்னுடைய முந்தைய அணியான மும்பை இந்தியன்ஸ் அணிக்கே திரும்பவுள்ளார் என வெளியான தகவல் சமூக வலைதளங்களில் தீயாக பரவியது. இதுவரை இப்படி ஒரு வர்த்தகம் ஐபிஎல் வரலாற்றில் நடந்ததே இல்லை, எப்படி ஒரு வீரர் ஒரு அணியின் கேப்டனாக இருக்கும் போது வர்த்தகத்தின் மூலம் வெளிவரமுடியும். ஒருவேளை புரளியாக இருக்குமோ போன்ற பல்வேறு குழப்பத்தோடு டாக் ஆஃப் தி ஷோவாகவே மாறியது ஹர்திக் பாண்டியாவின் டிரேடிங்.
உண்மையிலேயே ஹர்திக் பாண்டியா வெளியேற போகிறாரா? அப்படியானால் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ரோகித் ஷர்மா நீடிக்க மாட்டாரா? குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக யார் செயல்பட போகிறார்கள்? போன்ற பலவிதமான குழப்பங்களுக்கிடையே, ஹர்திக் பாண்டியாவை மும்பை வாங்கவில்லை குஜராத் டைட்டன்ஸ் அணி தக்கவைத்துக்கொண்டது என்ற செய்தி வெளியாகி ஒரு மிகப்பெரிய புரளிக்கு முற்றுப்புள்ளி வைத்தது. ஆனால் சிறிது நேரத்திற்குள் எல்லாமே தலைகீழாக மாறியது...
குஜராத் டைட்டன்ஸ் அணியிலிருந்து 15 கோடி ரூபாய்க்கு மும்பை இந்தியன்ஸ் அணி ஹர்திக் பாண்டியாவை வாங்கவிருப்பதாக வெளியான தகவல், நீண்ட காத்திருப்பிற்கு பிறகு பொய் என தெரிவிக்கப்பட்டது. இருப்பினும் 12ஆம் தேதி வரை வீரர்கள் பரிமாற்றம் இருப்பதாகவும், அதற்குள் எதுவேண்டுமானாலும் நடக்கலாம் எனவும் கூறப்பட்டது. ஏலத்தில் எல்லாம் அணியின் கேப்டன் பெயரை அறிவிக்கமாட்டார்கள் என்பதால், ஒருவேளை மும்பை அணியின் பேச்சுவார்த்தையை குஜராத் டைட்டன்ஸ் மறுத்திருக்கும். மீண்டும் பேச்சுவார்த்தையில் அதிக தொகை வழங்கி மும்பை வாங்க முயற்சிக்கும் என்ற பேச்சு ஆரம்பமானது.
இந்நிலையில் ஹர்திக் பாண்டியாவின் வர்த்தகம் பொய் என அறிவிக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே Cricbuzz-ன் அறிவிப்பு எல்லாவற்றையும் தலைகீழாக மாற்றியது. ஹர்திக் பாண்டியாவை மும்பை இந்தியன்ஸ் ரு.15 கோடிக்கு வெற்றிகரமாக வாங்கிவிட்டதாகவும், இரண்டு அணிகளின் புரிதலின் பேரில் BCCI-ம் அதற்கு ஒப்புதல் அளித்துவிட்டதாகவும் Cricbuzz அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இந்த செய்தி தீயாக பரவிய நிலையில் அனைத்து செய்திசேனல்களும் அதை உறுதிசெய்தன. மேலும் விரைவில் இவ்விரு அணிகளும் அறிவிப்பை வெளியிடும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
இன்று காலையில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் இரண்டு அணிகளும் ஹர்திக் பாண்டியாவின் வர்த்தகத்தை உறுதிசெய்தன. மும்பை இந்தியன்ஸ் அணி ”ஹர்திக் பாண்டியாவை மீண்டும் வீட்டிற்கு வரவேற்கிறோம்” என X- தளத்தில் அதிகாரப்பூர்வமாக பதிவிட்டது. அதேபோல் குஜராத் டைட்டன்ஸ் அணியும் அதை உறுதிசெய்து, அவர்களின் புதிய கேப்டனாக சுப்மன் கில்லை அறிவித்தது. இந்நிலையில் தான் ஹர்திக் பாண்டியாவின் வெளியேற்றத்திற்கான காரணத்தை பகிர்ந்துள்ளார் குஜராத் டைட்டன்ஸ் அணியின் இயக்குநரான விக்ரம் சோலங்கி.
ஹர்திக் பாண்டியா குறித்து பேசியிருக்கும் விக்ரம் சோலங்கி, “குஜராத் டைட்டன்ஸ் அணியின் முதல் கேப்டனாக, ஹர்திக் பாண்டியா இரண்டு அருமையான சீசன்களை வழங்க உதவினார். அதன் விளைவாக ஒருமுறை ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை வென்றது மட்டுமில்லாமல் அடுத்த சீசனில் இறுதிப் போட்டியிலும் குஜராத் அணி தடம் பதித்தது. தற்போது தனது அசல் அணியான மும்பை இந்தியன்ஸ் அணிக்கே திரும்ப ஹர்திக் விருப்பம் தெரிவித்துள்ளார். அவரது முடிவை நாங்கள் மதிக்கிறோம். மேலும் அவரது எதிர்கால முயற்சிகள் சிறப்பாக அமைய வாழ்த்துகிறோம்” என கூறியிருப்பதாக இந்தியன்ஸ் எக்ஸ்பிரஸ் மேற்கோள் காட்டியுள்ளது.
மேலும் சுப்மன் கில் குறித்து பேசியிருக்கும் சோலங்கி, “ ஒரு பேட்டராக மட்டுமில்லாமல், அணிக்காக செயல்படுவதில் பலமுறை கில் முதிர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். அவருடைய பேட்டிங்கும், தலைமைப்பண்பும் குஜராத் அணியை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச்செல்லும் என நம்புகிறோம். இளம் கேப்டனின் தலைமையில் குஜராத் டைட்டன்ஸ் பயணிப்பதில் மகிழ்ச்சி” என கூறியுள்ளார்.