’நீங்களே முதல்ல அடிங்க பாஸ்’ அடுத்தடுத்து சதம் விளாசிய Hitman, Gill; சாதனைகளை மூட்டை கட்டும் ரோகித்!

இங்கிலாந்து அணிக்கெதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில், இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் கில் இருவரும் அதிரடி சதம் அடித்தனர்.
கில், ரோஹித்
கில், ரோஹித்pt web
Published on

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் இங்கிலாந்து அணி, 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் போட்டியைத் (இங்கிலாந்து வெற்றி) தவிர்த்து, அடுத்து நடைபெற்ற மூன்று போட்டிகளிலும் ஹாட்ரிக் வெற்றிபெற்ற இந்திய அணி தொடரையும் வென்று சாதனை படைத்தது. இவ்விரு அணிகளுக்கான 5வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி, மார்ச் 7 ஆம் தேதி இமாச்சலில் உள்ள தர்மசாலாவில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

ஐந்தாவது போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த அந்த அணியில் தொடக்க ஆட்டக்காரர் க்ராவ்லி மட்டுமே 79 ரன்களை எடுத்து அந்த அணிக்கு ஆறுதலாக அமைந்தார். பின் வந்த வீரர்கள் சீரான இடைவெளிகளில் தங்களது விக்கெட்களை இழந்தவண்ணமே இருந்தனர். முடிவில் அனைத்து விக்கெட்களையும் இழந்து இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் 218 ரன்களை மட்டுமே எடுத்தது.

சிறப்பாக பந்துவீசிய இந்திய அணியில், குல்தீப் யாதவ் 5 விக்கெட்களையும், அஷ்வின் 4 விக்கெட்களையும் எடுத்திருந்தனர். பின் தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ஜெய்ஸ்வால் 57 ரன்களுக்கு தனது விக்கெட்டை இழந்திருந்த நிலையில், ரோஹித் சர்மா, சுப்மன் கில் இணை சிறப்பான கூட்டணி அமைத்து விளையாடியது. முதல்நாள் முடிவில் இந்திய அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 135 ரன்கள் எடுத்திருந்தது.

இதனையடுத்து, கேப்டன் ரோகித் சர்மா, சுப்மன் கில் இரண்டாவது நாளான இன்று தங்களது ஆட்டத்தை தொடர்ந்தனர். இருவரும் தேவையான தடுப்பாட்டத்தோடு பவுண்டரிகள், சிக்ஸர்களையும் பறக்கவிட்டனர். இருவரும் கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் தங்களது சதத்தை பூர்த்தி செய்தனர். ரோகித் சர்மா சதம் அடித்த இரண்டாவது பந்தில் கில்லும் தன்னுடைய சதத்தை பூர்த்தி செய்தார். உணவு இடைவேளைக்கு முன் வரை இந்திய அணி 264 ரன்களுக்கு 1 விக்கெட்டை மட்டும் இழந்து 46 ரன்கள் முன்னிலையில் உள்ளது. சுப்மன் கில் 101 ரன்களுடனும், ரோஹித் சர்மா 102 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். உணவு இடைவேளைக்குப் பின் இருவரும் தங்களது விக்கெட்களை இழந்தனர். ரோஹித் சர்மா 103 ரன்களில் ஸ்டோக்ஸ் பந்தில் போல்ட் ஆன நிலையில், கில் 110 ரன்னில் ஆண்டர்சன் பந்தில் போல்ட் ஆனார்.

ரோஹித் சர்மா இந்த சதத்தின் மூலம் சர்வதேச போட்டியில் தனது 48 ஆவது சதத்தை பதிவு செய்துள்ளார். இதன் மூலம் அதிக சதமடித்த இந்திய வீரர்கள் எனும் பட்டியலில் ராகுல் டிராவிட் உடன் மூன்றாவது இடத்தை பகிர்ந்துகொண்டுள்ளார். முதல் இடத்தில் 100 சதங்களுடன் சச்சின் இருக்கும் நிலையில், 80 சதங்களுடன் விராட் கோலி இரண்டாம் இடத்தில் உள்ளார்.

சர்வதேச கிரிக்கெட்டில் தொடக்க ஆட்டக்காரராக அதிக சதம் அடித்தவர்கள் பட்டியலில் 43 சதங்களுடன் ரோஹித் சர்மா மூன்றாவது இடத்தில் உள்ளார். 49 சதங்களுடன் ஆஸ்திரேலிய அணியின் டேவிட் வார்னர் முதலிடத்திலும், 45 சதங்களுடன் சச்சின் டெண்டுல்கர் இரண்டாம் இடத்திலும் உள்ளனர்.

அதேபோல் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அதிக சதம் அடித்த இந்திய தொடக்க ஆட்டக்காரர்கள் பட்டியலில், 4 சதங்கள் அடித்த சுனில் கவாஸ்கருடன் ரோஹித் சர்மா முதலிடத்தை பகிர்ந்துகொண்டுள்ளார். 2021 ஆம் ஆண்டு முதல், இந்திய அணிக்காக அதிக சதமடித்த வீரராகவும் ரோஹித் சர்மா உள்ளார். 2021 ஆம் ஆண்டில் இருந்து தற்போதுவரை அவர் 6 சதம் அடித்துள்ளார்.

இந்திய அணி 71 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 315 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. தன்னுடைய முதல் போட்டியில் களமிறங்கிய தேவ்தத் படிக்கல் 31 ரன்களுடனும், சர்ஃபராஸ் கான் 8 ரன்களுடனும் விளையாடி வருகின்றனர். தற்போதுவரை இந்திய அணி 97 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இன்றைய நாள் முழுவதும் விளையாடினால் 500 ரன்களுக்கு மேல் குவித்து 300 ரன்கள் முன்னிலை பெற வாய்ப்புள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com