இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக உள்ள திராவிட் பதவிகாலம் வரும் டி20 உலகக் கோப்பை போட்டியுடன் முடிவடைகிறது. இதையடுத்து அடுத்த பயிற்சியாளரை தேடும் பணியில் பிசிசிஐ தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில், ஏற்கனவே பிசிசிஐ தரப்பில் கவுதம் கம்பீரிடம் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு இருந்தாலும் இந்த பணி உங்களுக்குதான் என எந்த ஒரு உத்தரவாதமும் அளிக்கப்படவில்லை, எனவே அப்படி பிசிசிஐ உத்தரவாதம் அளிக்கும் பட்சத்தில் கம்பீர் இந்திய கிரிக்கெட் பயிற்சியாளர் பணிக்கு விண்ணப்பம் செய்வார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இப்போது கவுதம் கம்பீர் ஆலோசகராக உள்ள கொல்கத்தா அணி ஐபிஎல் தொடர் இறுதி போட்டியில் சன் ரைசர்ஸ் அணியை எதிர்த்து நாளை விளையாட உள்ளது. இந்த இறுதிப் போட்டியில் பங்கேற்க பிசிசிஐ நிர்வாகிகள் அனைவரும் சென்னை வரவுள்ள நிலையில், போட்டி முடிந்த பின் கம்பீர் மற்றும் பிசிசிஐ சார்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு இருவருக்கும் இடையே புரிதல் ஏற்பட்டால் விண்ணப்பம் செய்வார் என தெரியவருகிறது.
வரும் 27 ஆம் தேதியுடன் விண்ணப்பம் செய்வதற்கு கடைசி நாள் என்பதால் நாளை இரவு கம்பீர் இறுதி முடிவு எடுப்பார் என நம்பப்படுகிறது. முன்னதாக, சிஎஸ்கே பயிற்சியாளர் ஸ்டீபன் ஃபிளமிங், ஜங்டீன் லாங்கர் உள்ளிடோர் பெயர்கள் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு அடிபட்டது குறிப்பிடத்தக்கது.