இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக செயல்பட்டு வந்த ராகுல் டிராவிட், 2013-ம் ஆண்டுக்கு பிறகு கோப்பை வெல்லாத இந்திய அணியை 11 ஆண்டுகளுக்கு பின் டி20 உலகக்கோப்பையை வென்று கொடுத்து வறட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்தார். ஒரு வீரராக கோப்பை வெல்லமுடியாத ராகுல் டிராவிட் தலைமை பயிற்சியாளராக தன்னுடைய கோப்பை கனவை நிறைவேற்றி விடைபெற்றுக்கொண்டார்.
இந்நிலையில், ராகுல் டிராவிட்டிற்கு பிறகு இந்திய அணியை தலைமை பயிற்சியாளராக இருந்து வழிநடத்தும் பொறுப்பு கவுதம் கம்பீருக்கு வழங்கப்பட்டுள்ளது. கடந்த செவ்வாய் கிழமை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியான நிலையில், எதிர்வரும் இலங்கைக்கு எதிரான தொடரிலிருந்து கவுதம் கம்பீர் இந்திய அணியில் இணையவுள்ளார்.
இந்நிலையில் கவுதம் கம்பீரின் ஆக்ரோசம், கிரிக்கெட்டை பார்க்கும் விதத்தை பாராட்டியிருக்கும் முன்னாள் வீரர்கள் உலகக்கிரிக்கெட்டை எச்சரித்துள்ளனர்.
கவுதம் கம்பீரின் நியமனம் குறித்து பேசியிருக்கும் தென்னாப்பிரிக்காவின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் டேல் ஸ்டெய்ன், “நான் கவுதம் கம்பீரின் தீவிர ரசிகன். அவருடைய ஆக்ரோஷம் எனக்கு மிகவும் பிடிக்கும். நான் இதுவரை விளையாடிய சிறந்த இந்தியவீரர்களில் அவரும் ஒருவர், அவர் உங்களுக்கு எதிராக ஆக்ரோசமாக திரும்பிவருவார், எதிரணிக்கு எப்போதும் சவால் அளிப்பார், அது எனக்கு அவரிடம் பிடித்த ஒன்று. அவர் அதையே தற்போது அணி வீரர்களுடன் டிரஸ்ஸிங் ரூமுக்கு அழைத்துச் செல்வார் என்று நினைக்கிறேன்.
இந்தியாவில் மட்டுமல்ல, உலக கிரிக்கெட்டிலும் ஆக்ரோஷமாகவும், கொஞ்சம் கடிமனமாகவும் கிரிக்கெட் விளையாடும் வீரர்கள் தேவை என்று நினைக்கிறேன். தற்போது லீக் போட்டிகள் நிறைய விளையாடி எல்லோரும் இணக்கமாகவும், நண்பர்களாகவும் இருக்கிறார்கள், அதை கவுதம் கம்பீர் உடைப்பார் என நினைக்கிறேன். அவர் களத்தில் மிகவும் கடினமானவர், ஆனால் அவர் ஒரு சிறந்த கிரிக்கெட் வீரராகவும், சிறந்த கிரிக்கெட் மூளையையும் கொண்டிருக்கும் விதம் எனக்குப் பிடிக்கும்" என்று புகழ்ந்து பேசியுள்ளார்.
தலைசிறந்த ஆல்ரவுண்டர்களில் ஒருவரான ஜாம்பவான் கிரிக்கெட்டர் ஜாக் காலிஸ் பேசுகையில், "கவுதம் கம்பீர் பயிற்சியாளர் பக்கம் வருவதைப் பார்ப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. அவருக்கு நல்ல கிரிக்கெட் மூளை இருக்கிறது. அவர் களத்தில் நெருப்பைக் கொண்டு வருவார், மேலும் ஆக்ரோஷமாக விளையாடுவதை விரும்புவார். கடந்த காலங்களில் இந்தியா தொட முடியாத, அந்த கூடுதல் தொடுதலைக் அவர் கொண்டு வருவார் என்று நான் நினைக்கிறேன்.
அவரிடமிருந்து நிறைய கற்றுக்கொண்டு இந்திய வீரர்கள் நிச்சயம் செய்வார்கள், அது எங்களுடைய அணிக்கு எதிராக இல்லாமல் இருக்க வேண்டும்” என்று பாராட்டியுள்ளார்.
பாகிஸ்தானின் நட்சத்திர ஆல்ரவுண்டர் ஷாகித் அப்ரிடி கம்பீர் குறித்து பேசுகையில், “இது கம்பீருக்கு ஒரு பெரிய வாய்ப்பு என்று நான் நினைக்கிறேன். நான் அவருடைய நேர்காணல்களைப் நிறைய பார்த்திருக்கிறேன், அவர் மிகவும் நேர்மையாகவும், பாசிட்டாவாகவும் பேசிவருகிறார். அவர் அதை எவ்வாறு அதிகம் களத்தில் பயன்படுத்துகிறார் என்பதை நாம் பார்க்க வேண்டும்” என்று பேசியுள்ளார்.