முன்னாள் இந்திய கேப்டன் மகேந்திர சிங் தோனி, போட்டியின் நிலைகுறித்த சரியான புரிதலுக்காகவும், தலைசிறந்த கேப்டன்சிக்காகவும் பெயர் போனவர்.
3 விதமான ஐசிசி உலகக்கோப்பைகளை வைத்திருக்கும் ஒரே கேப்டனாக இருந்துவரும் எம்எஸ் தோனியை முன்னாள் பாகிஸ்தான் கேப்டன் மிஸ்பா உல் ஹக், தோனியிடம் இருக்கும் தனித்துவமான விசயத்திற்காக பாராட்டி பேசியுள்ளார்.
தி பெவிலியன் என்ற கிரிக்கெட் ஷோவில் பங்கேற்ற முன்னாள் பாகிஸ்தான் கேப்டன் மிஸ்பா உல் ஹக், முன்னாள் இந்திய கேப்டன் தோனியிடம் இருக்கும் ஒரு தனித்துவமான விசயத்திற்காக பாராட்டினார்.
வீடியோவில் தோனி குறித்து பேசிய அவர், “பல நேரங்களில் கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பரான எம்எஸ் தோனி, மற்ற கேப்டன்களைபோல தங்கள் வழக்கமான பந்துவீச்சாளர்களைப் பயன்படுத்துவதை விட, பகுதிநேர பந்துவீச்சாளர்களை சிறப்பாகப் பயன்படுத்தியுள்ளார். பகுதிநேர பவுலர்களை முக்கியமான நேரத்தில் பயன்படுத்துவதில் தோனி ஒரு மாஸ்டர்” என்று புகழ்ந்து பேசினார்.
அப்போது குறுக்கிட்டு பேசிய நிகழ்ச்சி நெறியாளர், “பாதிக்கப்பட்ட உங்களை விட வேறு யாருக்கு இது சரியாக தெரியப்போகிறது” என்று கூறினார். நெறியாளர் கலாய்த்ததை கண்டுகொள்ளாத மிஸ்பா, ”முகமது ரிஸ்வானும் தோனியை போலவே சிந்திக்கக்கூடியவர்” என்று கூறினார்.
2007 டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் ஜொகிந்தர் ஷர்மாவிடம் விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறியதை ஒப்பிட்டு, மிஸ்பா உல் ஹக்கை தொகுப்பாளர் கலாய்த்ததை ரசிகர்கள் அதிகமாக பகிர்ந்து வருகின்றனர்.