ஐசிசி தொடர்களான ஒருநாள் உலகக்கோப்பை தொடர், சாம்பியன்ஸ் டிராபி, டி20 உலகக்கோப்பை மற்றும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் முதலிய தொடர்களை பொறுத்தவரையில், இந்திய அணியானது இதுவரை 11 முறை இறுதிப்போட்டி வரையிலும், 6 முறை அரையிறுதிப்போட்டி வரையிலும் முன்னேறியுள்ளது.
அதில் 11 முறை நடைபெற்ற இறுதிப்போட்டிகளில் கபில் தேவ் தலைமையில் ஒருமுறை ஒருநாள் உலகக்கோப்பை (1983) தொடரையும், மகேந்திர சிங் தோனி தலைமையில் டி20 உலகக்கோப்பை (2007), ODI உலகக்கோப்பை (2011), சாம்பியன்ஸ் டிராபி (2013) முதலிய 3 கோப்பைகள் என மொத்தம் 4 முறை மட்டுமே இந்திய அணி கோப்பைகளை வென்றுள்ளது. முன்னாள் இந்திய கேப்டன் சவுரவ் கங்குலி தலைமையில் 2002ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை இலங்கை அணியோடு பகிர்ந்து கொண்டது இந்திய அணி.
மற்றபடி 2000 சாம்பியன்ஸ் டிராபி, 2003 ஒருநாள் உலகக்கோப்பை, 2014 டி20 உலகக்கோப்பை, 2017 சாம்பியன்ஸ் டிராபி, 2021 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் 2022 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் என மொத்தம் 6 முறை ஐசிசி இறுதிப்போட்டிகளில் தோல்வியை தழுவியுள்ளது இந்திய அணி.
2023 WTC இறுதிப்போட்டியை பொறுத்தவரையில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இரண்டு அணிகளும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இரு அணிகளுக்கும் இடையேயான வேறுபாடு என்பது ஆஸ்திரேலிய அணியில் 2 வீரர்கள் சதங்களை அடித்ததும், 2 வீரர்கள் 5-5 விக்கெட்டுகளை கைப்பற்றியதும் தான். முதல் இன்னிங்ஸிலேயே ஸ்டீவ் ஸ்மித் மற்றும் டிரவிஸ் ஹெட் இருவரும் 121 மற்றும் 163 ரன்களும், 2 இன்னிங்ஸ்களை சேர்த்து போலண்ட் 5 விக்கெட்டுகள் மற்றும் நாதன் லயன் 5 விக்கெட்டுகள் என இருவரும் சேர்ந்து 10 விக்கெட்டுகளை எடுத்தும் அசத்தியிருந்தனர்.
இந்திய அணியை பொறுத்தவரையில் பந்துவீச்சு மற்றும் பேட்டிங் என இரண்டிலும் நல்ல தொடக்கம் கிடைத்தாலும், அதை இந்திய வீரர்கள் சரியாக பயன்படுத்திக்கொள்ளவில்லை. அதன் படி 444 ரன்கள் கொண்ட இலக்கை துறத்திய இந்திய அணி 4ஆம் நாள் முடிவில் 164/3 என நல்ல நிலைமையில் இருந்தாலும், 5ஆவது நாளின் முதல் செஸ்ஸனிலேயே வெறும் 70 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து படுதோல்வியை சந்தித்தது. ரோகித் சர்மா, விராட் கோலி மற்றும் சட்டீஸ்வர் புஜாரா போன்ற மூன்று அனுபவ வீரர்கள் தங்களுடைய விக்கெட்டை கிஃப்ட் கொடுப்பது போல் அவர்களாகவே கொடுத்துவிட்டு சென்றனர். முடிவில் 234 ரன்னுக்கு அனைத்து விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 209 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது.
இந்திய அணியின் இந்த மோசமான செயல்பாடு குறித்து காட்டம் தெரிவித்திருக்கும் முன்னாள் இங்கிலாந்து கேப்டன் நாசர் ஹூசைன், “இந்திய பேட்ஸ்மேன்கள் விளையாடிய விதம் உண்மையில் ஏமாற்றம் அளிக்கிறது. இதைக்கூறுவதால் அவர்களின் ரசிகர்கள் என்னை விமர்சிக்கலாம், இருப்பினும் நான் இதை கூறுகிறேன். இந்திய வீரர்கள் பந்து திரும்பும் போது எப்படி விளையாட வேண்டும் என்று கற்றுக்கொள்ள வேண்டும்.
ஸ்விங்கிங் கண்டிசனில் பந்து நகரும் போது வேகப்பந்து வீச்சாளருக்கு எதிராக லேட்டாக விளையாட வேண்டும். பந்து ஸ்விங் ஆகும் போது நீங்கள் முன்னால் சென்று விளையாடினால் உங்களால் எளிதாக விக்கெட்டை விட முடியும். இந்திய வீரர்கள் அந்த தவறை தான் தொடர்ந்து செய்தனர். அனுபமுள்ள இந்திய டாப் ஆர்டர்களின் இத்தகைய ஆட்டம் ஏமாற்றத்தை அளிக்கிறது ”என்று போட்டியின் போது கமண்டரியில் தெரிவித்துள்ளார்.