டெஸ்ட் கிரிக்கெட் தொடர்களில் பாரம்பரியமிக்க ஆஷஸ் தொடர், இங்கிலாந்து நாட்டின் பர்மிங்ஹாம் நகரில் உள்ள எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் இன்று தொடங்குகிறது. இரு நாடுகளுக்கு இடையேயான போருக்கு இணையாகக் கருதப்படும் ஆஷஸ் தொடரை, இம்முறை கைப்பற்றப் போவது யார் என்ற எதிர்பார்ப்பில் டெஸ்ட் கிரிக்கெட் ரசிகர்கள் உள்ளனர்.
இந்தியா - பாகிஸ்தான், மும்பை இந்தியன்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் போன்ற RIVALARY மோதல்களுக்கு எல்லாம் முதன்மை என்றால், அது ஆஷஸ் தொடர் தான். உலகக்கோப்பையைவிட ஆஷஸ் தொடரை வெல்வதே முக்கியம் என இரு அணி வீரர்களும், இரு நாட்டு ரசிகர்களும் எண்ணும் அளவுக்கு, இந்தத் தொடர் கௌரவப் பிரச்னையாகப் பார்க்கப்படுகிறது. 1882-ஆம் ஆண்டு தொடங்கிய இந்த மோதல், இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறையென கடுகளவும் சுவாரஸ்யத்துக்குக் குறைவின்றி நடைபெற்று வருகிறது. நூற்றாண்டுகளைக் கடந்துள்ள ஆஷஸ், தற்போது BAZBALL கோட்பாட்டுக்கும் - உலக டெஸ்ட் சாம்பியனுக்குமான மோதலாக அமைந்துள்ளது.
இதுவரை, மொத்தம் 72 ஆஷஸ் தொடர் நடைபெற்றுள்ள நிலையில், அதில் 34 தொடர்களை ஆஸ்திரேலியாவும், 32 தொடர்களை இங்கிலாந்தும் கைப்பற்றியுள்ளன. ஆறு தொடர்கள் டிராவில் முடிந்துள்ளன. இரு அணிகளுக்கும் இடையே 356 டெஸ்ட் போட்டிகள் நடைபெற்றுள்ள நிலையில், அதில் 150 போட்டிகளில் ஆஸ்திரேலியாவும் , 110 போட்டிகளில் இங்கிலாந்தும் வெற்றி பெற்றுள்ளன. 96 போட்டிகள் டிராவில் முடிந்துள்ளன.
இங்கிலாந்து மண்ணில் நடைபெற்ற 171 ஆஷஸ் போட்டிகளில், 53-இல் இங்கிலாந்தும் , 51-ல் போட்டிகளில் ஆஸ்திரேலியாவும் வெற்றிகண்டுள்ளன. 67 போட்டிகள் டிராவில் முடிந்திருக்கிறது. 2017 முதல் ஆஷஸ் கோப்பை ஆஸ்திரேலியாவின் வசமே உள்ளது. இந்த முறை ஆஷஸ் தொடர் உள்ளூரில் நடப்பதால், BAZBALL கோட்பாட்டை கொண்டு ஆஷஸை வெல்ல வேண்டும் என இங்கிலாந்து வீரர்கள் திட்டமிட்டுள்ளனர்.
பிரெண்டன் மெக்கலத்தின் வருகைக்குப் பிறகு டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிரடியை புகுத்தியதன் பலனாக இங்கிலாந்து அணி மிகவும் வலுவான அணியாகத் திகழ்கிறது. அதே நேரத்தில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை வென்ற உற்சாகத்தில் உள்ள ஆஸ்திரேலிய வீரர்கள், இங்கிலாந்தை அதன் சொந்த மண்ணில் வீழ்த்த வேண்டும் என்ற முனைப்பில் இருக்கின்றனர். THE BEST VS THE BEST ஆக உள்ள ஆஷஸ் தொடரை, டெஸ்ட் கிரிக்கெட் ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளனர்