இந்தியாவில் ஒரு உலகக்கோப்பை நடக்கிறது, அதில் இந்தியா இறுதிப்போட்டியில் விளையாடுகிறது என்றாலே, அந்த போட்டியில் இந்தியா வென்று கோப்பையை வெல்லும் என்ற எண்ணம்தான் 2023 ஒருநாள் உலகக்கோப்பையின் இறுதிப்போட்டியை பார்த்த எல்லோருக்கும் இருந்திருக்கும். ஏன் ஆஸ்திரேலியாவின் ரசிகர்களுக்கே அப்படிதான் இருந்திருக்கும், காரணம் அந்த தொடர் முழுக்க இந்தியா வீழ்த்தவே முடியாத ஒரு வலுவான அணியாகவும், ஆஸ்திரேலியா வெளியேறும் நிலையிலிருந்து ஒவ்வொரு போட்டியிலும் வாழ்வா சாவா என்ற போராட்டத்திலிருந்து தப்பித்துதான் இறுதிப்போட்டியை எட்டியிருந்தது.
ஆனால் 10 போட்டிகளில் ஒருதோல்வி கூட இல்லாமல் தொடர்ச்சியாக வெற்றிபெற்று அனைத்து அணிகளுக்கும் சிம்ம சொப்பனமாக விளங்கிய இந்திய அணி, இறுதிப்போட்டியில் மட்டும் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக சிக்கிக்கொண்டது. ‘ஃபைனல்னு வந்துட்டா உங்களுக்கு என்னதான்யா ஆகும்?’ என்ற ஆதங்கமே போட்டியை பார்த்த ஒவ்வொரு இந்திய ரசிகருக்கும் தோன்றியிருக்கும்.
காரணம் இறுதிப்போட்டியில் மொத்தமாக இந்திய அணி வீரர்களால் 13 பவுண்டரிகள், 3 சிக்சர்கள் மட்டுமே அடிக்கமுடிந்தது. ஆனால் ஆஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட் ஒருவர் மட்டுமே 15 பவுண்டரிகள், 4 சிக்சர்களை அடித்து போட்டியை தனியாளாக முடித்துவைத்தார்.
இறுதிப்போட்டி தொடங்குவதற்கு முன்பு “லட்சக்கணக்கான இந்திய ரசிகர்களை அமைதியாக்குவதே சிறந்த வேலையாக இருக்கும்” என பாட் கம்மின்ஸ் தெரிவித்திருந்தார். ஏதோ பொதுவாக அனைத்து ஆஸ்திரேலியா கேப்டனும் மைண்ட் கேம் விளையாடுவதை போல சொல்கிறார், 10 போட்டியில வென்ற இந்தியாவால் இவர்களை தோற்கடிக்க முடியாதா என்ன என்ற வலுவான நம்பிக்கையோடு நிரம்பியது நரேந்திர மோடி மைதானம்.
2023 ஒருநாள் உலகக்கோப்பையின் இறுதிப்போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணியில் ரோகித் சர்மா, விராட் கோலி, கேஎல் ராகுல் மூன்று வீரர்கள் மட்டுமே நம்பிக்கையளிக்கும் ஆட்டத்தை விளையாடினர். 10வது ஓவரில் ரோகித் சர்மா விக்கெட்டும், முக்கியமான நேரத்தில் விராட் கோலியின் விக்கெட்டும் ஆட்டத்தின் திருப்புமுனையாக மாறியது.
விக்கெட்டுகள் சரிந்தபோதும் மறுமுனையில் நிலைத்துநின்று விளையாடிய கேஎல் ராகுல், 107 பந்துகளில் 1 பவுண்டரியுடன் 66 ரன்னடித்து களத்தில் இருந்தார். கடைசி 10 ஓவருக்கு கேஎல் ராகுல், சூர்யகுமார் இருவரும் இருந்ததால் 290 ரன்களை இந்தியா எடுத்துவரும் என்ற எதிர்ப்பார்ப்பு இருந்தது. ஆனால் ஸ்டார்க் பந்தில் சிக்சருக்கு அடிக்க முயன்ற கேஎல் ராகுல் அடிக்கவேண்டிய நேரத்தில் அவுட்டாகி வெளியேற, சூர்யகுமார் யாதவ் அழுத்தம் காரணமாக சொதப்போ சொதப்பல் என சொதப்ப எல்லாமே தலைகீழாக மாறியது. முடிவில் இந்திய அணி வெறும் 240 ரன்கள் மட்டுமே ஆடித்தது.
தனியாளாக நிலைத்து நின்று அபாரமான பேட்டிங்கை வெளிப்படுத்திய டிராவிஸ் ஹெட் 137 ரன்கள் அடித்து ஆஸ்திரேலியாவை 6 விக்கெட் விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிக்கு அழைத்துசென்று 6வது கோப்பையை வெல்ல வழிவகுத்தார்.
சொன்னதை போலவே இந்திய ரசிகர்களை சைலண்ட் செய்த கம்மின்ஸ், பில்லியன் கணக்கான மக்களின் ஆசையில் மண்ணள்ளி போட்டார். போட்டியில் ரோகித் சர்மாவை அபார கேட்ச் மூலம் வெளியேற்றியது, விராட் கோலியின் இன்சைட் எட்ஜ் போல்ட், கேஎல் ராகுலின் அவசர ஹிட்டிங் ஷாட் என பல தருணங்களில் இந்தியாவின் தோல்வி கைநழுவிப்போனது. ஒவ்வொன்றும் இந்திய ரசிகர்களை ஒருவாரத்திற்கு தூங்கவிடவில்லை என்பதே உண்மை.
போதாக்குறையாக நாம் எவ்வளவு மதிப்பை வைத்திருக்கும் உலகக்கோப்பை மீது கால்வைத்தபடி மிட்செல் மார்ஸ் கொடுத்திருந்த போஸ், “நீங்கலாம் ஜெயிச்சிருந்தா இந்த கொடுமையலாம் நாங்க பார்த்திருக்க வேணாம்ல” என்ற மனக்குமுறலுக்கே இந்திய ரசிகர்களை அழைத்துச்சென்றது.
மறக்கவே முடியாத காயங்களை தந்துசென்றது 2023 ஒருநாள் உலகக்கோப்பையின் இறுதி தோல்வி!