உலகத்தின் தலைசிறந்த டி20 லீக்கான ஐபிஎல் தொடரின் 17வது சீசன் வரும் மார்ச் 22ம் தேதி கோலகலமாக தொடங்கவிருக்கிறது. 2024 ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் மகேந்திர சிங் தோனியின் சிஎஸ்கே அணியும், விராட் கோலியின் (கேப்டன் டூப்ளசிஸ்) ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. தோனி மற்றும் விராட் கோலியின் இருப்பை ஒரேநேரத்தில் பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக இருந்துவரும் அதேநேரத்தில், தொடக்க விழாவில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், சோனு நிகம், நடிகர்கள் அக்ஷய் குமார் மற்றும் டைகர் ஷெராஃப் ஆகியோர் பங்கேற்று நிகழ்ச்சி நடத்தவுள்ளனர்.
ஒரேநேரத்தில் தொடக்க விழா மற்றும் சூப்பர் ஸ்டார் வீரர்கள் போட்டி என்ற இரட்டிப்பு ட்ரீட்டையும் பார்க்க ரசிகர்கள் அதிக ஆர்வத்துடன் இருந்த நிலையில், டிக்கெட் விற்பனை தொடங்கிய சிறிது நேரத்திலேயே SOLD OUT என அறிவிக்கப்பட்டதால் அதிர்ச்சியடைந்தனர். எல்லோரும் ஒரேநேரத்தில் டிக்கெட் வாங்க முயற்சித்ததால் இணையதளம் தடைபட்டதாக கூறப்பட்ட சிறிதுநேரத்தில், டிக்கெட் விற்பனை முடிந்துவிட்டதாக சிஎஸ்கே நிர்வாகம் அறிவித்தது.
டிக்கெட் கிடைக்காததால் விரக்தியடைந்த ரசிகர்கள், ’அது எப்படி ஓப்பன் ஆனதும் SOLD OUT ஆகும்? மற்ற அணிகளின் வெப்சைட்டில் எந்த பிரச்னையும் ஏற்படவில்லையே? நீங்களே டிக்கெட் விற்பதற்கு எதற்கு ஆன்லைன் டிக்கெட் விற்பனைனு ஒரு ஏமாற்று வேலை?’ என ரசிகர்கள் ஏமாற்றத்தை பதிவுசெய்ததோடு மட்டுமில்லாம்ல், சிஎஸ்கே நிர்வாகத்தை குறைகூறினர்.
இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சிஇஒ காசி விஸ்வநாதன் டிக்கெட் விற்பனை குறித்து பேசிய வீடியோவை ஷேர் செய்துள்ள ரசிகர்கள், ”இதுக்கு ஏன் ரசிகர்களை ஏமாத்துறீங்க” என்று அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர்.
எக்ஸ் தளத்தில் ரசிகர்கள் பகிர்ந்துள்ள வீடியோவில் பேசியிருக்கும் காசி விஸ்வநாதன், ”நாங்க எதோ டிக்கெட்டை உள்ளயே வச்சிக்கிட்டு விற்கிறதா குற்றச்சாட்டு வைக்குறாங்க. உண்மையில் ஸ்டேடியத்தில் 38000 சீட்கள் இருக்கிறது என்றால், அதில் 20% பிசிசிஐ மற்றும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்திற்கு தரவேண்டும். அதில் ஒரு 8000 டிக்கெட்டுகள் ஒதுக்கவேண்டியிருக்கும். அடுத்து ஒவ்வொரு கிளப் அணிக்கு 25 டிக்கெட்டுகள் என 5000 சீட்கள் ஒதுக்கவேண்டியிருக்கும். அதற்கு பிறகு அரசு அதிகாரிகள், ஸ்பான்சர் செய்யும் நிறுவனங்களுக்கு என டிக்கெட்டுகள் ஒதுக்க வேண்டியிருக்கும். இவர்களை எல்லாம் தாண்டி தான் ரசிகர்களுக்கு ஒதுக்கவேண்டியிருக்கிறது, அதனால் தான் அசௌகரியங்கள் ஏற்படுகின்றது. இதை யாரும் புரிந்துகொள்ளாமல் குற்றஞ்சாட்டுகிறார்கள்” என்று பேசியுள்ளார்.
காசி விஸ்வநாதன் முன்பு பேசிய வீடியோவை தற்போது பகிர்ந்திருக்கும் ரசிகர்கள், “இதற்கு மொத்த டிக்கெட்டையும் கார்ப்ரேட்டுக்கே கொடுத்துடுங்க” என்றும், ”இதற்கு எதற்கு ரசிகர்களை ஏமாற்ற வேண்டும்” என்றும், ”அப்போ அவங்களுக்கு எல்லாம் ஒதுக்கினது போக மீதியிருக்க டிக்கெட் எண்ணிக்கையை மட்டும் சொல்லி விற்பனை பண்ணுங்க, ரசிகர்கள் அவங்க நேரத்தை வீண் செய்யாமவாது இருப்பாங்களே” என்று கருத்திட்டு வருகின்றனர்.
சிஎஸ்கே அணி ரசிகர்களை ஏமாற்றுகிறார்கள் என்ற குற்றச்சாட்டை ரசிகர்கள் வைத்த அதேநேரத்தில், ”டிக்கெட் டிமாண்ட் சொல்ல முடியாதளவு இருக்கிறது, என் குழந்தைகளும் போட்டியை பார்க்க ஆசப்படுறாங்க, டிக்கெட் கிடைக்க உதவி பண்ணுங்க சிஎஸ்கே” என்று ரவிச்சந்திரன் அஸ்வின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.