இலங்கைக்கு எதிரான போட்டியில் 357 ரன்களை குவித்த இந்திய அணி, 55 ரன்களில் இலங்கையை ஆல் அவுட்டாக்கி 302 ரன்கள் வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றியை பதிவுசெய்தது. அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய இந்திய வேகப்பந்துவீச்சாளர்கள் ஜஸ்பிரித் பும்ரா, சிராஜ் மற்றும் ஷமி மூவரும் புதிய பந்துகளிலேயே ஸிவிங்கை எடுத்துவந்து மிரட்டி விட்டனர். வேகப்பந்துவீச்சாளர்கள் மட்டும் 9 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினர். ஷமி 5 விக்கெட்டுகளும், சிராஜ் 3 விக்கெட்டுகளும், பும்ரா 1 விக்கெட்டும் வீழ்த்தி உலக கிரிக்கெட்டையே மிரட்சியில் ஆழ்த்தினர்.
இந்நிலையில் இலங்கைக்கு எதிரான இந்திய அணியின் வெற்றிக்கு பிறகு பேசியிருக்கும் பாகிஸ்தான் முன்னாள் வீரர் ஹசன் ராஷா, "அது எப்படி இந்திய பந்துவீச்சாளர்கள் வீசும்போது மட்டும் அதிக ஸ்விங் மற்றும் சீம் ஆகும், மற்ற பவுலர்கள் வீசும்போது எதுவும் ஆவதில்லை? என கேள்வி எழுப்பியதோடு பிசிசிஐ இந்திய பவுலர்களுக்கு மட்டும் வேறு பந்துகளை வழங்குவதாக" குற்றஞ்சாட்டினார்.
அவர் பந்துகளை பரிசோதனை செய்ய கோரியதோடு மட்டுமல்லாமல், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) மற்றும் மூன்றாவது நடுவர் மீது குற்றம்சாட்ட முயன்றார்.
இதுகுறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் சேனல் ஒன்றில் பேசியிருக்கும் ஹசன் ராஷா, “இந்திய பந்துவீச்சாளர்கள் அதிக சீம் மற்றும் ஸ்விங்கைப் பெறுகிறார்கள், ஆனால் மற்ற அணி பவுலர்கள் இந்திய பேட்டர்களுக்கு பந்து வீசும்போது அது நடப்பதில்லை. இந்திய அணி பந்துவீசும்போது மட்டும் வித்தியாசமான பந்துகளை ஐசிசி வழங்கி வருகிறது. அதனால் தான் அவர்கள் அதிக சீம் மற்றும் ஸ்விங்கை பெறுகிறார்கள். பிசிசிஐ மற்றும் மூன்றாவது நடுவர் கூட சம்பந்தப்பட்டிருப்பதாகத் தெரிகிறது” என்று ஏபிஎன் சேனலில் பேசும் போது கூறினார்.
அதுமட்டுமல்லாமல் இந்திய அணிக்கு 7-8 டிஆர்எஸ் அழைப்புகள் சாதகமாக வழங்கப்பட்டுள்ளன என்றும் குற்றஞ்சாட்டியுள்ளார்.
முன்னாள் பாகிஸ்தான் வீரர் ஹசன் ராஷாவின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்திருக்கும் முன்னாள் இந்திய வீரர் ஆகாஷ் சோப்ரா, “ இது உண்மையில் சீரியஸான கிரிக்கெட் நிகழ்ச்சியா? இல்லையென்றால் ஆங்கிலத்தில் ”காமெடி ஷோ” என எழுதிப்போடுங்கள். ஒருவேளை உருது மொழியில் வீடியோவில் எழுதியிருக்கிறதா? மன்னிக்கவும் என்னால் அதை படித்து புரிந்துகொள்ள முடியவில்லை” என பங்கமாக கலாய்த்துள்ளார்.
1996 முதல் 2005 வரையிலான காலகட்டத்தில் பாகிஸ்தானுக்காக விளையாடிய ஹசன் ராஷா, 7 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 16 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார்.