”யஷஸ்வி ஜெய்ஸ்வாலின் வெற்றிக்கு இதுதான் காரணம்” - புகழ்ந்து தள்ளிய இங்கிலாந்து முன்னாள் கேப்டன்!
இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் உச்சரித்துக் கொண்டிருக்கும் ஓர் பெயர் யஷஸ்வி ஜெய்ஸ்வால். ஐ.பி.எல்லின் போதே தனது அதிரடி பேட்டிங்கால் அனைவருக்கும் பரிட்சயம் ஆனாலும் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் அடித்த சதத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துவிட்டார் 21 வயதேயான யஷஸ்வி ஜெய்ஸ்வால்.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் அறிமுகமாக வாய்ப்பு பெற்ற யஷஸ்வி ஜெய்ஸ்வால் 171 ரன்கள் குவித்து வெற்றியில் முக்கிய பங்காற்றி ஆட்டநாயகன் விருது வென்றார். இரண்டாவது டெஸ்டில் 57 மற்றும் 38 ரன்களை எடுத்து தொடரில் அதிக ரன் குவித்த வீரர் ஆனார்.
இந்நிலையில் 21 வயதான இந்திய வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வாலை ரிக்கி பாண்டிங்கே பாராட்டினார் என இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரரான நாசர் உசேன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், ''இந்திய அணியில் யஷஸ்வி ஜெய்ஷ்வால் தற்பொழுது சிறப்பான துவக்கத்தை பெற்றுள்ளார். ஐபிஎல் தொடரை தொடர்ந்து தற்போது சர்வதேச கிரிக்கெட்டிலும் அவர் நன்றாக விளையாடி வருகிறார். ஆஷஸ் தொடரின் போது ரிக்கி பாண்டிங் மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகியோருடன் நிறைய நேரத்தை செலவிட்டேன். அப்போது அவர்கள் இருவருமே யாஷஸ்வி ஜெய்ஸ்வால் சர்வதேச கிரிக்கெட்டிலும் விளையாட தகுதியான ஒரு வீரர் என்றும் இந்திய அணிக்காக நிச்சயம் அவர் ஒரு சிறப்பான வீரராக உருவெடுப்பார் என பாராட்டினர்.
யாஷஸ்வி ஜெய்ஸ்வாலின் பேட்டிங் டெக்னிக் மற்றும் அவரது மனநிலை என இரண்டுமே மிகச் சிறப்பாக இருக்கிறது. ஒவ்வொரு போட்டியிலுமே ரன்களை குவித்து அணியை வெற்றிபெற வைக்க வேண்டும் என்று நினைத்தே அவர் விளையாடுகிறார். அதுவே அவரது வெற்றிக்கு காரணமாக நான் நினைக்கிறேன்” என நாசர் உசேன் தெரிவித்துள்ளார்.
நடந்து முடிந்த ஐபிஎல் 16ஆவது சீசனில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 14 போட்டிகளில் விளையாடி 625 ரன்கள் குவித்தார். இதில், அதிகபட்சமாக 124 ரன்கள் எடுத்தார். மேலும், ஒரு சதம் மற்றும் 5 அரைசதம் அடங்கும்.