ENGvSA | 12 ஃபோர்கள், 4 சிக்ஸர்கள்... இங்கிலாந்தை காலி செய்த ஹெய்ன்ரிச் கிளாசன்..!

கிளாசன் சந்தித்த இரண்டாவது பந்தில் சிங்கிள் எடுத்து ரன் கணக்கைத் தொடங்கிய அவர், நான்காவது பந்திலேயே ஃபோர் அடித்தார். ஐந்து பந்துகள் கழித்து ஒரு ஃபோர், 3 பந்துகள் கழித்து இன்னொரு ஃபோர், ஆறு பந்துகளுக்குப் பிறகு அடுத்த ஃபோர்..!
Heinrich Klaasen
Heinrich KlaasenKunal Patil
Published on
போட்டி 20: இங்கிலாந்து vs தென்னாப்பிரிக்கா
முடிவு: 229 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா வெற்றி (தென்னாப்பிரிக்கா - 399/7, இங்கிலாந்து - 170 ஆல் அவுட், 22 ஓவர்கள்)
ஆட்ட நாயகன்: ஹெய்ன்ரிச் கிளாசன் (தென்னாப்பிரிக்கா)
பேட்டிங்: 67 பந்துகளில் 109 ரன்கள் (12 ஃபோர்கள், 4 சிக்ஸர்கள்)

இந்த உலகக் கோப்பைக்கு வரும்போது உச்சகட்ட ஃபார்மில் வந்தார் கிளாசன். கடந்த ஓராண்டாகவே அனைத்து விதமான தொடர்களிலும் சதங்களாக அடித்துக் குவித்துக்கொண்டிருந்தார் கிளாசன். அதனால் இந்த உலகக் கோப்பையில் அவர்மீது எக்கச்சக்க எதிர்பார்ப்பு இருந்தது. ஒட்டுமொத்த தென்னாப்பிரிக்க அணியும் பேட்டிங்கில் மிரட்டியெடுத்தாலும், கிளாசனால் ஒரு பெரிய இன்னிங்ஸ் ஆட முடியவில்லை. தன் அதிரடி பாணியில் நல்ல ஸ்டார்ட்கள் பெற்றாலும், அவரால் அதை பெரிய இன்னிங்ஸாக மாற்றாக முடியவில்லை. 32, 29, 28 என்ற ஸ்கோர்களுக்கு அவுட் ஆகியிருந்தார் அவர். ஆனால், இந்தப் போட்டியில் அவரிடம் எதிர்பார்க்கப்பட்ட ஒரு பெரிய இன்னிங்ஸை ஆடிவிட்டார் அவர்.

 Heinrich Klaasen
Heinrich KlaasenShashank Parade

இந்தப் போட்டியில் கிளாசன் களமிறங்கியபோது நல்ல நிலையில் இருந்தது தென்னாப்பிரிக்கா. 25.2 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 164 ரன்கள். ரன்ரேட் கிட்டத்தட்ட ஆறரை. நல்ல நிலையில் இருந்திருந்தாலும், அவருக்குப் பெரிய பொறுப்பு இருந்தது. தென்னாப்பிரிக்க அணிக்கு யான்சனுக்குப் பிறகு, அதாவது நம்பர் ஏழுக்குப் பிறகு நம்பும்படியான பேட்டிங் இல்லை. இன்னும் பாதி ஓவர்கள் மீதமிருந்ததால் அவர் இன்னிங்ஸ் முழுமையும் ஆடவேண்டும். அதேசமயம் அந்த நல்ல ரன்ரேட்டும் பாதிக்காமல் பார்த்துக்கொள்ளவேண்டும். அதை ஆரம்பம் முதலே மிகச் சரியாக செய்தார் கிளாசன்.

தான் சந்தித்த இரண்டாவது பந்தில் சிங்கிள் எடுத்து ரன் கணக்கைத் தொடங்கிய அவர், நான்காவது பந்திலேயே ஃபோர் அடித்தார். ஐந்து பந்துகள் கழித்து ஒரு ஃபோர், 3 பந்துகள் கழித்து இன்னொரு ஃபோர், ஆறு பந்துகளுக்குப் பிறகு அடுத்த ஃபோர் என சீரான இடைவெளியில் பௌண்டரிகள் அடித்துக்கொண்டே இருந்தார். ஆனால், பௌண்டரிகளுக்கு நடுவிலான அந்தப் பந்துகளிலும் சிங்கிள், டபுள் என அடித்துக்கொண்டே இருந்தார். அவர் சந்தித்த 14வது பந்திலிருந்து 42வது பந்து வரை இரண்டு பந்துகளில் மட்டுமே அவர் ரன் எடுக்கவில்லை. அவ்வளவு சிறப்பாக ரன் ரேட்டை சீராக்கிக்கொண்டிருந்தார் அவர்.

Heinrich Klaasen
SLvNED | இலங்கைக்கு முதல் வெற்றியைப் பரிசளித்த சதீரா சமரவிக்ரமா..!

தன் நாற்பதாவது பந்தில் ஃபோர் அடித்து அரைசதம் கடந்தவர், தன் ஆட்டத்தை இன்னும் வேகமாக்கினார். இப்போது பௌண்டரிகள் இன்னும் கொஞ்சம் வேகமாக வரத்தொடங்கின. சொல்லப்போனால் நாற்பதாவது ஓவரைக் கடந்ததுமே டாப் கியரில் பயணிக்கத் தொடங்கினார் அவர். அதில் ரஷீத், ரீஸ் டாப்லி பந்துகள் நாலாப்புறமும் பறந்தன. அதிலும் குறிப்பாக, அதுவரை சிறப்பாகப் பந்துவீசியிருந்த டாப்லியை இவர் எளிதாக டார்கெட் செய்து ரன் சேர்த்தார். டாப்லி வீசிய 44வது ஓவரில் இரண்டு ஃபோர்கள், ஒரு சிக்ஸர் என இடைவெளி விடாமல் விளாசினார். டேவிட் வில்லி, மார்க் வுட் ஆகியோர் பந்துகளும் சிக்ஸர்களுக்கு பறக்க, 61 பந்துகளில் சதம் கடந்தார் அவர். 50 - 100 வெறும் 21 பந்துகளில் வந்துவிட்டது.

49வது ஓவர் முடிவில் தென்னாப்பிரிக்க அணி 394 ரன்கள் குவித்திருந்தது. கிளாசன் இருப்பதால் 400 - 410 ரன்கள் வந்துவிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் முதல் பந்திலேயே போல்டாகி வெளியேறினார் கிளாசன். 67 பந்துகளில் 109 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார் அவர். அவருடைய விக்கெட்டோடு தென்னாப்பிரிக்காவின் 400 ஆசையும் கலைந்தது. ஆனால், அது அவர்களின் மெகா வெற்றியை எந்த வகையிலும் தடுக்கவில்லை.

ஆட்ட நாயகன் என்ன சொன்னார்?

"இது என்னுடைய மிகச் சிறந்த செயல்பாடுகளுள் ஒன்று. இன்றைய தட்பவெட்பநிலை மிகவும் மோசமாக இருந்தது. வெப்பம் கொஞ்சம் கூட தாங்கிக்கொள்ள முடியாத அளவுக்கு இருந்தது. ஒட்டுமொத்த சக்தியையும் உறிஞ்சி எடுத்துவிட்டது. அதனால் ரன் ஓடும்போது அதிக எனர்ஜியை செலவளிக்காமல் சேமித்து வைக்கும்படி கூறியிருந்தார்கள். வெயில் அந்த அளவுக்கு அதிகமாக இருந்தது. மார்கோ யான்சனிடம் அதையே தான் ஆலோசித்திருந்தேன். யான்சன் ஆடியது வேறு லெவல் ஆட்டம். அது நான் அதிரடி காட்டி என் ஆட்டத்தைத் தொடரவும் உதவியாக இருந்தது. அவரும் நிச்சயம் ஒரு விருது பெறவேண்டும். அவருடைய ரன்கள் அதிமுக்கியமானது. நெதர்லாந்து அணிக்கு எதிரான தோல்வி மிகவும் கடினமான ஒன்றாக இருந்தது. ஒரு மோசமான செயல்பாட்டால் இது மோசமான அணியாக மாறிவிடாது. கடுமையான, கடினமான உரையாடல்கள் நடந்தன. ஆனால் பயிற்சிகளில் எங்கள் வீரர்கள் சிறப்பாக எழுச்சி கண்டார்கள். இது மிகச் சிறந்த செயல்பாடாக இன்று அமைந்திருக்கிறது"

ஹெய்ன்ரிச் கிளாசன்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com