இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் செய்த இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. டாஸ் வென்று முதல் இன்னிங்ஸில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணி, இந்திய ஸ்பின்னர்களின் தாக்குதலை தாக்குபிடிக்க முடியாமல் 155 ரன்களுக்கே 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ஆனால் கடைசிநேரத்தில் பாஸ்பால் அட்டாக்கை வெளிப்படுத்திய கேப்டன் பென் ஸ்டோக்ஸ், அதிரடியாக விளையாடி 70 ரன்கள் அடிக்க இங்கிலாந்து 246 ரன்கள் எடுத்து ஆல்அவுட்டானது.
இங்கிலாந்தை தொடர்ந்து முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணியில், தொடக்கவீரராக களமிறங்கிய யஷஸ்வி ஜெய்ஸ்வால் இங்கிலாந்து அணிக்கு “பாஸ்பால் அட்டாக்” என்றால் எப்படியிருக்க வேண்டும் என பாடம் எடுத்தார். 108 ஸ்டிரைக்ரேட்டில் 10 பவுண்டரிகள், 3 சிக்சர்கள் என துவம்சம் செய்த ஜெய்ஸ்வால் 74 பந்துகளில் 80 ரன்கள் குவித்து வெளியேறினார்.
பின்னர் வந்த கே.எல் ராகுல் 86, ரவீந்திர ஜடேஜா 87 ரன்கள் என அடுத்தடுத்து அடிக்க 436 ரன்கள் குவித்து, முதல் இன்னிங்ஸ் முடிவில் இங்கிலாந்தைவிட 190 ரன்கள் முன்னிலை பெற்றது இந்திய அணி. சிறப்பாக பந்துவீசிய ஜோ ரூட் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
190 ரன்கள் முன்னிலை பெற்றதால் இந்திய அணி 4-வது இன்னிங்ஸை விளையாடாமல் இங்கிலாந்தை ஆல் அவுட்டாக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. அதற்கேற்றார் போல் அஸ்வின் இரண்டு விக்கெட்டுகள், பும்ரா 2 விக்கெட்டுகள் என வீழ்த்த 163 ரன்களுக்கே 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது இங்கிலாந்து அணி. எப்படியும் அடுத்த 50 ரன்களுக்குள் இங்கிலாந்து ஆல் அவுட்டாகிவிடும் என்று நினைத்தபோது தான், அதிரடியான பாஸ்பால் ஆட்டத்தால் ரன்களை எடுத்துவந்தார் ஒல்லி போப்.
போப் அதிரடியில் மிரட்ட, மறுமுனையில் அவருடன் கைக்கோர்த்த பென் ஃபோக்ஸ் விக்கெட்டை விட்டுக்கொடுக்காமல் நிலைத்து நின்றார். இந்த ஜோடியை பிரிக்க முடியாமல் இந்திய பவுலர்கள் தடுமாறினர். பவுலர்கள் சோர்ந்த நேரத்தில் அதிரடியில் மிரட்டிய ஒல்லி போப் அடுத்தடுத்து பவுண்டரிகளாக விரட்டி ரன்களை எடுத்துவர, 6வது விக்கெட்டுக்கு இந்த கூட்டணி 121 ரன்கள் சேர்த்தது. சிறப்பான பார்ட்னர்ஷிப்பை எடுத்துவந்த இந்த ஜோடியை 34 ரன்னில் பென் ஃபோக்ஸை வெளியேற்றி அக்சர் பட்டேல் பிரித்துவைத்தார்.
தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஒல்லி போப், 17 பவுண்டரிகளுடன் 148 ரன்கள் சேர்த்து அவுட்டாகமல் நிலைத்து நின்று ஆடிவருகிறார். மூன்றாவது நாள் முடிவில் 316/6 என்று விளையாடிவரும் இங்கிலாந்து அணி, 126 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. ஒல்லிப்போப்பை விரைவாகவே வெளியேற்றும் திட்டத்தில் இந்தியா நாளை களமிறங்கவுள்ளது. இங்கிலாந்தை 220 ரன்கள் வரை முன்னிலைக்கு எடுத்து செல்லும் திட்டத்தில் ஒல்லி போப் நாளை களமிறங்குவார்.
டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 500 விக்கெட்டுகள் என்ற இமாலய சாதனையை படைத்த 8 வீரர்களுடன் விரைவாக 9-வது வீரராக இணையவுள்ளார் ரவிச்சந்திரன் அஸ்வின். இன்றைய போட்டியில் பென் ஸ்டோக்ஸை போல்டாக்கி வெளியேற்றிய அஸ்வின் தன்னுடைய 495-வது விக்கெட்டை கைப்பற்றி அசத்தினார். இந்த போட்டியில் இன்னும் 4 விக்கெட்டுகளே மீதமுள்ள நிலையில் அடுத்தப் போட்டியில் 500 டெஸ்ட் விக்கெட்டுகள் என்ற இமாலய சாதனையை அஸ்வின் எட்டுவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
ஒருவேளை அவர் 500 டெஸ்ட் விக்கெட்டுகளை பதிவுசெய்யும் பட்சத்தில், உலக கிரிக்கெட்டில் 500 டெஸ்ட் விக்கெட்டுகளை பதிவுசெய்யும் 3வது ஆஃப் ஸ்பின்னர் மற்றும் 500 டெஸ்ட் விக்கெட்டுகளை கைப்பற்றும் முதல் இந்திய ஆஃப் ஸ்பின்னர் என்ற இமாலய சாதனைகளை படைப்பார். மேலும் அனில் கும்ப்ளேவிற்கு பிறகு 500 விக்கெட்டுகளை கைப்பற்றும் இரண்டாவது இந்திய பந்துவீச்சாளர் என்ற சாதனையையும் படைப்பார்.