இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையே 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் போட்டியில் இங்கிலாந்தும், அடுத்த இரண்டு போட்டியில் இந்திய அணியும் வெற்றி பெற்ற நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான நான்காவது போட்டி ராஞ்சி மைதானத்தில் நேற்று தொடங்கியது. முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணியில் மற்ற வீரர்கள் சொதப்பினாலும் ஜோ ரூட் நிதானமாக விளையாடி சதம் அடித்தார். நேற்று முதல் நாள் முடிவில் இங்கிலாந்து அணி 7 விக்கெட் இழப்பிற்கு 302 ரன்கள் எடுத்திருந்தது. ஜோ ரூட் 106, ராபின்சன் 34 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.
இன்று இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்கியதும் மேற்கொண்டு 51 ரன்கள் சேர்ப்பதற்குள் மீதமுள்ள 3 விக்கெட்டுகளையும் இழந்தது இங்கிலாந்து. 353 ரன்களுக்கு இங்கிலாந்து அணி ஆல் அவுட் ஆனது. ரூட் 122 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இன்று மீதமுள்ள மூன்று விக்கெட்டுகளையும் ஜடேஜா வீழ்த்தினார். மொத்தமாக அவர் 4 விக்கெட் சாய்த்தார்.
பின்னர், இந்திய அணி தனது முதல் இன்னிங்சை தொடங்கியது. கேப்டன் ரோகித் சர்மா வந்த வேகத்தில் 9 பந்துகளில் 2 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இவரது விக்கெட்டை ஆண்டர்சன் வீழ்த்தினார். டெஸ்ட் போட்டிகளில் நான்காவது முறையாக ரோகித் விக்கெட்டை சாய்த்தார் ஆண்டர்சன். உணவு இடைவேளைக்கு முன்பாக இந்திய அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 34 ரன்கள் எடுத்திருந்தது. ஜெய்ஸ்வால் 27, கில் 4 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.
ரோகித் சர்மா ஆட்டமிழந்த உடனே அவரை ட்ரோல் செய்யும் விதமாக இங்கிலாந்து ரசிகர்கள் மைதானத்தில் இருந்து முழக்கமிட்டார். ரோகித் சர்மா தன்னுடைய கடைசி 20 டெஸ்ட் இன்னிங்களில் முறையே 21, 12, 12, 35, 15, 43, 103, 80, 57, 5, 0, 39, 16*, 24, 39, 14, 13, 131, 19, 2 ரன்கள் எடுத்துள்ளார். நடப்பு தொடரில் ஒரே ஒரு இன்னிங்சில் மட்டுமே சதம் அடித்தார். மற்ற ஆட்டங்களில் 50 ரன்களை கூட எட்டவில்லை. சதம் அடித்ததை தாண்டி 39 ரன்கள் தான் அதிகபட்சம் அடித்துள்ளார்.
இந்திய அணி 25 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 86 ரன்கள் எடுத்தது. ஜெய்ஸ்வால் 43 ரன்களுடன் களத்தில் உள்ள நிலையில், நிதானமாக விளையாடி வந்த கில் 38 ரன்களுடன் பெவிலியன் திரும்பினார்.