பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள இங்கிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடிவருகிறது.
முதலில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் ஜோ ரூட் இரட்டை சதமும், ஹாரி ப்ரூக் முச்சதமும் அடித்து அசத்த 823 ரன்களை குவித்த இங்கிலாந்து அணி பாகிஸ்தானை இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றிபெற்றது.
அதனைத்தொடர்ந்து நடைபெற்ற 2வது டெஸ்ட் போட்டியில் பாபர் அசாம், நஷீம் ஷா, ஷாஹீன் அப்ரிடி முதலிய வீரர்கள் நீக்கப்பட்டு சஜித் கான், நோமன் அலி முதலிய ஸ்பின்னர்களும், கம்ரான் குலாம் என்ற பேட்ஸ்மேனும் அணியில் சேர்க்கப்பட்டனர்.
குலாம் அசத்தலான சதம் மற்றும் சஜித் கான் 9 விக்கெட்டுகள், நோமன் அலி 11 விக்கெட்டுகள் என இங்கிலாந்தை திணறடிக்க பாகிஸ்தான் அணி 15 தொடர் தோல்விகளுக்கு பிறகு சொந்த மண்ணில் முதல் வெற்றியை பதிவுசெய்தது.
இந்நிலையில் தொடர் யாருக்கு என முடிவுசெய்யும் கடைசி மற்றும் 3வது டெஸ்ட் போட்டியானது தொடங்கி நடைபெற்றுவருகிறது.
இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் சிறப்பாக செயல்பட்டதால் 3வது போட்டியிலும் பாபர் அசாமுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு அதே அணியோடு பாகிஸ்தான் சென்றுள்ளது.
டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்துவரும் நிலையில், பாகிஸ்தானின் ஸ்டார் ஸ்பின்னர்களாக ஜொலித்த சஜித் கான் மற்றும் நோமன் அலி இருவரும் 3வது போட்டியிலும் சுழலில் மேஜிக்கை நிகழ்த்தி வருகின்றனர்.
இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 9 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டநாயகன் விருதை வென்ற சஜித் கான், மூன்றாவது டெஸ்ட் போட்டியிலும் 6 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இம்முறையும் இங்கிலாந்தின் 10 விக்கெட்டுகளையும் பாகிஸ்தான் ஸ்பின்னர்களான சஜித் கான் (6), நோமன் அலி (3) மற்றும் ஷகித் (1) முதலியோர் கைப்பற்றினர். அதிகபட்சமாக ஜேமி ஸ்மித் 89 ரன்கள் அடித்தார்.
முதல் இன்னிங்ஸ் முடிவில் 267 ரன்களுக்கு ஆல் அவுட்டானது இங்கிலாந்து. பின்னர் விளையாடிய பாகிஸ்தான் அணி முதல் நாள் முடிவில்72 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை பறிகொடுத்தது.