இந்தியாவில் நடைபெற்று வரும் 13-வது ஆடவர் உலகக்கோப்பை கிரிக்கெட் திருவிழா, ரசிகர்களுக்கு விருந்து படைத்து வருகிறது. அந்த வகையில், உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 7-வது லீக் போட்டி இன்று, இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள தர்மசாலாவில் நடைபெற்றது.
இதில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்தும், வங்கதேசமும் பலப்பரீட்சை நடத்தின. முன்னதாக இங்கிலாந்து, தன் முதல் போட்டியில் நியூசிலாந்து அணியிடம் தோல்வி அடைந்தது. இதையடுத்து, இங்கிலாந்து அணி, இந்தப் போட்டியில் பெரிய வெற்றியைப் பெறும் முயற்சியில் களமிறங்கியது. அதேநேரத்தில் வங்கதேசம் ஏற்கெனவே ஆப்கானிஸ்தானை வீழ்த்திய மகிழ்ச்சியில் களமிறங்கியது.
இதைத் தொடர்ந்து, இந்தப் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் அணியின் கேப்டன் ஷாகிப் அல் ஹசன் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இதனால் இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியில் தொடக்க வீரர்களாக ஜானி பேர்ஸ்டோவ் - டேவிட் மாலன் ஜோடி களமிறங்கிய நிலையில், இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இந்த ஜோடியை உடைக்க வங்கதேசம் போராடியது. எனினும், இருவரும் அரைசதம் அடித்தனர்.
ஜானி பேர்ஸ்டோ, 51 ரன்கள் எடுத்தபோது ஷாகிப் அல் ஹசன் வீசிய 17.5-வது ஓவரில் போல்டு ஆகி வெளியேறினார். இதன்பிறகு, மாலனுடன் ஜோ ரூட் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியும் பட்டையைக் கிளப்பினர். குறிப்பாக, டேவிட் மாலன் 91 பந்துகளில் சதம் விளாசி அசத்தினார். ஜோ ரூட் 44 பந்துகளில் அரைசதம் அடித்தார். சதம் விளாசிய அடுத்த பந்து முதலே மாலன் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அடுத்த 16 பந்துகளில் 40 ரன்கள் வரை குவித்தார்.
மொத்தமாக 107 பந்துகளில் 16 பவுண்டரிகள் 5 சிக்ஸர்களை பறக்கவிட்ட அவர், 140 ரன்கள் எடுத்த நிலையில் போல்டு ஆகி வெளியேறினார். இதன்பின்னர், ஜோ ரூட் உடன் கேப்டன் பட்லர் இணைந்தார். இந்த ஜோடியும் தொடர்ந்து அதிரடியாக விளையாடியது. ஆனால், பட்லர் 20 ரன்னில் ஆட்டமிழக்க, பின்னர் களமிறங்கிய வீரர்கள் எல்லாம் சொற்ப ரன்னில் நடையைக் கட்ட, இறுதியில், 50 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி 9 விக்கெட் இழப்புக்கு 364 ரன்கள் எடுத்தது. வங்கதேச அணி தரப்பில் மஹேதி ஹாசன் 4 விக்கெட்களையும், ஷோரிஃபுல் இஸ்லாம் 3 விக்கெட்களையும் வீழ்த்தினர்.
இதையும் படிக்க: திமுக எம்.பி. ஆ.ராசாவின் சொத்துகளை முடக்கிய அமலாக்கத்துறை
பின்னர் மிகக் கடினமான இலக்குடன் களமிறங்கிய வங்கதேச அணியில் தொடக்க பேட்டர் லிட்டன் தாஸ் மட்டும் கொஞ்ச நேரம் நிலைத்து நின்று ஆடினார். அவர், 66 பந்துகளில் 76 ரன்கள் எடுத்து வெளியேறினார். அவருக்குப் பின் வந்த 4 பேட்டர்கள் வெறும் ஒற்றை இலக்க ரன்களில் வெளியேற, அந்த அணி தள்ளாட்டம் கண்டது. இந்தச் சூழலில் விக்கெட் கீப்பர் முஷ்ஃபிகுர் ரஹீம் மற்றும் தாஹித் ஹிர்தாய் ஆகியோர் இணைந்தனர். அவர்கள் ஓரளவு தாக்குப்பிடித்து விளையாண்டனர்.
எனினும், அந்த ஜோடியை இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் பிரித்தனர். ரஹீம் 51 ரன்களிலும், தாஹித் 39 ரன்களிலும் வெளியேறினர். இதற்குப் பின் வந்த வீரர்கள் எவரும் நிலைத்து நின்று விளையாடாததால், அந்த அணி இறுதியில் 48.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 227 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதையடுத்து, இங்கிலாந்து அணி 137 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது. இதன்மூலம் நடப்புத் தொடரில் இங்கிலாந்து அணி, முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளது.
இதையும் படிக்க: அப்படி என்ன சாதித்தது இஸ்ரேலின் மொசாத்? அதன் முரட்டுத்தனமான வரலாறு