ஜிம்பாப்வே டி20 கிரிக்கெட் லீக் தொடரின் இறுதிப்போட்டியானது மஷோனாலண்ட் ஈகிள்ஸ் மற்றும் டர்ஹாம் அணிகளுக்கு இடையே நேற்று நடைபெற்றது. லீக் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்த இரண்டு அணிகளின் மோதல் என்பதால் அதிக எதிர்ப்பார்ப்பு எழுந்தது.
ஆனால் யாரும் எதிர்ப்பார்க்காத வகையில் இறுதிப்போட்டியில் 16 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி உள்நாட்டு கிரிக்கெட்டில் ஒரு மோசமான சாதனையை படைத்துள்ளது ஈகிள்ஸ் அணி.
பரபரப்பான இறுதிப்போட்டியில் ஈகிள்ஸ் அணிக்கு எதிராக டாஸ் வென்ற டர்ஹாம் அணி, முதலில் பேட்டிங்கை தேர்வுசெய்தது. தொடக்க ஆட்டக்காரர் ஒல்லி ராபின்சன் 20 பந்தில் 49 ரன்கள் அடித்து சிறப்பான தொடக்கத்தை ஏற்படுத்தி கொடுக்க, அதற்குபிறகு களத்திற்கு வந்த நெதர்லாந்து வீரர் பாஸ் டி லீடே 29 பந்துகளில் 5 சிக்சர்களை பறக்கவிட்டு 58 ரன்கள் விரட்டி தும்சம் செய்தார்.
இரண்டு பேரின் அதிரடியாலும், லோயர் மிடில் ஆர்டர் வீரர்களின் கேமியோவாலும், 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 229 என்ற பெரிய ஸ்கோரை எட்டியது டர்ஹாம் அணி. இந்தப்போட்டி எப்படியும் கடைசிபந்துவரை செல்லும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டநிலையில், நடந்தது என்னவோ யாரும் எதிர்ப்பார்க்காத விதத்தில் அமைந்தது.
மிகப்பெரிய இலக்கை நோக்கி விளையாடிய ஈகிள்ஸ் அணி, தங்களது முதல் ஓவரிலேயே ஜிம்பாப்வே கேப்டன் கிரேக் எர்வின் உட்பட இரண்டு விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. தொடர்ந்து இரண்டாவது ஓவரில் மேலும் இரண்டு விக்கெட்டுகளும், மூன்றாவது ஓவரில் மற்றொரு விக்கெட்டும் பறிகொடுத்து களத்திற்கு சென்ற அத்தனை வீரர்களும் மீண்டும் பெவிலியனுக்கே திரும்பிக்கொண்டிருந்தனர். கண் இமைக்கும் நேரத்தில் ஈகிள்ஸின் ஸ்கோர் கார்டு 2.3 ஓவரில் 5-5 என மாறியது.
இன்னிங்ஸின் 5வது மற்றும் 8வது ஓவரில் மட்டும் தான் விக்கெட் விழாமல் இருந்தது. மற்ற அனைத்து ஓவர்களிலும் எல்லா பவுலர்களும் விக்கெட்டை கழற்ற, 8.1 ஓவரில் 16 ரன்களுக்கே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த ஈகிள்ஸ் அணி படுதோல்வியை சந்தித்தது. அனைத்து பவுலர்களும் சரிசமமாக இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினர்.
ஈகிள்ஸ் அணியை 213 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய டர்ஹாம் அணி, டி20 கிரிக்கெட்டில் மிகப்பெரிய 3வது வெற்றியை பதிவுசெய்தது. அதேநேரத்தில் ஈகிள்ஸ் அணி 2023ம் ஆண்டு இஸ்ல் ஆஃப் மென்ஸ் (Isle of Man’s) அணியின் 10 ரன்னில் ஆல்அவுட், 2022ம் ஆண்டு சிட்னி தண்டர்ஸ் அணியின் 15 ரன்கள் ஆல்அவுட்டுக்கு பிறகு, 16 ரன்களில் ஆல்அவுட்டான மூன்றாவது மிகக்குறைவான ரன்களை பதிவுசெய்து மிக மோசமான சாதனை படைத்தது.