தென்னாப்பிரிக்காவின் டி20 லீக் தொடரான SA20 தொடர் நாளை முதல் தொடங்குகிறது. ஜனவரி 10 முதல் பிப்ரவரி 10 வரை நடைபெறவிருக்கும் SA20 தொடரில் பிரிட்டோரியா கேபிடல்ஸ், சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப், ஜோபர்க் சூப்பர் கிங்ஸ், டர்பன் சூப்பர் ஜியண்ட்ஸ், எம்ஐ கேப் டவுன் மற்றும் பார்ல் ராயல்ஸ் முதலிய 6 அணிகள் கோப்பைக்காக மோதவிருக்கின்றன. நாளை நடைபெறவிருக்கும் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் அணியான மார்க்ரம் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணியுடன், ஃபாஃப் டு பிளெசிஸ் தலைமையிலான ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி மோதவிருக்கிறது.
இந்நிலையில் ஒரு மிகப்பெரிய டி20 லீக் தொடருக்கு முன் பேசியிருக்கும் டுபிளெசிஸ், ஐபிஎல்லில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடிய அனுபவம் குறித்து பகிர்ந்துள்ளார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் 11 சீசன்களாக விளையாடிய டு பிளெசிஸ், பிளெமிங் மற்றும் தோனியின் கீழ் விளையாடிய அனுபவம் ஒரு சிறந்த கற்றல் என்று குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து பேசியிருக்கும் அவர், “ஒரு இளைஞனாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் டிரஸ்ஸிங் ரூமில் அங்கம் வகித்தது மிகவும் மகிழ்ச்சியான காலகட்டமாக இருந்தது. எனது ஆரம்பகால பயணத்தின் போது ஸ்டீபன் ஃப்ளெமிங் மற்றும் எம்எஸ் தோனியின் கீழ் கற்றுக்கொண்ட அனுபவம் என்பது மிகப்பெரிய கற்றல் என்று தான் சொல்லவேண்டும். இரண்டு பெரிய துப்பாக்கிகள் எப்படி அவர்களுடைய விசயங்களை செயல்படுத்துகின்றன என்பதை அருகிலிருந்து பார்த்துக்கொண்டிருந்தேன். எனது முதல் சீசனில், நான் பெஞ்சில் இருந்தபோது நிறைய கேள்விகளை கேட்டு அதற்கு அவர்கள் என்ன பதில்கள் சொல்கிறார்கள் என்பதை கவனித்துக் கொண்டிருப்பேன்” என்று ஃபஃப் டு பிளெசிஸ் கூறியதாக இந்தியா டுடே மேற்கோள் காட்டியுள்ளது.
மேலும் தோனியின் கேப்டன்சி குறித்து பேசியிருக்கும் டு பிளெசிஸ், ”கூல் கேப்டன் என அழைப்பதை போன்றே மிகவும் கூலான ஒரு கேப்டன் எம் எஸ் தோனி. அவர் எப்போதும் அழுத்தத்தின் கீழ் மிகவும் அமைதியாக இருப்பார். அழுத்தம் அதிகமாக இருக்கும்போதோ அல்லது போட்டி உங்கள் கையை விட்டு போகும்போதோ, நீங்கள் நிதானமாக இருக்க வேண்டியது மிகவும் முக்கியம். உங்களுடைய இந்த அணுகுமுறை பந்துவீச்சாளர்களுக்கு அழுத்தத்தை குறைத்து பந்துவீச்சில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்துகிறது. அத்தகைய கேப்டனான தோனிக்கு கீழ் விளையாடியது என்னுடைய பெரிய அதிர்ஷ்டம்” என்று டு பிளெசிஸ் தெரிவித்துள்ளார்.
CSK அணிக்காக சில மறக்கமுடியாத போட்டிகளில் டு பிளெசிஸ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான குவாலிஃபையர் 1 போட்டியின் போது, 62 ரன்னுக்கு 6 விக்கெட்டுகள் என சென்னை அணி தடுமாறிய போது 67 ரன்களை குவித்த பிளெசிஸ், அணியை வெற்றிக்கு அழைத்துச்சென்றார். அதேபோல் ஐபிஎல் 2021 இறுதிப் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக 86* (59) ரன்கள் எடுத்து ஆட்ட நாயகன் விருதை வென்றார். அவர் அணியில் அங்கம் வகித்த போது 3 ஐபிஎல் கோப்பைகளை வென்றுள்ளது ஃபாஃப் டு பிளெசிஸ்.