தென்னாப்பிரிக்காவின் உலகக்கோப்பை பயணத்தில் பல இதயம் உடைக்கும் தோல்விகள் வரலாற்றில் எழுதப்பட்டுள்ளன. அப்படியான பல போட்டிகளில் 2015 உலகக்கோப்பை அரையிறுதிப்போட்டி மட்டும் எப்போதும் அதிகப்படியான ரனங்களை தந்த போட்டியாக தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் வரலாற்றில் இருந்துவருகிறது.
ஒரு நல்ல போட்டியில் எப்படி மழை ஒரு பெரிய தடையாக மாறியது, பிரண்டென் மெக்கல்லமின் தொடக்க அதிரடி, எலியட்டின் கடைசி சிக்சர் என எதையும் எப்போதும் யாராலும் மறக்க முடியாது. தோல்விக்கு பிறகு தென்னாப்பிரிக்காவின் அனைத்து வீரர்களும் மைதானத்திலேயே படுத்துக்கொண்டு அழுததை எந்த ஒரு கிரிக்கெட் ரசிகராலும் எளிதில் கடந்துவிட முடியாது.
துரதிஷ்டமான தோல்வி குறித்து பேசியிருக்கும் டூ பிளெசிஸ், தனது கிரிக்கெட் பயணத்தில் அது ஒரு மறக்கமுடியாத நிகழ்வு என்று விவரித்தார்.
மனச்சோர்வடைந்த அப்படி ஒரு நாளை நாங்கள் டிரெஸ்ஸிங் ரூமில் கண்டதில்லை என பேசியிருக்கும் அவர், “நாங்கள் முதலில் பேட்டிங் செய்துகொண்டிருந்த போது மழை குறுக்கிட்டது. அப்போது நியூசிலாந்தின் மெயின் பவுலர்கள் அனைவரும் அவர்களுடைய பந்துவீச்சை முடித்திருந்தனர். அதனால் எங்களின் இலக்கு 400 ரன்களாக இருந்தது. அதிகப்படியான டோட்டலை தேடிக்கொண்டிருக்க்ம் போதுதான் மழையால் ஆட்டம் தடைபட்டது. பின்னர் ஒரு சுருக்கப்பட்ட போட்டியில் பிரெண்டன் மெக்கல்லம் போன்ற ஒருவரை ஆட்டத்தில் கொண்டு வந்து, வானிலை எங்களை பழிதீர்த்தது. எங்களுக்கு ஒன்றிரண்டு வாய்ப்புகள் தான் கிடைத்தன. மற்றபடி அது ஒரு துரதிர்ஷ்டமான போட்டியல்ல, நாங்கள் சிறப்பான கிரிக்கெட்டை விளையாடியிருந்தோம்” என ஸ்டார் ஸ்போர்ட்ஸ் உடன் பேசியுள்ளார்.
மேலும் அந்த மோசமான தோல்வி எப்படி அவரை மனதளவில் பாதித்தது என்று கூறுகையில், “அந்த தோல்விக்குப் பிறகு, ‘அடக்கடவுளே அப்படியொரு டிரெஸ்ஸிங் ரூமை அதுவரை நான் பார்த்ததில்லை”. கடைசியாக லயன் கிங்கை இளைஞனாகப் பார்த்த போது தான் நான் அப்படி அழுதேன். தோல்விக்கு பிறகு நான் டிரஸ்ஸிங் ரூமில் உட்கார்ந்து அழ ஆரம்பித்தேன், என்னால் அழுகையை நிறுத்தவே முடியவில்லை. பின்னர் சுற்றிப் பார்த்தேன், 8-9 சகவீரர்கள் முற்றிலும் உடைந்து அழுவதைக் கண்டேன். நான் அங்கம் வகித்த கிரிக்கெட்டின் மிகச்சிறந்த விளையாட்டு அது, ஆனால் தோல்விக்கு பிறகு எல்லாமே மோசமான ஒன்றாக மாறியது” என வேதனயை நினைவு கூர்ந்துள்ளார்.