2023 ஒருநாள் உலகக்கோப்பை தொடரிலிருந்து தொடர்ச்சியாக இந்திய அணியோடு பயணிக்கும் இஷான் கிஷான், ஓய்வின்மை காரணமாக தனக்கு மனச்சோர்வு ஏற்பட்டுவிட்டதாகவும், குடும்பத்துடன் சிறிது நாட்கள் செலவிட விரும்புவதாகவும் விடுமுறை கேட்டதாக தெரிகிறது. ஆனால் அவருக்கான விடுமுறை மறுக்கப்பட்ட நிலையில் தென்னாப்பிரிக்கா தொடரிலிருந்து பாதியுடன் வெளியேறினார் இஷான் கிஷன்.
குடும்பத்துடன் நேரம் செலவிடப்போவதாக வெளியேறிய இஷான் கிஷன், வீட்டிற்கு செல்லாமல் துபாயில் நடைபெற்ற பார்ட்டியில் பங்கேற்க சென்று நேரம் செலவிட்டார். அதேபோல் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சுமாரான ஆட்டத்தை வெளிப்படுத்திய பிறகு, ஸ்ரேயார் ஐயரும் ரஞ்சிக்கோப்பை தொடரில் விளையாட வேண்டும் என்ற நிர்பந்தம் ஏற்பட்டதாகவும் தெரிகிறது. ஆனால் அவரும் முதல் ரஞ்சி போட்டியில் பங்கேற்காமல் ஓய்விலிருந்தார்.
இந்த சூழலில் அதற்கு பிறகு வெளியான ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 அணியில் இரண்டு வீரர்களும் இடம்பெறவில்லை. மாறாக ஜிதேஷ் ஷர்மா, சஞ்சு சாம்சன், ஷிவம் துபே முதலிய வீரர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டது.
இந்நிலையில் தான், இஷான் கிஷான் மீது ராகுல் டிராவிட்டும், பிசிசிஐ-ம் கோவமாக இருப்பதாகவும், அதனால் தான் டி20 அணியில் எப்போதும் இருக்கும் இஷான் கிஷான் ஒழுங்கு நடவடிக்கை காரணமாக நீக்கப்பட்டதாகவும் சர்ச்சை கிளம்பியது. தொடர்ந்து இந்த தகவல் வைரலான நிலையில், தற்போது அதுகுறித்து விளக்கம் அளித்துள்ள ராகுல் டிராவிட் அதனை மறுத்துள்ளார்.
இஷான் கிஷான் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் அணியில் இடம்பெறாதது குறித்து பேசியிருக்கும் ராகுல் டிராவிட், “இல்லை, ஒழுங்கு பிரச்சினை காரணமாக அவர் நீக்கப்படவில்லை. உண்மையில் இஷான் கிஷன் தான் தேர்வுக்கு கிடைக்கவில்லை. தென்னாப்பிரிக்காவில் இருந்தபோதே அவருக்கு ஓய்வு வேண்டுமென்று கோரிக்கை வைத்தார், நாங்களும் அப்போதே வழங்கிவிட்டோம். அதற்கு பிறகும் கூட அவர் அணித்தேர்வுக்கு கிடைக்கவில்லை. அவர் எப்போது கிடைக்கிறாரோ அப்போது உள்நாட்டு கிரிக்கெட்டில் விளையாடுவார், அணித்தேர்விலும் இருப்பார்" என்று ராகுல் டிராவிட் கூறினார்.
அதேபோல ஸ்ரேயாஸ் ஐயர் குறித்து பேசியிருக்கும் அவர், "ஸ்ரேயாஸ் ஐயரின் விஷயத்திலும் ஒழுக்க நடவடிக்கை காரணம் இல்லை. நான் தேர்வாளர்களிடம் விவாதிக்கும் போது அதுகுறித்த எதையும் பேசவில்லை. உண்மையில் டி20க்கான அணியில் நிறைய போட்டிகள் இருக்கின்றன. நிறைய வீரர்கள் ஏற்கனவே இருக்கின்றனர், அதனால் தான் ஸ்ரேயாஸ் தவறவிட்டார். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரில் கூட அதனால் தான் ஸ்ரேயாஸ் இடம்பெறவில்லை” என்று டிராவிட் தெளிவுபடுத்தியுள்ளார்.