ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரின் 9-வது பதிப்பானது அக்டோபர் 3 முதல் தொடங்கி நடைபெற்றுவருகிறது. இந்த உலகக்கோப்பை தொடரில், இந்தியா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, இலங்கை, பாகிஸ்தான் ஆகிய அணிகள் ஒரு பிரிவிலும் இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், வங்கதேசம், ஸ்காட்லாந்து முதலிய அணிகள் மற்றொரு பிரிவிலும் களமிறங்கி விளையாடி வருகின்றன. இதில் உலகக்கோப்பை தொடரின் லீக் போட்டிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. இந்தியா இருக்கும் பிரிவின் லீக் போட்டிகள் இன்றுடன் முடிவுக்கு வருகின்றன.
இதில் ஏற்கெனவே இந்திய அணி, தன்னுடைய கடைசி லீக்கில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்ததை அடுத்து, அதன் அரையிறுதிக் கனவு வாழ்வா... சாவா என்ற நிலையில் உள்ளது. இந்தியா, ஆஸ்திரேலியாவிடம் தோல்வி அடைந்திருப்பதால் இன்றைய போட்டியில் பாகிஸ்தான் அணி நியூசிலாந்தை வீழ்த்தும்பட்சத்தில் இந்தியாவுக்கு அரையிறுதிக் கனவு நிறைவேறும். இல்லையெனில், தொடரைவிட்டு கட்டாயம் வெளியேறும்.
இன்றைய போட்டியில் நியூசிலாந்து அணி தோல்வியைத் தழுவினால், இந்தியா, நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் ஆகிய மூன்று அணிகளும் தலா 4 புள்ளிகளுடன் இருக்கும். பாகிஸ்தான் அணி 58 ரன்களுக்கு குறைவான வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி இருந்தால், இந்திய அணி 4 புள்ளிகளுடன் நெட் ரன்ரேட் அடிப்படையில் இரண்டாவது இடத்தை பிடித்து அரை இறுதிக்கு முன்னேறும் வாய்ப்பு உள்ளது. மாறாக நியூசிலாந்து அணி வெற்றி பெறும் பட்சத்தில் 6 புள்ளிகளுடன் அரையிறுதிக்கு முன்னேறும். இதனால் இந்திய ரசிகர்கள் இன்னும் நம்பிக்கையை இழக்காது உள்ளனர்.
முன்னதாக நேற்று நடைபெற்ற போட்டியில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி, 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 151 ரன்கள் சேர்த்தது. பின்னர் ஆடிய இந்திய மகளிர் அணி 20 ஓவர் முடிவில் 142 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது.