இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதல் மூன்று போட்டிகள் முடிவடைந்த நிலையில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
கடந்த பிப்ரவரி 15 ஆம் தேதி ராஜ்கோட்டில் நடந்த மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 434 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது. முதல் இன்னிங்ஸில் ரோஹித், ஜடேஜா சதமடித்த நிலையில் இந்திய அணி 445 ரன்களைக் குவித்தது. இரண்டாவது இன்னிங்ஸில் ஜெய்ஸ்வால் இரட்டை சதமடிக்க, சுப்மன்கில் 91 ரன்களைக் குவிக்க 430 ரன்களைக் குவித்தது இந்திய அணி. இங்கிலாந்து அணியை 122 ரன்களுக்கு சுருட்டிய இந்திய அணி பிரம்மாண்ட வெற்றியை பதிவு செய்தது.
ராஜ்கோட்டில் நடந்த டெஸ்ட்டில் தனது டெஸ்ட் கேரியரைத் தொடங்கிய விக்கெட் கீப்பர் துருவ் ஜூரல் 46 ரன்களை குவித்திருந்தார். 23 வயதான துருவ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக 13 ஐபிஎல் போட்டிகளில் 11 இன்னிங்ஸ்களில் விளையாடி 152 ரன்களை எடுத்துள்ளார்.
இந்நிலையில் இந்தியா இங்கிலாந்து இடையேயான 4 ஆவது டெஸ்ட் ராஞ்சியில் பிப்ரவரி 23 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக இந்திய அணி செவ்வாய்கிழமை விமானத்தில் ராஞ்சிக்கு சென்றுள்ளது. இந்நிலையில் பிசிசிஐ தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டிருந்த துருவ் ஜூரல் பேசியிருந்த காணொளி ஒன்றை வெளியிட்டிருந்தது. அதில் துருவ் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனியுடனான தனது முதல் சந்திப்பை நினைவு கூர்ந்திருந்தார்.
அதில், “நான் எழுந்து நின்று அவரைப் பார்த்துக் கொண்டிருந்தேன். எம்.எஸ்.தோனியா என் எதிரில் நிற்கிறார் என நினைக்க ஆரம்பித்தேன். அவருடனான எனது முதல் சந்திப்பு ஐபிஎல் 2021 ஆம் ஆண்டு நடந்த தொடரில் நிகழ்ந்தது. அது எனது முதல் ஐபிஎல் சீசன். அப்போது அது கனவா இல்லை நனவா என்பதை பார்க்க என்னையே நான் கிள்ளிப்பார்த்துக் கொண்டேன். ஒரு சர்வதேச போட்டிக்குப் பிறகு எம்.எஸ். தோனியை சந்திக்க வேண்டும் என்பது என் கனவு. நான் அவருடன் பேசும்போதெல்லாம் நான் அவரிடம் இருந்து புதிதாக ஒன்றைக் கற்றுக்கொண்டேன். ராஞ்சியில் நடக்கும் நான்காவது டெஸ்ட் போட்டியில் அவரை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும் என நம்புகிறேன்” என தெரிவித்திருந்தார்.
இப்போது இந்திய அணி 2-1 என்ற முன்னிலையில் இருப்பதால் ஜூரல் 4 ஆவது டெஸ்ட் போட்டியிலும் ப்ளேயிங் 11ல் இருப்பார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா 3-1 என்ற இலக்கை நான்காவது போட்டியிலேயே எட்டும் முனைப்பில் இருப்பதால், முக்கியமான போட்டியில் ஜூரல் தனது திறமையை வெளிப்படுத்த வாய்ப்பாகவும் அவருக்கு அமையும்.