2024 ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியின் கேப்டன் பதவியை ருதுராஜ் கெய்க்வாட்டிடம் ஒப்படைத்த தோனி, ஒரு வீரராக மட்டுமே தொடரில் பங்கேற்றார். அதிலும் பேட்டிங்கில் கடைசிவரிசையில் 8வது இடத்தில் களமிறங்கிய தோனி, அணிக்காக குறைவான பந்துகளையே எதிர்கொண்டார்.
ஆனால் இறுதிவரிசையில் களத்திற்கு வந்தாலும் 14 போட்டிகளில் 53.67 சராசரி மற்றும் 220.55 என்ற அதிரடியான ஸ்டிரைக் ரேட்டில் 161 ரன்கள் குவித்து அசத்திய தோனி, சில அசாத்தியமான சிக்சர்களையும் களத்தில் பறக்கவிட்டார்.
இதனால் எதற்காக தோனி 8வது வீரராக களத்திற்கு வருகிறார்? முன்னதாகவே இறங்கி அணிக்காக நிறைய ரன்களை எடுக்கலாமே என்ற பல கேள்விகள் முன்வைக்கப்பட்டன.
இந்நிலையில் எதற்காக 8வது இடத்தில் பேட் செய்தேன் என்று கூறியிருக்கும் தோனி, ஜடேஜா மற்றும் துபே போன்ற அணி வீரர்களுக்கு டி20 உலகக் கோப்பைக்கு முன்னதாக பிரகாசிக்கும் வாய்ப்பை வழங்குவதற்காகவே தன்னுடைய பேட்டிங் வரிசையை மாற்றியதாக தெரிவித்துள்ளார்.
எதனால் கீழ்வரிசையில் களமிறங்கினேன் என்ற காரணத்தை நிகழ்ச்சி ஒன்றில் கூறியிருக்கும் தோனி, “எனது சிந்தனை எப்போதும் எளிமையானது. மற்றவர்கள் தங்கள் வேலையைச் சிறப்பாகச் செய்யும் போது, நான் ஏன் மேல் வரிசையில் பேட்டிங் செய்ய களமிறங்க வேண்டும். கடந்த ஐபிஎல் சீசன் குறித்து சொல்ல வேண்டுமானால், டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி விரைவில் அறிவிக்கப்படவிருந்தது. எங்கள் அணியிலிருந்து ஜடேஜா மற்றும் துபேவின் பெயர்கள் இடம்பெறும் விதத்தில் இருந்தது. எனவே அவர்களுக்கான வாய்ப்பை உறுதிசெய்யும் விதமாக, அவர்களுடைய ஆட்டத்தை மேலும் பிரகாசிக்கும் வகையில் நிறைய வாய்ப்பு வழங்க வேண்டியது அவசியமானது.
அதனால் தான் நான் பின்வரிசையில் இறங்கினேன். எனக்கு பின் வரிசையில் இறங்குவதால் எந்த பாதிப்பும் இல்லை, அணித்தேர்வு முதலிய எந்தவிதமான காரணமும் இல்லை, அதனால் நான் பேட்டிங்கில் கீழே வந்து விளையாடினேன். எங்களது அணியும் அதில் மகிழ்ச்சியாகவே இருந்தது” என்று தோனி வெளிப்படுத்தியுள்ளார்.
மேலும் 2025 ஐபிஎல் தொடரில் விளையாடுவது குறித்து பேசியிருக்கும் தோனி, “அடுத்த சில காலத்திற்கு கிரிக்கெட்டை அனுபவிக்க விரும்புகிறேன்” என்ற பதிலை கூறியுள்ளார். இதனால் 2025 ஐபிஎல் தொடரில் விளையாடுவார் என்றே எதிர்ப்பார்க்கப்படுகிறது.