முன்னாள் இந்திய கேப்டனான எம் எஸ் தோனி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றிருந்தாலும், சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இல்லாமல் இருந்தாலும் கூட இன்னும் அவரை பற்றிய எந்த தகவல் கிடைத்தாலும் ரசிகர்கள் அதை கொண்டாடிவருகின்றனர்.
இந்நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தோனியிடம் பல கேள்விகள் கேட்கப்பட்டன. அதற்கு பதிலளித்த தோனியின் அத்தனை பதில்களும் சமூக வலைதளங்களில் அதிகமாக பேசப்பட்டு வருகின்றன.
ராகி நிகழ்வில் பங்கேற்ற தோனி வங்கதேசத்துக்கு எதிராக விளையாடிய ஒரு போட்டி குறித்த சுவாரசியான விசயத்தை பகிர்ந்துகொண்டுள்ளார். அவர் அச்சம்பவத்தை விளக்கும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பகிரப்பட்டுவருகிறது.
அந்த வீடியோவில் பேசியிருக்கும் தோனி, “நான் காரக்பூரில் ரயில்வேயில் பணிபுரிந்தபோது, என்னால் பெங்காலி மொழியை சரளமாக பேசவும் புரிந்துகொள்ளவும் முடிந்தது. இப்போது நான் பெங்காலி பேசினால் சில தவறு செய்யலாம். ஆனால் என்னால் பெங்காலியை நன்றாகவே புரிந்து கொள்ள முடியும். சுவாரஸ்யமாக ஒருமுறை வங்கதேசத்தில் ஒரு போட்டியில் விளையாடிக் கொண்டிருந்தோம், அப்போது நான் பேட்டிங் செய்துகொண்டிருந்தேன். எனக்கு பெங்காலி புரியும் என்று வங்கதேச வீரர்களுக்குத் தெரியாது.
அவர்களின் விக்கெட்கீப்பர் பந்துவீச்சாளரிடம் குறிப்பிட்ட பந்தைவீசுமாறு பெங்காலியில் பரிந்துரைத்தார், அதை புரிந்துகொண்ட எனக்கு அவர் என்ன பந்துவீசபோகிறார் என்று முன்பே தெரிந்துவிட்டது. பந்துவீசும் போது அதை சிக்சர் பவுண்டரிகளாக விரட்டிக்கொண்டிருந்தேன். போட்டி முடிந்ததும் எனது சிரிப்பை பார்த்த வங்கதேச வீரர்கள் தங்களுக்குள் பேசிக் கொண்டிருந்தனர், ”இவருக்கு பெங்காலி புரியும் போல”! என்று தோனி சிரித்தபடி விளக்கியுள்ளார். அதை ரசிகர்கள் அதிகமாக பகிர்ந்துவருகின்றனர்.
கடந்த 2023 ஐபிஎல் கோப்பையை கைப்பற்றிய பிறகு முழங்காலில் காயத்தால் அவதியுற்றாலும், ரசிகர்களுக்காக 2024 ஐபிஎல் தொடரில் பங்கேற்க விரும்புகிறேன் என தோனி கூறியிருந்தார். இந்நிலையில் அவருடைய முழங்கால் பிரச்னை குறித்த ஒவ்வொரு அப்டேட்டையும் கூர்ந்து கவனித்து வருகின்றனர் சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள்.
தன்னுடைய காயம் குறித்து பேசியிருக்கும் தோனி, "அறுவை சிகிச்சைக்கு பிறகு முழங்கால் நன்றாக இருக்கிறது. நவம்பர் மாதத்திற்குள் நீங்கள் நன்றாக இருப்பீர்கள் என்று டாக்டர் என்னிடம் கூறியுள்ளார். தினசரி வழக்கத்தில் எந்த பிரச்சனையும் தற்போது இல்லை” என தோனி தெரிவித்துள்ளார்.