இந்தியாவின் பெரிய பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கும், அவருடன் படித்தவரான தொழிலதிபரின் மகளான ராதிகா மெர்ச்சன்ட்டிற்கும் வரும் ஜூலை 12ம் தேதி திருமணம் நடைபெற உள்ளது. அதற்கு முன்னதாக இவர்களுடைய திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்ட நிகழ்வுகள் குஜராத்தின் ஜாம் நகரில் ஏற்பாடு செய்யப்பட்டு, உலகில் உள்ள பல்வேறு துறைகளை சேர்ந்த பிரபலங்கள் அழைக்கப்பட்டனர்.
இந்நிகழ்வில், “மைக்ரோசாப்ட நிறுவனர் பில்கேட்ஸ், ஃபேஸ்புக் மற்றும் மெட்டா நிறுவனத் தலைவர் மார்க் ஜூக்கர்பெர்க், டிஸ்னி நிறுவன சிஇஓ பாப் இகர்” முதலிய டிஜிட்டல் உலக பிரபலங்களும், “ஷாருக்கான், சல்மான் கான், ரன்பீர் கபூர், ஆலியா பட், தீபிகா படுகோன், ரன்வீர் சிங், ராணி முகர்ஜி, ராம் சரண், அட்லீ” முதலிய திரைப்பிரபலங்களும், சச்சின் டெண்டுல்கர், ரோகித் சர்மா, தோனி, பிராவோ, ஹர்திக் பாண்ட்யா, கே.எல்.ராகுல், கிரன் பொல்லார்டு, டிரெண்ட் போல்ட், ரஷித் கான், நிக்கோலஸ் பூரன், இஷான் கிஷன்” முதலிய கிரிக்கெட் வீரர்களும் பங்கேற்று சிறப்பித்தனர்.
இந்நிலையில், விழாவில் பாலிவுட் திரைப்பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்களுடன் சந்திப்பை நிகழ்த்திய முன்னாள் இந்திய கேப்டன் மகேந்திர சிங் தோனி, தனது மனைவி மற்றும் முன்னாள் சிஎஸ்கே வீரர் டுவெய்ன் பிராவோ உடன் தாண்டியா நடனமாடும் வீடியொ சமூக வலைதளங்களில் வைரலானது.
ஒரு வீடியோவில் மகேந்திர சிங் தோனிக்கு, முகேஷ் அம்பானியின் மகனான ஆகாஷ் அம்பானி குஜராத்தின் பாரம்பரிய நடனமான தாண்டியாவின் டான்ஸ் ஸ்டெப்களை கற்றுக்கொடுத்தார். அதனை கற்றுக்கொள்ள எம் எஸ் தோனி சிறிது நேரம் எடுத்துக்கொண்டார்.
அதற்கு பிறகு முன்னாள் சிஎஸ்கே வீரர் டுவெய்ன் பிராவோவுடன் இணைந்த எம்எஸ் தோனி, நண்பருடன் இணைந்து தாண்டியா நடனமாடினார். தோனி மற்றும் பிராவோ இருவரும் ஆடியவுடன், தோனியின் மனைவியான ஷாக்சியும் நடனத்தில் இணைந்துகொண்டார். இந்த அழகான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
2024 ஐபிஎல் தொடரில் தன்னுடைய கடைசி பதிப்பில் தோனி விளையாடுவார் என எதிர்ப்பார்த்த நிலையில், தோனியின் பால்ய நண்பர் பரம்ஜித் சிங் இன்னும் ஒன்று அல்லது இரண்டு சீசன்களிலாவது தோனி விளையாடுவார், இந்த ஐபிஎல் தொடர் நிச்சயம் கடைசி ஐபிஎல் தொடராக இருக்காது என்று தெரிவித்துள்ளார்.