2024 ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் துபாயில் உள்ள கோகோ கோலா அரங்கத்தில் நேற்று நடைபெற்றது. மதியம் 1.30 மணிக்கு தொடங்கிய வீரர்கள் ஏலத்தில் 333 வீரர்கள் பங்கேற்றனர். தொடக்கம் முதலே அதிரடி ஏலத்தில் மிரட்சியை ஏற்படுத்திய மினி ஏலம், எப்போதும் இல்லாத வகையில் அதிக விலைக்கு சென்ற வீரர்களை கண்டுள்ளது. பல இளம் இந்திய வீரர்கள் நல்ல விலைக்கு சென்றனர்.
ஆஸ்திரேலிய அணியின் மிட்செல் ஸ்டார்க்கை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 24.75 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. ஐபிஎல் வரலாற்றிலேயே இது உச்சம். கேகேஆர் அணிக்கு சென்றது குறித்து மிட்செல் ஸ்டார்க் கூறுகையில், “உலகின் தலைசிறந்த டி20 தொடருக்கு திரும்பியது மகிழ்ச்சியளிக்கிறது. ஷ்ரேயாஸ் ஐயரின் கேப்டன்சியின் கீழ் விளையாடுவதற்கும், அவரது சிந்தனை செயல்முறையைப் புரிந்து கொள்வதற்கும் நான் மிகவும் ஆவலாக காத்திருக்கிறேன்.
நான் கடந்த சில வருடங்களாக ஏற்றம் இறக்கம் என இரண்டையும் கண்டுள்ளேன். ஆனால் என்னுடைய அனுபவம் ஐபிஎல்லில் சிறப்பாக செயல்பட உதவும் என நினைக்கிறேன். உலகத்தரம் வாய்ந்த வீரர்களுடன் விளையாடுவது எப்போதும் போட்டி நிறைந்ததாக இருக்கும். கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியில் இணைந்து விளையாடுவதற்கும், ஈடன் கார்டன் மைதானத்தில் ரசிகர்களின் ஆதரவை பெறும் தருணத்திற்காகவும் காத்திருக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸ் ஹைதராபாத் அணியால் ரூ.20.5 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளார். ஷிவம் மாவி ரூ. 6.40 கோடிக்கு லக்னோ அணியாலும், ஷாருக்கான் ரூ.7.40 கோடிக்கும், உமேஷ் யாதவ் ரூ.5.8 கோடிக்கும் குஜராத் அணியால் வாங்கப்பட்டுள்ளனர்.
ஹர்ஷல் படேல் ரூ.11.75 கோடிக்கும் ரூசோ ரூ. 8 கோடிக்கும் க்றிஸ் வோக்ஸ் ரூ.4.2 கோடிக்கும் பஞ்சாப் அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளனர். யஷ் தயாள் 5 கோடிக்கும், அல்சாரி ஜோசப் ரூ.11.50 கோடிக்கும் டாம் கர்ரண் ரூ.1.50 கோடிக்கும் பெங்களூர் அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளனர்.
அதேவேளையில் பல முன்னணி வீரர்களை ஏலத்தில் யாரும் எடுக்காத நிலையும் இருந்துள்ளது. ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித், ஹேசில்வுட் போன்றோரை யாரும் ஏலத்தில் எடுக்கவில்லை. இந்தியாவின் கருண் நாயர், மணன் வோஹ்ரா, சர்பராஷ் கான், விஷ்னு சோலான்கி, முருகன் அஷ்வின், கே.எம்.ஆசிஃப் போன்ற வீரர்களும் ஏலத்தில் எடுக்கப்படவில்லை.
இதைத் தாண்டி இலங்கையின் குசால் மெண்டீஸ், இங்கிலாந்தின் பிலிப் சால்ட், நியூசிலாந்து அணியின் கூலின் முன்ரோ, ஃபின் ஆலன், ப்ரேஸ்வெல், ஜேம்ஸ் நீசம், கெயில் ஜேமிசன் போன்றோரும் ஏலத்தில் எடுக்கப்படவில்லை.
சென்னை அணியைப் பொருத்தவரை, 6 வீரர்கள் ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளனர். டேரில் மிட்செல் 14 கோடிக்கும், சமீர் ரிஸ்வி 8.4 கோடிக்கும், ஷர்துல் தாக்கூர் 4 கோடிக்கும், நியூசிலாந்தின் ரச்சின் ரவீந்திரா 1.8 கோடிக்கும், முஷ்தபிஷர் ரஹ்மான் ரூ.2 கோடிக்கும், அவனிஷ் ராவ் ரூ.20 லட்சத்திற்கும் ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளனர்.