உலகக்கோப்பை கிரிக்கெட்டில் மும்பையில் நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் முகமது ஷமி அனல் பறக்க பந்துவீசி 7 விக்கெட்டுகளை எடுத்ததன் மூலம் நியூசிலாந்தை இந்தியா வீழ்த்த பேருதவி புரிந்தார்.
இந்நிலையில் டெல்லி காவல் துறை எக்ஸ் சமூகதள பக்கத்தில் நகைச்சுவையாக பதிவு ஒன்றை இட்டுள்ளது. ’மும்பையில் தாக்குதல் நடத்திய முகமது ஷமி மீது அந்நகர காவல்துறை வழக்குப் பதியாது’ என நம்புவதாக அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஷமியின் ஆக்ரோஷமான பந்துவீச்சில் 7 நியூசிலாந்து பேட்டர்கள் வீழ்ந்ததைத்தான் டெல்லி காவல்துறை இவ்வாறு மறைமுகமாக குறிப்பிட்டிருந்தது.
இதையும் படிக்க: நடிகை விஜயசாந்தி பாஜகவில் இருந்து விலகல்... இதுதான் காரணமா?
இதற்கு மும்பை காவல்துறை தரப்பில் உடனடியாக மற்றொரு பதிவு இடப்பட்டது. ’இதில் ஏராளமான இதயங்களை திருடிய குற்றச்சாட்டும் ஷமி மீது உள்ளதாகவும், அதைக் குறிப்பிட நீங்கள் தவறிவிட்டீர்கள்’ என்றும் டெல்லி காவல்துறையை மும்பை காவல்துறை நகைச்சுவையாக குறிப்பிட்டுள்ளது. ’இதில் இதயத்திருட்டில் மேலும் சிலரும் சம்பந்தப்பட்டுள்ளதாகவும் அதுவும் குறிப்பிடப்படவில்லை’ என்றும் மும்பை காவல்துறை தன் பதிவில் கூறியுள்ளது.
விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், ஷுப்மன் கில் போன்றோரை குறிப்பிடும் வகையில் இவ்வரிகள் உள்ளன. கீழே முன்னெச்சரிக்கையாக இன்னொரு வரியும் அப்பதிவில் கூறப்பட்டுள்ளது. ‘இரு நகர காவல்துறையினரும் சட்டங்களை நன்கு அறிவார்கள் என்றும் மக்கள் இப்பதிவுகளை நகைச்சுவையாக எடுத்துக்கொள்வார்கள்’ என நம்புவதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.