2024 ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் ஏலம் வரும் டிசம்பர் 19ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. இந்நிலையில் ஒரு பெரிய ஏலத்திற்கு முன்னதாக ஒவ்வொரு ஐபிஎல் அணிகளும் அவர்களுடைய தக்கவைக்கும் மற்றும் வெளியேற்றும் வீரர்களின் பெயர்களை வெளியிட்டுள்ளன. அந்தவகையில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்ட ஹர்திக் பாண்டியா, மீண்டும் தன்னுடைய பழைய அணியான மும்பை இந்தியன்ஸ் அணிக்கே திரும்பியுள்ளார்.
ஒரு பெரிய மாற்றத்திற்கு தயாராகும் குஜராத் டைட்டன்ஸ் அணி அடுத்த கேப்டனாக யாரை நியமிக்கும் என்ற எதிர்ப்பார்ப்பு அதிகமாகவே இருந்தது. கேன் வில்லியம்சன் காயத்திலிருந்து திரும்பி வந்திருக்கும் நிலையில், அவரைதான் அடுத்த கேப்டனாக நிர்ணயிப்பார்கள் என்ற எண்ணம் எல்லோருக்கும் இருந்தது. ஆனால் மாற்றி யோசித்திருக்கும் டைட்டன்ஸ் அணி, கேப்டன்சி பொறுப்பை இளம்வீரரான சுப்மன் கில்லிடம் ஒப்படைத்துள்ளது.
கில்லின் கேப்டன்சி குறித்து பேசியிருக்கும் டி வில்லியர்ஸ், “கேன் வில்லியம்சனின் பெயர் தக்கவைக்கப்பட்ட வீரராகப் பார்த்த நிமிடமே, குஜராத் அணியின் கேப்டன் பொறுப்பை அவருக்குத்தான் வழங்குவார்கள் என்று நினைத்தேன். ஒரு அனுபவமிக்க வீரரை உங்களுடைய கேப்டனாக மாற்றும் அருமையான வாய்ப்பு இருந்தது. நீங்கள் வில்லியம்சனிடம்தான் கொடுத்திருக்க வேண்டும், ஆனால் சுப்மன் கில்லுக்கு சென்றுள்ளீர்கள். நான் அதை தவறென்று சொல்லவில்லை, மாறாக கில், வில்லியம்சன் போன்ற ஒரு அனுபவமிக்க கேப்டனுக்கு கீழ் நிறைய கற்றுக்கொள்ள முடிந்திருக்கும். பின்னர் அவர் 2025-ல் கேப்டனாக செயல்பட்டிருக்கலாம்” என்று டிவில்லியர்ஸ் தன்னுடைய யு-டியூப் பக்கத்தில் பேசியுள்ளார்.
மேலும் கில்லின் சர்வதேச பேட்டிங் குறித்து பேசியிருக்கும் வில்லியர்ஸ், “கில்லுக்கு அனைத்து ஃபார்மேட்களிலும் உறுதியளிக்கும் வாய்ப்புகளை முதலில் கொடுங்கள். இந்திய கிரிக்கெட்டிலும், ஐபிஎல் தொடரிலும் அவருக்கு நல்ல எதிர்காலம் இருக்கவேண்டும்” என்று கவலையை தெரிவித்துள்ளார். மேலும், “எப்படி இருப்பினும் கில்லின் கேப்டன்சியை பார்க்க ஆவலாக இருக்கிறேன். பேட்டிங்கையும் கேப்டன்சியையும் எப்படி கையாளப்போகிறார் என்ற எதிர்ப்பார்ப்பு இருக்கிறது” என்று வாழ்த்தையும் தெரிவித்துள்ளார்.