யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரிங்கு சிங், திலக் வர்மா போன்ற வீரர்களுக்கு முன்னதாகவே இந்திய அணி ஒரு வீரரை அணிக்குள் எடுத்துவர நினைத்தது என்றால் அது ரஜத் பட்டிதார் மட்டும் தான். காலங்காலமாக இந்திய அணி தேடிவரும் ஒரு மிடில் ஆர்டர் வரிசைக்கு தகுதியான வீரராக பார்க்கப்படுவர் தான் பட்டிதார். கடந்த 2022ஆம் ஆண்டு ஐபிஎல்லின் பாதி தொடரில் ஆர்சிபி அணிக்குள் வந்த ரஜத் பட்டிதார், RCB அணியின் முக்கியமான எதிர்கால வீரராகவே மாறினார். 2022 ஐபிஎல் தொடரில் RCB அணிக்காக விளையாடிய பட்டிதார் 8 போட்டிகளில் விளையாடி 2 அரைசதங்களுடன் 333 ரன்கள் குவித்தார்.
2022 ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணி முதலில் ராஜத் பட்டிதாரை வாங்கவே இல்லை. ஆர்சிபி அணியின் ஒரு வீரர் காயம்காரணமாக வெளியேறவே, ரஜத் பட்டிதாரை மாற்றுவீரராக அணிக்குள் எடுத்துவந்தது. முக்கியமான போட்டியில் சிக்சர் பவுண்டரிகளாக பறக்கவிட்ட பட்டிதார், ஆர்சிபி அணியை வெற்றிக்கு அழைத்துச்சென்றபோது தான், ”இந்த பிளேயரை இவ்வளவு நாளா எங்கப்பா வச்சிருந்திங்க?” என எல்லோரையும் திருப்பி பார்க்க வைத்தார். ஒரு மாற்று வீரராக உள்ளே வந்த ஒரு வீரர் 2 அரைசதங்கள் அடித்து, 300 ரன்களை குவிப்பதெல்லாம் அதுதான் முதல்முறை.
இந்நிலையில் தான் காலில் ஏற்பட்ட காயம் காரணமாக கடந்த 2023 ஐபிஎல் தொடரில் விளையாடாத போதும், ஆர்சிபி அணி ரஜத் பட்டிதாரை தக்கவைத்துள்ளது. அறுவை சிகிச்சை முடிந்துவந்திருக்கும் ரஜத் பட்டிதார், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரிலும் இடம்பிடித்துள்ளார். தற்போது விஜய் ஹசாரே தொடரில் மத்திய பிரதேச அணிக்காக விளையாடிவரும் பட்டிதார், கடந்த பத்து போட்டிகளில் 73, 77, 31, 70, 64, 68, 50, 47 என சிறப்பான ஃபார்மில் விளையாடிவருகிறார். இந்நிலையில் ரஜத் பட்டிதார் பற்றி பேசியிருக்கும் ஏபிடி வில்லியர்ஸ், அவரின் பலம் மற்றும் பலவீனம் குறித்து பேசியுள்ளார்.
பட்டிதார் குறித்து வீடியோவில் பேசியிருக்கும் டி வில்லியர்ஸ், “ரஜத் பட்டிதார் ஒரு அற்புதமான வீரர். RCB-ல் சில சீசன்கள் அவருடன் சேர்ந்து விளையாடியிருக்கிறேன். அப்போது அவர் மிகவும் இளமையான வீரராக இருந்தார். ஆனால் தற்போது மிகவும் அனுபவம் வாய்ந்த வீரராக மாறியிருக்கிறார். சிறந்த வீரரான அவரிடம், சரியான பேட்டிங் அணுகுமுறை, எப்படி ஆட்டத்தை எடுத்துச்செல்வது என்ற போட்டி நுட்பம் மற்றும் ஆளுமை என அனைத்துமே இருக்கிறது. தற்போது அவருக்கு எல்லாமே சரியாக போய்க்கொண்டிருக்கிறது" என்று டி வில்லியர்ஸ் தனது X வீடியோ பதிவில் கூறியுள்ளார்.
மேலும் அவரிடம் இருக்கும் ஒரு விசயத்தை மட்டும் சரிசெய்துவிட்டால் போதும் என்று கூறியிருக்கும் டிவில்லியர்ஸ், "நான் அவரிடம் ஒரு விஷயத்தைச் சொல்ல விரும்பினால், அவர் கொஞ்சம் தைரியமாகவும், சண்டை மனப்பான்மையோடும் களத்தில் இருக்க வேண்டும் என நினைக்கிறேன். ஏனென்றால் அவர் மிகவும் அன்பானவர், சில சமயங்களில் மிகவும் நல்லவர். இது அவருடைய வீழ்ச்சிக்கு காரணமாக அமைந்துவிடலாம் என்று தோன்றுகிறது. எப்படியிருந்தாலும் அவருடைய பேட்டிங்கை பார்க்க நான் ஆவலுடன் இருக்கிறேன். அவருக்கு பிரகாசமான ஒரு எதிர்காலம் இருக்கப்போகிறது. உள்நாட்டு கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடிவரும் அவருக்கு இந்திய அணியில் இடம் கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது” என்று டி வில்லியர்ஸ் கூறியுள்ளார்.