ரோகித்தோ கோலியோ இல்லை.. இந்தியா டெஸ்ட் தொடரை வெல்ல வேண்டுமானால் அவர்களால்தான் முடியும்!- ஏபிடி

இதுவரை வந்த இந்திய அணியில் அவர்களை போன்ற வீரர்கள் இடம்பெற்றிருக்கவில்லை, இந்தமுறை தென்னாப்பிரிக்காவில் டெஸ்ட் தொடரை வெல்ல இந்திய அணிக்கு பிரகாசமான வாய்ப்பு இருக்கிறது - டிவில்லியர்ஸ்
ஏபிடி வில்லியர்ஸ்
ஏபிடி வில்லியர்ஸ்X
Published on

தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய அணி, 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 1-1 என சமன்செய்த நிலையில், ஒருநாள் தொடரை 2-1 என கைப்பற்றி அசத்தியுள்ளது. தென்னாப்பிரிக்கா அணியை அவர்கள் சொந்த மண்ணிலேயே வைத்து இரண்டாவது முறையாக இந்திய அணி ஒருநாள் தொடரை வென்றுள்ளது. இந்த சாதனையை படைத்த ஒரே ஆசிய அணி என்ற பெருமையையும் இந்திய அணி பெற்றுள்ளது.

இந்நிலையில் இந்திய அணியின் அடுத்த இலக்காக 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் மாறியுள்ளது. கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை 8 முறை தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, ஒருமுறை கூட தென்னாப்பிரிக்கா மண்ணில் டெஸ்ட் தொடரை வென்றதேயில்லை.

கடந்தமுறை வந்த கோலி தலைமையிலான அணி ஒருநாள் தொடரை வென்றாலும் 2-1 என டெஸ்ட் தொடரை இழந்தது. தற்போது ரோகித் சர்மா தலைமையில் ஒரு வலுவான அணி களமிறங்கியுள்ள நிலையில், முதல்முறையாக தென்னாப்பிரிக்கா மண்ணில் இந்திய அணி தங்களுடைய கொடியை நாட்டுமா என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் ஒருநாள் உலகக்கோப்பை தோல்விக்கு பிறகு ரோகித், கோலி, பும்ரா முதலிய ஸ்டார் வீரர்கள் பங்கேற்பதால் ரசிகர்கள் அதிக நம்பிக்கையோடு காத்திருக்கின்றனர்.

india team
india team

இந்த நிலையில்தான் இந்திய அணியால் இந்தமுறை தென்னாப்பிரிக்க மண்ணில் டெஸ்ட் தொடரை வெல்ல முடியும் எனத் தெரிவித்துள்ளார், முன்னாள் தென்னாப்பிரிக்க வீரர் ஏபி டி வில்லியர்ஸ்.

இந்திய அணி முதல்முறையாக தொடரை வெல்ல நல்ல வாய்ப்பு!

இதற்குமுன்பும் இந்திய அணி தென்னாப்பிரிக்காவிற்கு வந்திருக்கிறது, ஆனால் அப்போதெல்லாம் சிறந்த லைனை வீசும் பவுலர்களை எடுத்துக்கொண்டால் ஒருவர் மட்டுமே இந்திய அணியில் இடம்பெற்றிருந்தார். ஆனால் இந்தமுறை 2 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். அவர்களால்தான் இந்திய அணியின் முதல் டெஸ்ட் தொடர் வெற்றி சாத்தியமாகப் போகிறது எனத் டிவில்லியர்ஸ் கூறியுள்ளார்.

ab de villiers
ab de villiers

இதுகுறித்து பேசியிருக்கும் டிவில்லியர்ஸ், “இந்திய அணி தென்னாப்பிரிக்காவை அதன் சொந்த மண்ணிலேயே வைத்து வீழ்த்துவதற்கான சிறந்த வாய்ப்புடன் வந்துள்ளது. முதன்முறையாக அவர்கள் சிறந்த லைன்களை வீசக்கூடிய வேகப்பந்து வீச்சாளர்களைப் பெற்றுள்ளனர்.

இதற்கு முன்பும் இந்திய அணி சுற்றுப்பயணம் செய்துள்ளது, ஆனால் அந்த அணியில் எல்லாம் ஒருசில வேகப்பந்துவீச்சாளர்களே சிறந்த லைனை வீசக்கூடிய பவுலராக இருந்தனர். ஆனால் தற்போது இந்திய அணியில் பும்ரா, சிராஜ் என இரண்டு சிறந்த லைன் பவுலர்கள் இடம்பெற்றுள்ளனர். ஷமி இல்லையென்றால் கூட அவர்கள் சிறந்த பந்துவீச்சு யூனிட்டை பெற்றிருக்கின்றனர். இந்திய அணி தொடரை வெல்வதற்கு சிறந்த வாய்ப்பு இருக்கிறது” என்று வில்லியர்ஸ் கூறியதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா மேற்கோள் காட்டியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com