ஐபிஎல் தொடரானது எப்போதும் பல வீரர்களின் எதிர்காலத்தை தலைகீழாக மாற்றியுள்ளது. பல இந்திய வீரர்கள் உட்பட, பல வெளிநாட்டு வீரர்களும் அவர்களுடைய கடினமான குடும்ப சூழலில் இருந்து மேலே வருவதற்கான சூழலை ஐபிஎல் தொடர் இதுவரை ஏற்படுத்தி தந்துள்ளது. என்ன தான் பல விமர்சனங்கள் ஐபிஎல் தொடர் மீது இந்திய ரசிகர்கள் வைத்தாலும், பல எளிமையான குடும்பத்திலிருந்தும், கஷ்டப்படும் குடும்பத்திலிருந்தும் வந்த பல வீரர்களை ஐபிஎல் வாழ வைத்துள்ளது என்றால் அதை யாராலும் மறுக்கமுடியாது.
அப்படி தான் தன்னுடைய குடும்ப சூழல் குறித்தும், ஐபிஎல்லில் வாங்கப்பட்டது குறித்தும் உருக்கமாக பேசியுள்ளார் சிஎஸ்கே அணியால் 14 கோடிக்கு விலைக்கு வாங்கப்பட்ட டேரில் மிட்செல். அவர் கடந்த 2023 ஐபிஎல் ஏலத்தில் எந்த அணியாலும் வாங்கப்படாமல் போனார். எந்த அணி வீரராலும் வாங்கமுடியாத போன அவரை தான், இந்த முறை பல நட்சத்திர ஐபிஎல் அணிகள் போட்டிப்போட்டுக்கொண்டு விலைக்கு வாங்க முயன்றனர்.
சிஎஸ்கே அணியால் 14 கோடிக்கு விலைக்கு போன பிறகு பேசியிருக்கும் டேரில் மிட்செல், தன்னுடைய 2 மகள்களும் அவர்களுக்கு பிடித்த வாழ்க்கையை வாழ்வார்கள். எங்களுக்கு இது தூக்கமில்லாத மகிழ்ச்சியான இரவு என்று கூறியுள்ளார்.
நடந்து முடிந்த 2023 ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்த நியூசிலாந்து வீரர் டேரில் மிட்செல், 14 கோடி ஐபிஎல் ஏலத்தொகையை தட்டிச்சென்றார். 2022ஆம் ஆண்டு ஐபிஎல் ஏலத்தில் ராஜஸ்தான் அணியால் 75 லட்சத்திற்கு வாங்கப்பட்ட மிட்செல், 2 போட்டிகளில் மட்டுமே இடம்பிடித்து பின்னர் வெளியேற்றப்பட்டார். பின்னர் 2023 ஐபில் ஏலத்தின் போது அவரை எந்த அணியும் விலைக்கு வாங்கவில்லை. இந்நிலையில் தான் 2024 ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்கு சிஎஸ்கே அணியால் 14 கோடிக்கு விலைக்கு வாங்கப்பட்டுள்ளார் டேரில் மிட்செல்.
1000 கிமீ தாண்டியிருந்தாலும் ஐபிஎல் ஏலத்தின் போது இதயம் படப்படத்ததாக கூறியிருக்கும் அவர், “இது ஒரு குடும்பமாக எங்களுக்கு மிகவும் சிறப்பு வாய்ந்த இரவு என்று தான் சொல்லவேண்டும். என் மனைவியுடன் இங்கே அமர்ந்து முழு ஏலத்தையும் நான் பார்த்துக்கொண்டிருந்தேன். என் பெயர் ஐபிஎல் ஏலத்தில் வருவதைப் பார்ப்பதும், கடைசிவரை படப்படப்பான இதயத்துடன் அந்த முழு அனுபவத்தையும் கடந்து செல்வதும் நிச்சயமாக என் வாழ்நாள் முழுவதும் எங்களுடன் ஒட்டிக்கொண்டிருக்கும் ஒரு உணர்வு. கடந்த ஐபிஎல் ஏலத்தில் எடுக்கப்படாமல் போன பிறகு, இந்த முறை அந்த அனுபவத்தை அனுபவிப்பது மிகவும் சிறப்பானது" என்று பேசியுள்ளார்.
மேலும் இந்த ஐபிஎல் தொகை எப்படி அவருடைய வாழ்க்கைய மாற்றப்போகிறது என்று பேசியிருக்கும் அவர், “நான் ஏலத்தில் எடுக்கப்பட்ட அன்று என் பெரிய மகளின் 5வது பிறந்த நாள். எவ்வளவு பெரிய தொகைக்கு நான் ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளேன் என்பது என் மகளுக்கு புரிய வாய்ப்பில்லை. ஆனால் இந்த தொகை என் குடும்பத்திற்கு மிகவும் உதவியாக இருக்கும். எனது 2 மகள்களும் அவர்களுக்கு பிடித்த வாழ்க்கையை வாழ்வார்கள். எனக்கு அது போதும், அதுமட்டும் போதும். நாம் செய்வது அனைத்தும் நம் மகள்களுக்குத்தானே” என எமோசனலாக பேசியுள்ளார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் டேரில் மிட்செல்லை மஞ்சள் ஆடையில் பார்ப்பதற்கு நிச்சயம் ஆர்வமாக இருக்கப்போகிறார்கள். வாழ்த்துக்கள் டேரில் மிட்செல்!