எதிர்வரும் 2024 டி20 உலகக்கோப்பையில் விளையாடும் வகையில், இந்திய வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா 2024 ஐபிஎல் தொடரில் மும்பை அணியில் விளையாடக்கூடாது என முன்னாள் பாகிஸ்தான் சுழற்பந்துவீச்சாளர் டேனிஸ் கனேரியா கூறியுள்ளார்.
கடந்த 2022 டி20 உலகக்கோப்பையின்போது முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக ஜஸ்பிரித் பும்ரா உலகக்கோப்பை தொடரை தவறவிட்டார். அவர் இல்லாமல் அரையிறுதிவரை சென்ற இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிராக ஒருவிக்கெட்டை கூட வீழ்த்தமுடியாமல், 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்து வெளியேறியது.
இந்நிலையில்தான் உலகக்கோப்பையை வெல்லாமல் இருந்துவரும் இந்திய அணி, 2024 டி20 உலகக்கோப்பையை வெல்லும் வகையில் பும்ராவை தற்காப்பது முக்கியம் என டேனிஸ் கனேரியா கூறியுள்ளார்.
தன்னுடைய யூ-டியூப் பக்கத்தில் பேசியிருக்கும் டேனிஸ் கனேரியா, “ஜஸ்பிரித் பும்ராவை காயத்திலிருந்து பாதுகாப்பது இந்திய அணியின் நீண்ட கால கிரிக்கெட் வாழ்க்கைக்கு முக்கியமானது. அதனால் டி20 உலகக்கோப்பைக்கு முக்கியத்துவம் கொடுத்து, மும்பை இந்தியன்ஸ் அணி பும்ராவை அணியில் விளையாடக்கூடாது அல்லது குறைவான போட்டிகளில் விளையாட வைக்கவேண்டும். ஒருவேளை அவர், ஐபிஎல் தொடரில் அதிக போட்டிகளில் விளையாடி காயம் ஏற்பட்டால் அது இந்திய அணிக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். அதனால் ஜஸ்பிரித் பும்ரா மும்பை அணியில் விளையாடக்கூடாது” என தெரிவித்துள்ளார்.
மேலும் பும்ராவை பாராட்டி பேசியிருக்கும் அவர், “தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான கேப்டவுன் டெஸ்ட் போட்டியில் பும்ரா அபாரமாக செயல்பட்டார். பல்வேறு வடிவங்களில் தரமான நிலைத்தன்மையை வெளிப்படுத்திவருகிறார். இந்தத் தலைமுறையின் மிகச்சிறந்த பந்துவீச்சாளர்களில் ஒருவராகக் இருக்கும் அவர், இந்தியா அணியின் மதிப்புமிக்க சொத்து மற்றும் வரவிருக்கும் தலைமுறை வீரர்களுக்கு வழிகாட்டியானவர்” என புகழ்ந்துள்ளார்.