2024 ஐபிஎல் தொடரின் நாக்அவுட் சுற்றுக்கு தகுதிபெற வேண்டிய முக்கியமான போட்டியில் ஆர்சிபி மற்றும் சிஎஸ்கே அணிகள் பலப்பரீட்சை நடத்தின. கடந்த மே 18-ம் தேதியன்று பெங்களூருவில் உள்ள எம்.சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்த கடைசி லீக் போட்டியில், ஆர்சிபி அணிக்கு எதிராக 27 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்து நாக் அவுட் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை இழந்தது ருதுராஜ் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.
கடைசி ஓவரில் 17 ரன்கள் தேவைப்பட்டபோது முதல் பந்தை சிக்சருக்கு அனுப்பிய தோனி அடுத்த பந்தில் அவுட்டாகி வெளியேறினார். அதற்குபிறகு சென்னை அணியால் போட்டியை வெற்றிக்கு அழைத்துச்செல்ல முடியவில்லை. அந்த வெற்றியை கோப்பையை வென்றதுபோல ஆர்சிபி அணி கொண்டாடியது.
அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லமுடியாத விரக்தியில் டென்சனாக அமர்ந்திருந்த தோனி, ஆர்சிபி வீரர்களுடன் கைக்குலுக்காமலேயே பெவிலியன் திரும்பினார். அந்த நிகழ்வு சர்ச்சையாக பேசப்பட்ட நிலையில், போட்டி நடந்து 4 மாதங்கள் கழித்து அந்த போட்டியின் தோல்வியின்போது தோனி டிவியை உடைத்தார் என்ற தகவல் தற்போது வெளியாகி வைரலானது.
இந்நிலையில் அந்த தகவலை சிஎஸ்கே அணியின் பிசியோவான டாமி சிம்செக் மறுத்து கருத்திட்டுள்ளார்.
வைரலாக பரவிய அந்த வீடியோவில் ஸ்போர்ட்ஸ் யாரிடம் பேசும் ஒரு பத்திரிக்கையாளர், “எனக்கு ஒரு பிரத்யேக ஸ்கூப் பற்றித் தெரிய வந்தது. நான் பஜ்ஜி [ஹர்பஜன்] பாஜியிடம் தோனி ஏன் ஆர்சிபி வீரர்களுடன் கைகுலுக்கவில்லை என்று கேட்டேன். அதற்கு அவர் கை மட்டும் குலுக்காமல் செல்லவில்லை, கோபத்தில் ஒரு டிவியையும் உடைத்தார் என்று கூறினார். அவர் கையிலிருந்த போட்டியை தவறவிட்டதற்காக மிகவும் கோபமாக இருந்தார்” என்று கூறியதாக தெரிவித்திருந்தார்.
இது ரசிகர்களிடையே வைரலாக பேசப்பட்ட நிலையில், சிஎஸ்கே அணியின் பிசியோதெரபிஸ்ட் டாமி சிம்செக் அதனை மறுத்துள்ளார். இன்ஸ்டாகிராமில் Cricandid என்ற பக்கத்தில் ஹர்பஜன் சிங் மூலம் தோனி டிவியை உடைத்ததாக செய்தி வெளியாகியுள்ளது என்று போஸ்ட் செய்யப்பட்ட பதிவில், “இது முழுமையான குப்பை செய்தி, தோனி எதையும் உடைக்கவில்லை & எந்த போட்டிக்குப் பிறகும் அவரை ஆக்ரோஷமாக நான் பார்த்ததில்லை. இது போலிச் செய்தி” என்று கருத்திட்டுள்ளார்.
தற்போது ரசிகர்கள் அவருடைய கருத்தை வைரலாக்கி வருகின்றனர்.