2024 ரஞ்சிக்கோப்பை தொடர் பரபரப்பான இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. ஜனவரி 5ம் தேதி தொடங்கிய 89வது ரஞ்சி சீசன், தற்போது அரையிறுதி போட்டிகளை எட்டியுள்ளது. கோப்பைக்காக 38 அணிகள் மோதிய நிலையில், சிறப்பாக செயல்பட்ட தமிழ்நாடு, மும்பை, விதர்பா, மத்திய பிரதேசம்” முதலிய 4 அணிகள் அரைறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றுள்ளன.
7 ஆண்டுகளாக அரையிறுதிச் சுற்றுக்கு கூட தகுதிபெறாத தமிழ்நாடு அணியை கேப்டன் சாய் கிஷோர் அரையிறுதிச் சுற்றுக்கு அழைத்துச்சென்றுள்ளார். அதேநேரத்தில் 2016ம் ஆண்டுக்கு பிறகு கோப்பையே வெல்லாத மும்பை அணி, 7 ஆண்டுகளுக்கு பிறகு கோப்பை வெல்லும் முனைப்பில் களமிறங்கியுள்ளது. முதல் அரையிறுதிப்போட்டியில் விதர்பா மற்றும் மத்திய பிரதேச அணிகள் மோதும் நிலையில், இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் மும்பை மற்றும் தமிழ்நாடு அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.
தமிழ்நாடு மற்றும் மும்பை இரண்டு அணிகளுக்கு இடையேயான 2024 ரஞ்சிக்கோப்பை அரையிறுதிப் போட்டியானது மும்பையில் உள்ள ஷரத் பவார் கிரிக்கெட் அகாடமி BKC மைதானத்தில் தொடங்கியது. டாஸ் வென்ற தமிழ்நாடு அணி கேப்டன் சாய்கிஷோர் முதலில் பேட்டிங்கை தேர்வுசெய்தார்.
முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய தமிழ்நாடு ஏன் பேட்டிங்கை தேர்வுசெய்தோம் என்று நினைத்து வருத்தப்படும் அளவு ஒரு மோசமான தொடக்கத்தை பெற்றது. புதிய பந்தின் ஸ்விங்கிங் தன்மையை சரியாக பயன்படுத்திக்கொண்ட மும்பை பவுலர்கள் ஷர்துல் தாக்கூர், மோஹித் அவஸ்தி மற்றும் துஷார் தேஸ்பாண்டே மூன்று பேரும் விக்கெட் வேட்டை நடத்தினர். தொடக்க வீரர் சாய்சுதர்சனை LBW மூலம் 0 ரன்னில் ஷர்துல் தாக்கூர் வெளியேற்ற, ஜகதீசனை 4 ரன்னில் அவஸ்தி வெளியேற்றினார்.
10 ரன்களுக்கே அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகளை இழந்த தமிழ்நாடு அணியில், 3வது விக்கெட்டுக்கு கேப்டன் சாய் கிஷோர் களமிறங்கினார். ஆனால் நல்ல ஃபார்மில் இருந்துவரும் துஷார் தேஷ்பாண்டே பிரதோஷ் பாலை 8 ரன்னில் வெளியேற்றிய அதேநேரத்தில் கேப்டன் சாய் கிஷோரை 1 ரன்னில் போல்டாக்கி அனுப்பிவைத்தார். தொடர்ந்து களத்திற்கு வந்த பாபா இந்திரஜித்தையும் துஷார் தேஸ்பாண்டே வெளியேற்ற, 42 ரன்களுக்கே 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது தமிழ்நாடு அணி.
ஒரு புறம் விக்கெட்டுகளாக விழ 6வது விக்கெட்டுக்கு கைக்கோர்த்த விஜய் சங்கர் மற்றும் வாசிங்டன் சுந்தர் இருவரும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 50 ரன்கள் பார்ட்னர்ஷிப் நோக்கி நன்றாக சென்றுகொண்டிருந்த இந்த ஜோடியை, மீண்டும் பந்துவீச வந்த ஷர்துல் தாக்கூர் விஜய் சங்கரை 44 ரன்களில் வெளியேற்றி பிரித்துவைத்தார். பெரிய விக்கெட்டை இழந்த போதும் களமிறங்கிய பந்துவீச்சாளர்களோடு 24, 25 ரன்கள் பார்ட்னர்ஷிப் போட்ட வாசிங்டன் ஓரளவு ரன்களை தேற்றினார்.
எப்படியும் அடித்துப்பிடித்து 200 ரன்களுக்கு எடுத்துவந்துவிடுவார் என நினைத்த நிலையில், வாசிங்டனை 43 ரன்னில் வெளியேற்றி முடித்துவைத்தார் கோடியன். அதற்கு பிறகு 146 ரன்களுக்கே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட்டானது தமிழ்நாடு அணி. ஐபிஎல்லில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு விளையாடும் ஷர்துல் தாக்கூர் மற்றும் தேஸ்பாண்டே இரண்டு பந்துவீச்சாளர்களும், தமிழ்நாடு அணியின் முக்கியமான டாப் ஆர்டர் வீரர்களை வெளியேற்றி ஒட்டுமொத்தமாக 5 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
தமிழ்நாடை தொடர்ந்து தங்களுடைய முதல் இன்னிங்ஸை விளையாடிவரும் மும்பை அணி 2 விக்கெட் இழப்புக்கு 40 ரன்களுடன் விளையாடிவருகிறது.